Published:Updated:

`கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்!' - கல்லூரிகளுக்கு யு.ஜி.சி அறிவுறுத்தல்

College Students
College Students ( Pixabay )

பல மாணவர்களின் பெற்றோர்கள் தற்போது கல்விக் கட்டணத்தைச் செலுத்தக்கூடிய பொருளாதார நிலையில் இல்லை.

இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவரும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் போராடி வருகின்றன. நாட்டில் நோய் பாதிப்பின் தாக்கம் ஒருபுறம் என்றால், மறுபுறம் ஊரடங்கு, மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கி இருக்கிறது. ஊரடங்கின் காரணமாக நாட்டில் நோய் தீவிரம் கொஞ்சமும் தணியாத போதிலும், மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வருகின்றன.

முன்னதாக மத்திய, மாநில அரசுகள் சில வாரங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் பேரிடர் காலத்தில் கல்விக் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கக் கூடாதென்றும், கல்விக் கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களை நிர்பந்திக்கக் கூடாதென்றும் வலியுறுத்தி இருந்தன.

Students
Students
Pixabay

ஆனால், கொஞ்சமும் கண்டுகொள்ளாத கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களைக் கல்விக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்தும்படி கட்டாயப்படுத்தி வந்தன. கல்விக்கட்டணத்தை செலுத்தச் சொல்லி பல தனியார் கல்லூரிகள், தன்னாட்சி பல்கலைக்கழக நிர்வாகங்கள் எஸ்.எம்.எஸ் மூலமும், மெயில் வழியாகவும் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்தன. ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தவும் வலியுறுத்தப்பட்டது. பல மாணவர்களின் பெற்றோர்கள் தற்போது கல்விக் கட்டணத்தைச் செலுத்தக்கூடிய பொருளாதார நிலையில் இல்லை.

நிதி நெருக்கடி மிகுந்த சூழலில் கல்வி நிறுவனங்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான பெற்றோர்கள் கல்வி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற போக்கைக் கண்டித்து (யு.ஜி.சி) பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் புகார்களாகப் பதிவு செய்தனர்.

`தினமும் 3 மணி நேரம்; மரத்தின் உச்சியில் வகுப்பு!’ -கல்லூரி மாணவனின் `சிக்னல்’ சிக்கல்

பெற்றோர்களின் புகார்களை ஆராய்ந்த யு.ஜி.சி, கல்விக் கட்டணங்கள் வசூல் செய்வது தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், "கொரோனா நோய்த் தொற்றால் நாட்டில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் பல கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களைக் கல்வி கட்டணத்தைச் செலுத்தும்படி தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருவதாக எங்களிடத்தில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் மாணவர் கணக்கெடுப்பு... ஊரடங்கில் மூடிய பள்ளிகளை நிரந்தரமாக மூடத் திட்டமா?

இத்தகைய அசாதாரண சூழலில் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பது முறையல்ல. இந்த நேரத்தில் அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு கல்விக் கட்டணம் வசூலிப்பதில் கல்வி நிறுவனங்கள் கடுமை காட்ட வேண்டாம். கூடுதல் கால அவகாசமும் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் நோய் தீவிரம் தணிந்து இயல்பு நிலை திரும்பும் வரை கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு தங்களுடைய ஆதரவை அளித்து அவர்களின் தேர்வு மற்றும் கல்விக் கட்டணங்களைக் கட்ட கால அவகாசம் வழங்க வேண்டும்" என்று யு.ஜி.சி கல்வி நிறுவனங்களை வலியுறுத்தி இருக்கிறது.

`கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்!' - கல்லூரிகளுக்கு யு.ஜி.சி அறிவுறுத்தல்

இந்தச் சுற்றறிக்கை கடிதத்தால் பல கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டண விவகாரத்தில் தங்கள் மாணவர்களுக்கு கொடுத்து வந்த அழுத்தத்தைக் குறைத்துக்கொண்டு தற்போது கூடுதல் கால அவகாசம் அளித்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு