`நீட்-டுக்கு நாங்க உதவுறோம்; எங்களுக்கு நீங்க உதவுறீங்களா?' - மதுரையிலிருந்து ஒரு கோரிக்கை
தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பயிற்சிபெற `வெல்க தமிழ்' என்ற இணையதளம் உதவிவருகிறது. இன்னும் சில உதவிகள் கிடைத்தால் இதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியும் என்கின்றனர் இதை உருவாக்கியவர்கள்.

மருத்துவப் படிப்புகளுக்குப் பொது நுழைவுத்தேர்வு... எப்போதும் தமிழகம் எதிர்த்தே வந்துகொண்டிருக்கும் விஷயம் இது. ஆனால், ஆட்சியில் இருந்த / இருக்கும் அரசுகள் எல்லாக் காலத்திலும் இந்தக் கருத்தோடு ஒத்திசைந்து இருந்ததில்லை. அதுவரைக்கும் இருந்த மருத்துவ நுழைவுத் தேர்வை 2007-ல் இருந்த தி.மு.க அரசு சிறப்புச் சட்டம் ஒன்றை நிறைவேற்றி, அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்று ரத்து செய்தது. அதன்பிறகு +2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால், 2017-ல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி `நீட்' வடிவில் மருத்துவ நுழைவுத்தேர்வு இங்கு நுழைந்தது. அன்றிலிருந்து இப்போதுவரை `நீட்' மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. வெறுமனே உயர்கல்வி சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும், தமிழகத்தில் இந்த `நீட்' ஏற்படுத்திய அரசியல் தாக்கமும், சமூக அதிர்வும் மிக அதிகம்.

இன்றளவும் இன்னும் `நீட்'டை திரும்பப் பெறவேண்டும் என்பதுதான் இங்கிருக்கும் பெரும்பாலான கட்சிகளின் ஒற்றைக் குரலாக இருக்கிறது. இதிலிருக்கும் சிக்கல்களை முன்வைத்துதான் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கூட, "நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பின், தனியார் பயிற்சி மையங்கள் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. சுமார் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழை மாணவர்கள் எப்படி இவற்றில் சேர்ந்து பயிற்சிபெற முடியும்... அவர்களின் மருத்துவக் கனவுகள் என்னாவது? ஏழை மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முந்தைய அரசுகள் கொண்டுவந்த திட்டங்களைப் புதிதாகப் பதவியேற்கும் அரசுகள் திரும்பப் பெறுவதுண்டு. அதேபோல், முந்தைய காங்கிரஸ் - தி.மு.க அரசு கொண்டுவந்த `நீட்' தேர்வை மத்திய அரசு ஏன் திரும்பப் பெறக்கூடாது?'' எனக் கேள்வி எழுப்பியது.
ஆனால், அதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இப்படி `நீட்'டை திரும்பப்பெறச்சொல்லும் குரல்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கையில், இந்த `நீட்'டால் தமிழக மாணவர்களின் கனவு பறிபோய்விடக்கூடாது; இதிலும் நம் மாணவர்களை முதன்மை பெறச்செய்யவேண்டும் என்பதற்கான முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. லட்சங்களில் பணம் வசூலிக்கும் கோச்சிங் சென்டர்கள், ஏழைகளுக்கு எட்டாக்கனியாக என்பதால் அரசே பள்ளிகளில் `நீட்'டிற்குத் தயாராவதற்கான பயிற்சி வழங்குகிறது. ஆனால், `நீட்' முடிவுகளைப் பார்க்கையில் இதுமட்டுமே போதுமானதாகத் தெரியவில்லை. இன்னும் நிறைய முன்னெடுப்புகள் நடக்கவேண்டும். அதில் ஒன்றாக புதிதாக இணைந்திருக்கிறது `வெல்க தமிழ்'.
`நீட்' தேர்வுக்காக மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான ஓர் இலவச இணையதளம்தான் இது. இப்போதைக்கு `நீட்' தேர்வில் இடம்பெற்றிருக்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கான மாதிரி வினா - விடையும், அவற்றைப் பயிற்சி செய்வதற்கான மாதிரி தேர்வு முறையும் இதில் இருக்கின்றன. எதிர்காலத்தில் மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக இன்னும் பல்வேறு புதிய அம்சங்களும் இதில் இடம்பெறவுள்ளன. இந்த இணையதளத்தை வடிவமைத்து, பராமரித்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கார்த்திகேயன் ஃபஸ்டூரா.
"ஒவ்வோர் ஆண்டும் `நீட்' தொடர்பான எதிர்ப்புகள் வரும்போதும், 'அடுத்த ஆண்டு `நீட்' இருக்காது', 'அதற்கடுத்த ஆண்டு `நீட்' இருக்காது' என்றுதான் ஒரு நம்பிக்கையாக இங்கு மாணவர்களிடம் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், 3 ஆண்டுகளாக `நீட்' நடந்துமுடிந்துவிட்டது. இதுதான் இங்கு யதார்த்தம். வரும் ஆண்டுகளிலும் `நீட்' இருக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நிலைமை இப்படி இருக்கையில், நம் மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் மருத்துவக் கனவுகளை கைவிடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அரசுப்பள்ளிகளிலிருந்து `நீட்'டில் தேர்ச்சிபெற்று மருத்துவ சீட் பெற்ற மாணவர்களை எண்ணினால் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கிறது. இதை மாற்ற, நம் மாணவர்களுக்கு உதவ, குறிப்பாக தமிழ் வழியில் `நீட்' எழுதும் மாணவர்களுக்கு உதவ நம்மால் என்னசெய்ய முடியும் என சிந்தித்தபோதுதான் எங்களுடைய வாடிக்கையாளர் ஒருவரின் மூலம் ஒரு ஐடியா கிடைத்தது.
முதுகலை படிப்புகளுக்கான `நீட்' தேர்வுகளுக்காக ஓர் இணையதளம் ஒன்றை அவர் வடிவமைத்து தரச்சொன்னார். அப்போதுதான் இதையே ஏன் நாம், எம்.பி.பி.எஸ்.க்கான `நீட்' தேர்வுக்கும் செய்யக்கூடாது எனத் தோன்றியது. எங்கள் அணியிலிருக்கும் 5 பேரும் சேர்ந்து ஓர் இணையதளத்தை வடிவமைத்தோம். தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் உதவியுடன் பயிற்சி வினாக்களை தேர்ந்தெடுத்து சேர்த்தோம். `நீட்' எழுதும் மாணவர்கள் எதுமாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள், அவர்களுக்குப் பயிற்சியில் எந்தெந்த அம்சங்கள் எல்லாம் இருக்கவேண்டும், எப்படி அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவது போன்ற விஷயங்களை மாணவர்களிடமே சென்று கேட்டோம். அவர்களிடமே பேசி, அவர்களுக்குத் தேவையானவற்றைத் தெரிந்துகொண்டோம்.
இந்தத் தேர்வு குறித்து அப்படிதான் நாங்கள் முக்கியமான மூன்று விஷயங்களைத் தெரிந்துகொண்டோம். பெரும்பாலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு என்பது கொஞ்சம் புதிதாக இருக்கிறது. அவர்களுக்கு அதில் பயிற்சி இல்லை என்பதால் தேர்வு எழுதும்போது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அடுத்தது மாதிரி தேர்வு எழுதும்போது, ஒவ்வொரு கேள்வி பதிலின் போதுமே அது சரியா தவறா என உடனே தெரிந்துகொள்ளும்போது அது அவர்களுக்குத் தேர்வு சமயத்தில் மிக உதவியாக இருக்கிறது.
அடுத்தது படித்ததை மீண்டும் மீண்டும் படித்து புரிந்துகொள்வதை விடவும், மாதிரித் தேர்வுகளை அதிகம் எழுதும்போதுதான் அவர்களுக்கு தேர்வுகுறித்த தன்னம்பிக்கை அதிகமாகிறது. இந்த மூன்று சவால்களையும் எதிர்கொள்ளும் விதத்தில் தளத்தை வடிவமைத்துள்ளோம். கடந்த நான்கு மாதங்களாக `வெல்க தமிழ்' இயங்கிவருகிறது. ஆனால், இது மட்டுமே அவர்களுக்குப் போதுமானது அல்ல; இன்னும் நிறைய விஷயங்கள் சேர்க்கவேண்டும். அதற்கான உதவிகளுக்காகத்தான் காத்திருக்கிறோம்.
எங்கள் அணியினர் டெக்னிக்கல் விஷயங்களில் கில்லி. ஆனால், பாடத்திட்ட விஷயத்தில் அந்தளவுக்கு அனுபவம் பெற்றவர்கள் இல்லை.
எனவேதான் இன்னும் நிறைய ஆசிரியர்களின் உதவி, அவர்களின் நிபுணத்துவம் ஆகியவை எங்களுக்குத் தேவை. எந்தவித பிரதிபலனும் பாராமல் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். எனவே, இதில் இன்னும் நிறைய ஆசிரியர்கள் எங்களுடன் இணைந்தால் எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்.
அடுத்தது தன்னார்வலர்கள். இந்தப் பயிற்சியை மாணவர்களிடம் எடுத்துச்செல்ல இன்னும் நிறையபேர் முன்வரும் பட்சத்தில் எங்களால் நிறைய மாணவர்களைச் சென்றடைய முடியும். இப்போதைக்கு இந்த உதவிகள் எங்களுக்குக் கிடைத்தால் விரைவில் இந்தத் தளத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிடுவோம். எங்களால் சில மாணவர்களாவது `நீட்'டில் தேர்ச்சி பெற்று, மருத்துவர்களாக உருவானால் அதுவே எங்களுக்கான வெகுமதி, பெருமை எல்லாம்." என்கிறார் கார்த்திகேயன்.
உதவும் உள்ளங்கள், கரம்கோக்கலாம்.