அலசல்
Published:Updated:

வேல்ஸ் குழுமத்தின் பிடியில் உலக பல்கலைக்கழக சேவை மையம்?

உலக பல்கலைக்கழக சேவை மையம்
பிரீமியம் ஸ்டோரி
News
உலக பல்கலைக்கழக சேவை மையம்

- கொந்தளிக்கும் கல்விச் செயற்பாட்டாளர்கள்...

உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் நலனுக்காக சென்னை சேத்துப்பட்டில் தொடங்கப்பட்ட உலக பல்கலைக்கழக சேவை மையம், வேல்ஸ் குழுமத்தின் ஆதிக்கத்தில் சிக்கி முற்றிலுமாக வணிக நோக்கத்தில் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த மையத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் கல்விச் செயற்பாட்டாளர்கள்.

வேல்ஸ் குழுமத்தின் பிடியில் உலக பல்கலைக்கழக சேவை மையம்?

உலகப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு `உலக பல்கலைக்கழக சேவை மையம்’ என்கிற அமைப்பு பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பின் சார்பில் 1970-ல் சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் தங்கிப் படிக்கும் வகையில் சேத்துப்பட்டில் ஒரு விடுதி கட்டப்பட்டது. டென்மார்க் அரசு இதற்காக 20 லட்சம் ரூபாய் நிதி உதவியும், தமிழக அரசு விடுதிக்கான நிலம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் அளித்துள்ளன. இந்த மையத்தில் விடுதி, மெஸ், நூலகம், மருத்துவ ஆலோசனை மையம், வங்கி, தபால் அலுவலகம், லேப், சுகாதார மையம், மாநாட்டுக்கூடம், கலையரங்கம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ஜோதிமுருகன்
ஜோதிமுருகன்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே இந்த மையத்தின் தலைவராவார். செயலாளராக சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் முதல்வர்கள் வரலாம். ஆனால், “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மையத்தின் அதிகாரம் வேல்ஸ் குழுமத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது” என்று நம்மிடம் ஆதங்கத்துடன் பேசினார் கல்வியாளரான செந்துரை சோழன்... ``1970-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்ட இந்த மையத்தில் சென்னை கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் அறைகள் அளிக்கப்பட்டன. இதில் வரும் வருமானத்தில் பொருளாதாரரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் உள்ளிட்ட உதவிகள் செய்யப்பட்டன.

கடந்த 1991-ல் இந்த மையத்தின் செயலாளர் பொறுப்புக்கு மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ஜோதிமுருகன் வந்தார். அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தலைவர் பதவிக்கான அதிகாரத்தை, செயலாளருக்கு மாற்றிவிட்டார். தேர்தலையும் முறையாக நடத்தாமல், தனக்கு வேண்டப்பட்டவர்களைக் கொண்டுவந்து முறைகேடுகளைச் செய்துவருகிறார். இவர் வேறு யாருமல்ல... வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஐசரி கணேஷின் மாமனார்தான். சேவை மையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஹோட்டலைக் கட்டி லீஸுக்கு விட்டிருக்கிறார்.

சேவை மையத்தில் பெரும்பாலும் தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களையே பணியமர்த்தியிருக்கின்றனர். இவர்களின் மோசடி குறித்து, இந்த மையம் உருவாவதற்குக் காரணகர்த்தாவாக இருந்த தியாகராஜன் என்பவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். மருத்துவர் காந்தராஜ் என்பவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தங்களது செல்வாக்கால் அவற்றையெல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பாக கண்துடைப்பாக ஒரு தேர்தலை நடத்தி, குருநானக் கல்லூரியின் முதல்வர் ரகுநாதனை, செயலாளராகத் தேர்வுசெய்திருக்கின்றனர். ஜோதிமுருகன்தான் தற்போது மையத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். உயர் கல்வித்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் முன்னிலையில்தான் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், அப்படி நடத்தப்படவில்லை. இதுவரை நடந்த முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன், தமிழக அரசு இதைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்’’ என்றார் விரிவாக.

கௌரி
கௌரி

இதற்கெல்லாம் என்ன பதில் சொல்கிறார் ஜோதிமுருகன்? அவரிடமே கேட்டோம்... ``குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்தான் இந்த மையத்தின் தலைவர். அவரது நேரடிக் கண்காணிப்பில் நிர்வாகம் நேர்மையாக நடக்கிறது. இதற்கென நிர்வாக கமிட்டியும் இருக்கிறது. அவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மீட்டிங் நடத்தி அதன்படிதான் முடிவுகளை எடுப்பார்கள். தன்னிச்சையாக யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்களுடைய கட்டுப்பாட்டில் மையம் இருக்கிறது என்பது தவறான தகவல். அதேபோல, 1970-ல் உருவாக்கப்பட்ட விதிப்படிதான் நிர்வாகம் நடக்கிறது. தலைவருக்கான அதிகாரத்தை, செயலாளருக்கு மாற்ற முடியாது. ஐசரி கணேஷெல்லாம் நிர்வாகத்தைவிட்டு விலகி பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நானும்கூட 2011-க்குப் பிறகு கடந்த மாதம்தான் துணைத் தலைவர் பொறுப்புக்கு வந்தேன். எங்களுடைய ஈடுபாட்டைச் சிலர் தவறாகப் பரப்பிவருகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்துவருகிறது. நிதி சார்ந்த முறைகேடுகளும் நடக்கவில்லை’’ என்றார்.

வேல்ஸ் குழுமத்தின் பிடியில் உலக பல்கலைக்கழக சேவை மையம்?

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரியிடம் கேட்டால், “இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கு தேர்தல் நடந்ததே எனக்குத் தெரியாது. அவர்களே நடத்தி முடித்துவிட்டார்கள். அது குறித்து விசாரிக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு வேறு எந்தப் புகாரும் வரவில்லை. ஏற்கெனவே அந்த மையத்தின் செயலாளராக இருந்த வெங்கட்ரமணனிடம் சேவை மையம் குறித்து எனக்கு ரிப்போர்ட் செய்யச் சொல்லியிருந்தேன். அவர் எதுவும் செய்யவில்லை. நான் அவரிடம் விசாரித்துவிட்டுத்தான் இந்த விவகாரம் குறித்து வேறு எதுவும் சொல்ல முடியும்’’ என்றார்.

சேவை மையம் நேரடிக் கட்டுப்பாட்டிலிருப்பதாகச் சொல்லப்படும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கே தெரியாமல் தேர்தல் நடந்திருக்கிறது என்கிறபோது உள்ளே பிரச்னை இருக்கிறது என்பது தெரிகிறது. தக்க நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?