Published:Updated:

ஆன்லைன் வகுப்புகள்... கிராமப்புற மாணவர்கள்... தொடர்பு எல்லைக்கு வெளியே!

ஆன்லைன் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் கல்வி

ஆன்லைன் கல்வி

கொரோனா லாக்டௌனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களை ஆன்லைன் வகுப்பின் மூலம் இணைப்பதை ஓரளவு நிறைவேற்றி பாடங்களை நடத்தி வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் வகுப்புகள் எந்தளவுக்குச் சாத்தியமாகி இருக்கின்றன... மேலும் கிராமப்புற, மலையடிவார கிராம மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்விகளுக்கான விடைகளை, களத்தில் இறங்கித் தேடினோம்.

அரசுப் பள்ளிகள், ஆன்லைன் கல்வி, கல்வித் தொலைக்காட்சி என்று பல்வேறு வழிகளில் மாணவர்களை இணைக்க முயல்கின்றன. ஆனால் செல்போன் இல்லை, மொபைல் டவர் இல்லை, மின்சாரம் இல்லை என்ற போதாமைகளுடன் பல கடைக்கோடி கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. சமீபத்தில் நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள பெரியகோம்பை கிராமத்தில் செல்போன் டவர் கிடைக்காததால் மாணவர்கள் மரங்களின் மீது ஏறி பாடங்களைப் படித்த காட்சிகளைப் பார்த்து அதிர்ந்தோம். இதுபோன்ற கிராமங்களில் இருக்கும் மாணவ, மாணவிகள் என்ன செய்கிறார்கள்? ஆன்லைன் வகுப்பும், கல்வித் தொலைக்காட்சியும் அவர்களுக்கு எந்த விதத்தில் கைக்கொடுக்கின்றன?

ஆசிரியர்கள் ஆகும் பட்டதாரிகள்!

கோவை, கேரள எல்லையான ஆனைக்கட்டி, வாளையார், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் உள்ள பழங்குடி கிராமங் களுக்கு ஆன்லைன் வகுப்பு கைக் கெட்டவில்லை, கல்வித் தொலைக் காட்சி கைக்கொடுப்பதில்லை. பெரும் பாலான பழங்குடி கிராமங்களில், அங்குள்ள பட்டதாரி பெண்களும், கல்லூரிகளில் படித்து வரும் பெண்களும் தான் தாங்களே ஆசிரியர்களாகி, ஆங்காங்கே தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி, வாளையார் அருகே உள்ள மலையடிவார கிராமம் சின்னாம்பதி. கோவை எல்லையில் உள்ள இந்த கிராமத்தின் முதல் பட்டதாரி, சந்தியா.

ஆன்லைன் வகுப்புகள்...
கிராமப்புற மாணவர்கள்...
தொடர்பு எல்லைக்கு வெளியே!

‘`பி.காம், சி.ஏ முடிச்சிட்டு வேலை பார்த்துட்டு இருந்தேன். இப்போ ஊரடங்குல, எங்க கிராமத்துல உள்ள குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கிறேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா படிப்புனே ஒண்ணு அவங்களுக்கு இல்லாமல் போயிடுச்சு. அதனால, என்னால முடிஞ்ச முயற்சியா அடிப்படை பாடங்களை யாச்சும் அவங்க மனசுல பதியவெச்சிட்டு இருக்கேன்’’ என்று அதைத் தன் கடமையாகக் குறிப் பிடுகிறார் சந்தியா.

அதேபோல, ஆனைமலை புலிகள் காப்பகத்துக் குட்பட்ட ஏராளமான பழங்குடி கிராமங்களில் ஒன்றான நரிக்கல்பதியில், ரங்கநாயகிதான் கல்வி வெளிச்சமாக இருக்கிறார். செல்போன் சிக்னல் கிடைக்கவே நடையோ நடையாக நடக்க வேண்டிய இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாயகி, டிப்ளோமா படித்து வருகிறார். தினமும் மாலை குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கிறார். அலைபேசியில் நாம் அவரிடம் பேசிய நேரத்துக்குள்ளாகவே பல டவர் பிரச்னைகள். “சார், வீட்ல டவர் கிடைக்காது. என்னோட ஆன்லைன் கிளாஸுக்கு, ஒரு கி.மீ நடந்துபோனாதான் சிக்னல் கிடைக்கும். பகல் நேரத்துல நான் படிச்சுப்பேன். சாயங்காலம், எங்க பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்குறேன். பள்ளிக்கூடம் மூடப் பட்டதால, எங்க குழந்தைங்க எல்லாம் படிப்புல இருந்து ரொம்ப தூரம் விலகிக் கிடக்காங்க. கல்வித் தொலைக்காட்சி பார்ப்பாங்க. ஆனா, அதுல புரிஞ்சுக்கறது கஷ்டமா இருக்குனு நிறைய பேர் சொல்றாங்க. மேலும், எங்க ஊரு மலையயொட்டி இருக்குறதனால, சின்னதா காத்து அடிச்சாலும், மழை வந்தாலும் கரன்ட் போய்டும். இப்போ நான், எங்க வீட்டு முன்னாடியே தெனமும் சாயங்காலம் 55 குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குறேன். என் அக்காவும் பாடம் சொல்லிக் கொடுப்பாங்க. பக்கத்து கிராமங்கள்லயும், இப்படித்தான் படிச்ச புள்ளைங்க குழந்தைகளுக்குப் பாடம் எடுத்திட்டு இருக்காங்க. எங்க கிராமத்துக்கு செல்போன் டவர் வேணும். பள்ளிகள் திறக்கும் வரை ஒரு ட்யூசன் சென்டர் வெச்சுக் கொடுக்கணும்” என்றார்.

ஆன்லைன் வகுப்புகள்...
கிராமப்புற மாணவர்கள்...
தொடர்பு எல்லைக்கு வெளியே!

ஆன்லைன் கற்றல்... அரசுப் பள்ளிகளின் முயற்சி என்ன?

கோவை மாவட்டம், வடசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, இந்த ஆன்லைன் கற்றல் இடைவெளியைக் குறைக்க தங்கள் அரசுப் பள்ளி எடுத்துவரும் முயற்சிகள் பற்றிக் கூறினார். ‘`சுற்றுவட்டார 15 கிராமங்கள்ல இருந்து எங்க பள்ளில 900 குழந்தைங்க படிக்கிறாங்க. எல்லார் வீட்லயும் செல்போன், டிவி இருக்கானு நேரடியா ஆய்வு செஞ்சோம். வசதி இல்லாத குழந்தைகளுக்கு செல்போன் வாங்கித் தருவதற்கான முயற்சிகளிலும் இறங்கி யிருக்கோம். அக்கம், பக்கத்துல இருக்குற ரெண்டு, மூணு குழந்தைங்கள ஒண்ணா சேர்ந்து கல்வி தொலைக்காட்சி பார்த்து, படிக்கச் சொல்றோம். ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியா வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச் சுருக்கோம். பல வீடுகள்ல பெற்றோர் கிட்டதான் செல்போன் இருக்கும். சில கிராமங்கள்ல பெற்றோரே குழந்தைகளை வேலைக்கு அனுப்பிடறாங்க. அவங்களுக்கு எல்லாம், வேலை முடிஞ்சு வந்ததும் இரவு 8 - 9 மணிக்கெல்லாம் ஆன்லைன்ல கிளாஸ் எடுத்துட்டு வர்றோம்.

தேர்வு நெருங்கும்போது, சந்தேகங்களை நிவர்த்தி செய்துக்க குழந்தைங்கள தனித் தனியா பள்ளிக்கு வரச் சொல்லி சொல்லிக் கொடுக்குறோம். இந்த நிலைமை தொடரும் பட்சத்தில், கல்வியில் ரொம்ப பின்தங்குற குழந்தைகளை மட்டும் ஒருங்கிணைத்து பாடம் எடுக்கவும் திட்டமிட்டிருக்கோம்’’ என்றார்.

ஆன்லைன் வகுப்புகள்...
கிராமப்புற மாணவர்கள்...
தொடர்பு எல்லைக்கு வெளியே!

ஆசிரியர்கள் மரத்தடியில் சமூக இடைவெளியுடன் பாடம் நடத்தலாமே?!

ஆன்லைன் வகுப்பும், கல்வித் தொலைக் காட்சியும் கிராமங்களில் எதிர்பார்த்த பலன் கொடுக்கவில்லை என்பதே கள நிலவரமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர்களும் அரசும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூறினார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

“பள்ளிகள் மூடலால் கல்விக்கு மாற்றுவழி ஆகியிருக்கும் ஆன்லைன் வகுப்புகள், கல்வித் தொலைக்காட்சி போன்றவற்றின் தாக்கம், கிராமப்புற மாணவர்களுக்குக் குறைவாகவே உள்ளது. நல்ல மொபைல், நெட்வொர்க் இருக்கும் சூழலிலேயே, மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளை முழுமையாக உள்வாங்கிப் படிக்க இயலாது. இந்த நிலையில், மொபைல், நெட்வொர்க் பற்றாக் குறைகளுடன் இருக்கும் கிராமப்புற மாணவர்கள்,

பல அடிகள் பின்தங்கி இருக்கின்றனர். கல்வித் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மாணவர்களால் அதில் கவனம் குவிக்க முடியாது. இன்னொரு பக்கம் மலைக்கிராம குழந்தைகள், டவர் கிடைக்காமல் மரத்தில் ஏறுவது, காட்டில் நடப்பது எனப் பாதுகாப்பு இல்லாத சூழல்களுக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள்...
கிராமப்புற மாணவர்கள்...
தொடர்பு எல்லைக்கு வெளியே!

இந்தச் சூழலில் வேறு என்னதான் செய்யலாம்?

ஓர் ஆசிரியர், தன் வீட்டருகே உள்ள சில குழந்தைகளை ஏதாவது மரத்தடியில் சமூக இடைவெளியுடன் ஒருங்கிணைத்து,

இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கலாமே... ஒரு நாளுக்கு ஒரு பாடம் எடுத்தால்கூட போதும். மேலும், குழந்தைகளிடம் சில நிமிடங்கள் உரையாடி, அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்று விசாரிக்கலாம். குழந்தைகள், சக குழந்தைகளைப் பார்த்துப் பேசும்போதுதான் தங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்வார்கள். அது, இந்த ஊரடங்கால் கிட்டத்தட்ட இரண்டு வருடங் களாக வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம், உளவியல் பிரச்னைகளுக்கும் வடிகாலாக அமையும்.

அரசு, ஜனநாயக ரீதியாக ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், பெற்றோர் அமைப்புகள், கற்றல் செயல் பாட்டில் ஈடுபாடு உள்ள தன்னார்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் அழைத்து, தற்போதுள்ள பிரச்னைகளைக் களையவும், அடுத்தகட்டம் பற்றியும் ஆலோசனை நடத்த வேண்டும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அரசு மாற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆடு, மாடு மேய்க்கும் மாணவர்கள்?

கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வியில் விழுந்திருக்கும் இடைவெளிப் பிரச்னை ஒருபக்கம் என்றால், கல்வியைத் தொடர முடியாத சூழலில் பல குழந்தைகள் வேலைகளுக்குச் செல்ல ஆரம் பித்திருப்பது இன்னொரு பெரிய பிரச்னையாக உள்ளது. ஆடு, மாடு மேய்ப்பதில் தொடங்கி பெற் றோருடன் கூலி வேலைக்குச் செல்வது வரை குழந்தைகள் வேறு பாதைகளில் பயணிக்கத் தொடங்கி விட்டனர். கொரோனா முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது, இடை நிற்றல் பிரச்னை அதிகரிக்கும். அந்த மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான திட்டங்கள் குறித்தும் அரசு இப்போதே செயல்பாடுகளைத் தொடங்க வேண்டியது அவசிய மாகிறது.