Published:Updated:

`சின்னக் குயில் வாட்ஸ்அப் பக்கம்; கவிதை முதல் பேப்பர் ஆர்ட் வரை!’- அசத்தும் விராலிமலை பள்ளி ஆசிரியை

மாணவர்களுடன் ஆசிரியை
மாணவர்களுடன் ஆசிரியை

`கொரோனா நேரத்தில் மாணவர்களோட தொடர்பில் இருக்க வாட்ஸ்அப் குழுதான் ரொம்பவே பயன்பாடாக இருக்குது. குறிப்பாக, இந்த வாட்ஸ் அப் குழுதான் மாணவர்களோட பக்கதுல இருக்கிற மாதிரியான உணர்வைக் கொடுத்திக்கிட்டு இருக்கு’.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்குக் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏராளமான மாணவர்கள் இந்த விடுமுறையால் சலிப்படைந்திருக்கிறார்கள். இதனால், பல மாணவர்கள் தற்போது பள்ளிப் பாடங்களை அவர்களாகவே ஆர்வமுடன் எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டனர். மாணவர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட புதுக்கோட்டை ஆசிரியை ஒருவர் ஊரடங்கு நேரத்திலும் வாட்ஸ் அப் மூலம் அவர்களைப் படிக்க வைப்பதுடன் மட்டுமன்றி வாசிப்பு, ஓவியம் வரைதல், நடனம் என அவர்களின் பல்வேறு தனித்திறமைகளையும் ஊக்குவித்து அவர்களைப் பட்டை தீட்டி வருகிறார். வாட்ஸ் அப் குழுவில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் குழுவில் தினமும் செய்தி வாசிப்பு, கவிதை அனுப்புவது, விழிப்புணர்வு பாடல் பாடுவது, கதை சொல்வது, ஓவியம் வரைந்து அனுப்புவது என இடைவிடாது தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களின் படைப்புகள்
மாணவர்களின் படைப்புகள்
230750825053102

ஆசிரியர், மாணவர்களுக்கு வாட்ஸ் அப்பில் எந்த விதக் கட்டுப்பாடுகளையும், கட்டளைகளையும் விதிப்பதில்லை. ஆனாலும், குழுவில் மாணவர்களிடமிருந்து அடுத்தடுத்து பதிவுகள் வந்துகொண்டே இருக்கிறது.

இதுபற்றி ஆசிரியை மீனா ராமநாதன் கூறும்போது,``விராலிமலை அருகே கவரப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 14 வருஷமாக ஆசிரியையாகப் பணியாற்றிக்கிட்டு இருக்கேன். 4ம் வகுப்புக்கு கிளாஸ் எடுக்கிறேன். பாடம் படிக்கிறது முக்கியம்தான். அதேநேரத்துல, மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்குவது ரொம்பவே முக்கியம். அதனால, என்னோட வகுப்புல தனித்திறமைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். குறிப்பா பாடத்தையும் மாணவர்களுக்குக் கதை, நடிப்பு மூலம் கற்பிக்க முயலுவேன். செய்தி வாசிப்பது எப்படி, கதை சொல்லுவது எப்படி, கவிதை எழுவது எப்படின்னு ஒருமுறைதான் சொல்லிக்கொடுப்பேன். மாணவர்கள் ரொம்பவே ஆர்வமாகக் கேட்டுக்கிட்டு, அடுத்த நாளே அவங்க நம்மள விட அதிகமாகப் பேச ஆரம்பிச்சிருவாங்க.

கவிதை, கதை, கட்டுரை, ஓவியத்தோடு, கைவினைப் பொருள்கள் தயாரிக்கிறது, பேப்பர் ஆர்ட் அப்படின்னு எல்லாமும் எங்க மாணவர்களுக்கு அத்துப்படி. மாணவர்களோட திறமைகளை உடனே வாட்ஸ், ஃபேஸ்புக்குல பதிவேற்றம் பண்ணுவேன். குறிப்பா, இதற்காக, யூடியுப்பில் ஒரு பக்கம் கூட வச்சிருக்கேன். பதிவேற்றம் செஞ்ச கொஞ்ச நேரத்திலேயே பலரும் மாணவர்களைப் பாராட்டி எழுதுவாங்க. அதனை மாணவர்களிடம் காட்டுவேன். ரொம்ப சந்தோஷப்படுறதோட, உற்சாகத்தோட செயல்படுவாங்க. வகுப்பறைக்குள்ள பாடம் மட்டும்தான் நடத்தணும்ங்கிற சின்ன நெருக்கடி வந்துச்சு. அதற்கப்புறம்தான் மதிய இடைவெளி, ஓய்வு நேரங்கள்ல தனித்திறமைகளை செய்வாங்க. குறிப்பாக, பிள்ளைகளோட திறமை அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவதற்காகத்தான் சில மாதங்களுக்கு முன்பு ``சின்னக்குயில்" என்ற வாட்ஸ் அப் பக்கத்தை ஆரம்பிச்சேன்.

மாணவர்களுடன் ஆசிரியை
மாணவர்களுடன் ஆசிரியை

இப்போ, கொரோனா நேரத்தில் மாணவர்களோட தொடர்பில் இருக்க வாட்ஸ்அப் குழுதான் ரொம்பவே பயன்பாடாக இருக்குது. குறிப்பாக, இந்த வாட்ஸ் அப் குழு தான் மாணவர்களோட பக்கதுல இருக்கிற மாதிரியான உணர்வைக் கொடுத்திக்கிட்டு இருக்கு. தாங்கள் செய்வதை, பேசுவதை உடனுக்குடனே படமாக, வீடியோவாக எடுத்து அனுப்புகின்றனர். எங்க வகுப்பு மாணவி ஒருத்தி அவளாகவே, கொரோனா விழிப்புணர்வு பாடலை எழுதிப் பாடியிருக்கா, அது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று இருக்கு. மாணவர்களின் செயல்பாடுகளுக்குப் பெற்றோர்களும் ரொம்பவே சப்போர்ட் பண்றாங்க. மொத்தம் எங்க வகுப்புல 31 மாணவர்கள், 20 பேர்தான் தற்போது குழுவில் இருக்காங்க. இன்னும் 11பேரையும் குழுவில் இணைக்கணும். அதுதான் இப்போதைக்கு ஆசை" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு