Published:Updated:

இந்திய மாணவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய வெளிநாடுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

Travel
Travel ( AP Photo/Rick Bowmer, File )

வெளிநாடு செல்லும் மாணவர்கள், அங்கு கல்லூரி வளாகங்களுக்கு நேரடியாகச் சென்று வகுப்புகளில் கலந்துகொள்ள வெண்டுமென்றால், அதற்கு நிச்சயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

கல்விக்காக இந்திய மாணவர்கள் விரைவில் வெளிநாடுகளுக்குப் பயணிக்க உள்ளனர். ஆகஸ்ட் முதல் 2021-ம் ஆண்டுக்கான பட்டப்படிப்புகளை மேற்கொள்ள வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களைத் தங்கள் நாடுகளுக்குள் அனுமதிக்க, ஒவ்வொரு நாடும் கோவிட்-19 பேரிடர்க் காலத்தில் அனுமதி வழங்க பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. எனவே படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வெளிநாடுகளிலிருந்து படிக்க வரும் மாணவர்களிடமிருந்து கோவிட்-19 தொற்றுநோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தோடு இருக்கின்றன. ஆகவே, அப்படி கல்விக்காக வரும் மாணவர்களை அனுமதிப்பதற்குச் சில விதிமுறைகளை வகுத்துள்ளன.

கல்வி
கல்வி
`இந்தியர்கள் தடுப்பூசி போட்டாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு போகமுடியாதா?' - குழப்பங்களும் விளக்கமும்

மாணவர்கள் கல்லூரி வளாகங்களுக்கு நேரடியாகச் சென்று வகுப்புகளில் கலந்துகொள்ள வெண்டுமென்றால், நிச்சயமாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதோடு, உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசியையே போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் சில சிக்கல்களைச் சந்திக்கலாம் என்ற குழப்பமும் எழுந்துள்ளது.

மேலும், சர்வதேச மாணவர்களுக்கு பல்வேறு நாடுகள், சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதில் இந்திய மாணவர்கள் கல்விக்காகப் பயணிக்கக்கூடிய சில முக்கிய நாடுகளில் இருக்கும் கட்டுப்பாடுளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஐக்கிய அமெரிக்கா

அமெரிக்கா முழுக்கவுள்ள கல்வி நிறுவனங்கள், சர்வதேச மாணவர்களை நேரடியாக வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. அப்படி கல்லூரி வளாகத்துக்கு நேரடியாக வரும் முன்னர், அவர்கள் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

அமெரிக்காவுக்கு, இந்தியாவிலிருந்து செல்வதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சில கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வகுப்புகளைத் தொடங்கவுள்ளன. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொள்ள 12 முதல் 16 வாரங்கள் வரையிலான இடைவெளியை இந்தியா நிர்ணயித்துள்ளது. ஆனால், கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் முன்னரே இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

வெளிநாடு செல்லும் மாணவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்
வெளிநாடு செல்லும் மாணவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

பிரான்ஸ்

கோவிட்-19 தொற்று பாதிப்பு குறைவாகவுள்ள `பசுமை நாடுகள்' பட்டியல் ஒன்றை பிரான்ஸ் உருவாக்கியுள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரான்ஸ் நாட்டுக்குள் எந்தத் தடையுமின்றி போகலாம். அந்தப் பட்டியலில் இந்தியா இல்லை. ஆகையால், பிரான்ஸ் சென்று படிக்கவிருக்கும் இந்திய மாணவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

மாணவ விசாக்களுக்கு அனுமதியளிக்கையில் மொத்தமாக ஒரே நேரத்தில் பல அனுமதி வழங்கப்படும். ஆனால், மேற்கூறிய பசுமை பட்டியலில் இந்தியா இல்லாததால், ஒவ்வொருவராக, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு கவனமாகவே அனுமதி வழங்கப்படும். அதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, அவர்கள் தடுப்பூசி எடுத்து இரண்டு வாரங்கள் கழித்தே பிரான்ஸ் செல்வதற்கு அனுமதி பெறமுடியும். இங்கேயும், உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசியைப் போட்டிருந்தால்தான் அனுமதி கிடைக்கும். மேலும், அனுமதி கோரும் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கு 14 நாள்களுக்குள்ளாக ஒருவர் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருந்தால், அவர் அடுத்த 4 முதல் 6 வாரங்கள் வரை பயண அனுமதி பெறுவதற்குக் காத்திருக்க வேண்டும்.

Abroad Studies
Abroad Studies

ஆஸ்திரேலியா

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்வதற்கு தடை நிலவினாலும், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை மட்டும் அனுமதிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்படி, ஆஸ்திரேலியாவிற்கு ஒரு மாதத்திற்கு 800 மாணவர்கள் என்ற விகிதத்தில் கல்விக்கான பயணத்தை மேற்கொள்ளலாம். இதன்படி, ஜூலை 2021 கடைசி வாரத்திலிருந்து மாணவர்கள் அனுமதிக்கப்படலாம்.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள், ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்களைக்கூட சில உடல் பரிசோதனைகளுக்குப் பிறகு, அனுமதிப்பது குறித்துத் திட்டமிட்டு வருகின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகலாம்.

பிரிட்டன்

கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை பிரிட்டனில் இன்னும் அமலுக்கு வராத நிலையில், இந்திய மாணவர்களுக்கு அனுமதி வழங்குவதில் இங்கு பெரிய சிக்கல் இல்லை. இருப்பினும், கோவிட் பரவலைப் பொறுத்தவரை சிவப்புப் பட்டியலில் இந்தியா இருப்பதால், பிரிட்டனுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதேநேரம், அங்கு செல்லும் மாணவர்கள் அவர்கள் கல்வி பயிலும் பல்கலைக்கழக வளாகத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம்.

Medical Studies
Medical Studies

சீனா

பிப்ரவரி 2020 முதல் கோவிட் ஊரடங்கு உலகம் முழுவதும் அமலுக்கு வந்ததிலிருந்து, சீனாவில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த சுமார் 25,000 இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர மீண்டும் திரும்பிச் செல்லமுடியாத நிலையில் சிக்கியுள்ளனர். இந்தியாவிலிருந்து சீனாவுக்கு செல்வதற்கான தடை இன்னும் அமலில்தான் உள்ளது.

இந்நிலையில், இந்திய மாணவர்கள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு சரி செய்ய வேண்டுமென்றும் தாங்கள் மீண்டும் கல்லூரிகளுக்குத் திரும்பிச் சென்று படிப்பைத் தொடர வழிசெய்ய வேண்டுமென்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மருத்துவப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கும் மாணவர்கள், ஐந்தாம் ஆண்டு படிப்பை முடித்த பின்னர் 52 வாரங்களுக்கு ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்தால்தான் பட்டப்படிப்பை முடித்ததற்கான சான்றிதழைப் பெற முடியும். தென்கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் சீனாவுக்குத் திரும்பிச் சென்று தங்கள் படிப்பைத் தொடரும் நிலையில், இந்திய மாணவர்கள் அனுமதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

கனடா

அமெரிக்காவைப் போலவேதான் கனடாவிலும் இந்திய மாணவர்களுக்கு விசா அனுமதி வழங்கும் முறை பின்பற்றப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசியை அந்த மாணவர்கள் போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

Representational Image
Representational Image

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எத்தனை நாள்கள் கழித்து வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளலாம், ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எப்படிப் போட்டுக்கொள்வது என்பன குறித்து பேசிய தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா, ``இரண்டு டோஸ் போட்டு முடித்து இரண்டு வாரங்கள் கழித்து ஒருவர் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளலாம். அதேநேரம், சில நாடுகளில் ஒரு டோஸ் போட்டிருந்தாலே வரலாம் என்று தளர்வுகளை அறிவித்துள்ளனர். உதாரணத்துக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள சில பல்கலைக் கழகங்களில் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டிருந்தாலே அனுமதியுண்டு என்று கூறியுள்ளனர். அப்படிப்பட்ட சூழலில் ஒரு டோஸ் போட்ட பிறகு அவசரமாகப் பயணிப்பவர்கள், அங்கு பயன்பாட்டிலிருக்கும் தடுப்பூசியை இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம். அப்படி தடுப்பூசியை மாற்றிப் போடுவதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

அனைத்துத் தடுப்பூசிகளின் தயாரிப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதுதான். இப்போதைக்கு இரண்டு டோஸ்களும் ஒரே தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. ஆனால், ஒருவர் இந்தியாவில் கோவாக்சின் முதல் டோஸ் போட்ட பிறகு, ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு கோவாக்சின் கிடைக்கவில்லை என்றால், அங்கு கிடைக்கும் தடுப்பூசியை இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம். ஒருவேளை அச்சம் இருந்தால், இந்தியாவில் முதல் டோஸ் போட்டிருந்தாலும்கூட, அங்கு சென்ற பிறகு, வேறு தடுப்பூசியை இரண்டு டோஸ்களாகப் போட்டுக்கொள்ளலாம். ஒரு டோஸே போதுமானதுதான். இருப்பினும், இரண்டு டோஸ்களைப் போட்டுக்கொள்வதில் எந்தப் பிரச்னையுமில்லை" என்று கூறினார்.

தடுப்பூசி
தடுப்பூசி
100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சீக்கம்பட்டு கிராமம்; சாதித்தது எப்படி?

பல்வேறு நாடுகள் இதுபோல் தத்தம் நாடுகளுக்குள் பயணிகளை அனுமதிப்பதற்கு எனச் சில விதிமுறைகளை வகுத்துள்ளன. அதில் பெரும்பான்மையாகக் குறிப்பிடப்படுவது தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும் என்பதுதான். அதிலும், கோவாக்சின் தடுப்பூசி பல நாடுகளில் அனுமதி பெறாத நிலையில், அதை எடுத்துக்கொள்வதில் வெளிநாடு செல்லக்கூடியவர்களிடையே தயக்கம் நிலவுகிறது. ஆகையால், வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் மாணவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளவே முனைகின்றனர்.

அந்தந்த நாட்டுக்குள் செல்ல விசா பெறுவதற்கு அனுமதி கோரும்போது, என்னென்ன கோவிட் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதைக் குறிப்பிட்ட நாடுகளின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகே, எந்த நாட்டுக்கு படிப்புக்காகப் பயணிக்க உள்ளீர்களோ, அந்த நாட்டுக்கு விசா பெறுவதற்கு விண்ணப்பம் செய்யுங்கள். அதேநேரம், எந்த நாட்டுக்குச் செல்வதாக இருப்பினும், அங்கு செல்ல தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகு வெளிநாடுகளுக்குப் பயணிப்பது பாதுகாப்பானது என்றே மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு