மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற நிகழ்ச்சி கடந்த வாரத்தில் பெரும் சர்ச்சையானது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் புதிதாகச் சேரும் மாணவர்களும், பட்டப்படிப்பு முடித்து மருத்துவப் பயிற்சியில் இணையும் மாணவர்களும் `ஹிப்போகிரட்டிக் உறுதிமொழி' எடுத்துக்கொள்வது நீண்டகால மரபாக இருந்து வருகிறது. இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வழக்கமான ஹிப்போகிரட்டிக்' உறுதிமொழியை எடுக்காமல் `மகிரிஷ் சரக் சப்த்' என்ற சம்ஸ்கிருத உறுதிமொழியை எடுத்தது தான் சர்ச்சைக்கு காரணம்.
சர்ச்சையைப் புறந்தள்ளிவிட்டு தெரிந்துகொள்ள வேண்டிய இரு நபர்களையும் அவர்களின் கோட்பாடுகளையும் பார்ப்போமா?
ஹிப்போகிரட்டிஸ்
`மருத்துவத்தின் தந்தை’ என்று அறியப்படும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ் கி.மு 460 முதல் 375 வரை வாழ்ந்தவர். நோய்களுக்கு கடவுள்களின் கோபமே காரணம் என்று பெரும்பாலான மக்கள் மூடநம்பிக்கை கொண்டிருந்த அந்தக் காலத்தில், ஹிப்போகிரட்டிஸ் அனைத்து வகையான நோய்களுக்கும் இயற்கையான காரணங்களைக் கற்பித்தார். மருத்துவப் பயிற்சி அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் அறிவுசார் பள்ளியை அவர் நிறுவினார்.
புகழ்பெற்ற `ஹிப்போகிரட்டிஸ் உறுதிமொழி’ உட்பட, அவரது பெயருடன் தொடர்புடைய சுமார் 60 மருத்துவ ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் ஹிப்போகிராட்டிக் கார்பஸ் எனப்படும் ஒரு தொகுப்பாக சேகரிக்கப்பட்டுள்ளன. ஹிப்போகிரட்டிஸ் அவை அனைத்தையும் தானே எழுதவில்லை என்று கூறியிருந்தாலும்கூட, அந்த ஆவணங்கள் அவருடைய தத்துவங்களின் பிரதிபலிப்பாகவே உள்ளன. ஹிப்போகிரட்டிஸின் விளக்கங்களின் மூலமே மருத்துவ நடைமுறை ஒரு புதிய திசையில் நகர்ந்தது. மருத்துவம், பகுத்தறிவு மற்றும் அறிவியல் பார்வையை நோக்கிச் செல்ல இதுவே முதல்படியாக அமைந்தது.
நான்கு திரவங்கள்
ஹிப்போகிரட்டிஸ் நான்கு திரவங்களின் கோட்பாட்டை உருவாக்கிய பெருமைக்குரியவர். தத்துவவாதிகளான அரிஸ்டாட்டில், கேலன் ஆகியோரும் இந்தக் கருத்துக்குப் பங்களித்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, வில்லியம் ஷேக்ஸ்பியர் மனித குணங்களை விவரிக்கும்போது இந்தக் கோட்பாட்டை தன் எழுத்துகளில் இணைத்தார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (என்ஐஹெச்) நடத்திய கண்காட்சியான `தி வேர்ல்டு ஆஃப் ஷேக்ஸ்பியர்’ஸ் ஹ்யூமர்ஸ்’ படி, இவை மஞ்சள் பித்தம், கறுப்பு பித்தம், ரத்தம், சளி எனக் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு திரவமும் ஒரு குறிப்பிட்ட கூறுடன் (பூமி, நீர், காற்று, நெருப்பு), இரண்டு `குணங்கள்’ (குளிர், வெப்பம் / ஈரம், வறண்ட), சில உடல் உறுப்புகள் மற்றும் சில பருவங்கள் (குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதிர்ச்சி, முதுமை) ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

கூறுகள், குணங்கள், உறுப்புகள் மற்றும் வயது ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள் - அதே போல பருவங்கள் மற்றும் கிரகங்களின் செல்வாக்கு ஆகியவையே ஒரு நபரின் உடல் மற்றும் மன ஆரோக்கியம், அத்துடன் அவர்களின் இயல்பு அல்லது ஆளுமை ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது என்கிறது இந்தக் கோட்பாடு. இதன் படி... மஞ்சள் பித்தமானது சூடான மற்றும் உலர் குணங்களுடன் தொடர்புடையது. இது நெருப்பு, கோடை, பித்தப்பை மற்றும் குழந்தைப் பருவத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. கறுப்பு பித்தமானது மனச்சோர்வு, குளிர் மற்றும் வறண்ட குணங்களுடன் தொடர்புடையது. இது பூமி, குளிர்காலம், மண்ணீரல் மற்றும் முதுமை ஆகியவற்றுடன் தொடர்புடையது. ரத்தம் சூடான மற்றும் ஈரப்பதத்தின் குணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது காற்று, வசந்தம், இதயம் மற்றும் இளமைப் பருவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சளி என்பது குளிர் மற்றும் ஈரப்பதத்தின் குணங்களுடன் தொடர்புடையது. இது நீர், மூளை மற்றும் முதிர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரவங்களை சமநிலையில் வைத்திருப்பதே பண்டைய கோட்பாட்டின்படி நல்ல ஆரோக்கியத்துக்கான திறவுகோல். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திரவங்களில் அதிகம் அல்லது குறைவு ஏற்பட்டால், அது நோயுடன் தொடர்புடையது.
இந்தத் திரவங்களின் விகிதத்தை சமநிலைப்படுத்த உதவும் மிக முக்கியமான வழிகளில் உணவு ஒன்றாகும். ஹிப்போகிரட்டிஸின் மிகவும் பிரபலமான மேற்கோள்களில் ஒன்று, ``உணவு உங்கள் மருந்தாகவும், மருந்து உங்கள் உணவாகவும் இருக்கட்டும்!"
புதிய சிந்தனைக்கான வாசல்
நான்கு திரவங்களின் கருத்து இன்று விசித்திரமானதாகவும், அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகவும் தோன்றினாலும், இந்த யோசனைகளே இயற்கைக்கு அப்பாற்பட்ட பார்வையில் இருந்து விலக வழிகாட்டுகிறது. நோய், சுற்றுச்சூழலுடன் தொடர்புடையது, உடலின் உள்ளே என்ன நடக்கிறது என்கிற புதிய சிந்தனையை நோக்கிய முதல் படியைக் குறிக்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரிய ஆவணங்கள்
மருத்துவ ஆவணங்களின் மிகப் பழைமையான தொகுப்பாகப் பரவலாகக் கருதப்படும் ஹிப்போகிரட்டிக் கார்பஸ், மருத்துவம் தொடர்பான பல்வேறு விரிவுரைகள், பாடப்புத்தகங்கள், ஆராய்ச்சி, சிகிச்சைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகளைக் கொண்ட சுமார் 60 நூல்களின் தொகுப்பாகும். ஹிப்போகிரட்டிஸின் வாழ்நாளிலும், அதற்குப் பிறகும் மருத்துவம் செய்த பல மருத்துவர்களின் படைப்புகளாக இந்த நூல்கள் இருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பிற்காலத்தில் இது மேற்கத்திய உலகம் முழுவதும் மருத்துவர்களுக்கான நிலையான குறிப்பானது. இவற்றிலுள்ள குறிப்புகள் 19-ம் நூற்றாண்டில் நன்கு பயன்படுத்தப்பட்டன.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஹிப்போகிரட்டிக் உறுதிமொழி (Hippocratic oath)
ஹிப்போகிரட்டிக் கார்பஸில் ஹிப்போகிரட்டிக் உறுதிமொழி சேர்க்கப்பட்டுள்ளது. இதுவே மருத்துவர்களுக்கான பண்டைய நெறிமுறையாகும். இதன் அசல் பிரமாணத்தில் மருத்துவர்கள் தாங்கள் இயன்றவரை இந்த உடன்படிக்கையைப் பின்பற்றுவதாக கிரேக்க கடவுள்கள் மற்றும் ஆரோக்கிய தெய்வங்கள் மீது சத்தியம் செய்வார்கள். இது மருத்துவர்களுக்கான சில விதிகளையும் பட்டியலிடுகிறது. எடுத்துக்காட்டாக, மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்வியைக் கோருகிறது, `கத்தி’யை (அறுவை சிகிச்சை) ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்களை வலியுறுத்துகிறது.

இன்றும் மருத்துவக் கல்லூரி பட்டதாரிகள் இந்த உறுதிமொழியை மாறுதல்களோடு எடுத்துக்கொள்கிறார்கள். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகவும், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சாக்லர் ஸ்கூல் ஆஃப் கிராஜுவேட் பயோமெடிக்கல் சயின்ஸின் டீனாகவும் இருந்த டாக்டர் லூயிஸ் லாசக்னா 1964-ல் எழுதிய பிரமாணத்தின் சுருக்கமான நவீன பதிப்பு இது:
`இந்த உடன்படிக்கையை எனது திறனுக்கும் நியாயத்துக்கும் ஏற்றவாறு நிறைவேற்றுவேன் என்று சத்தியம் செய்கிறேன்.
நான் யாருடைய படிகளில் நடக்கிறேனோ அந்த மருத்துவர்களின் கடினமான, வெற்றிகரமான அறிவியல் வெற்றிகளை நான் மதிக்கிறேன். மேலும், என்னுடைய அறிவைப் பின்பற்ற வேண்டியவர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்வேன்.
அதிகப்படியான சிகிச்சை மற்றும் `வாழ்க்கை அர்த்தமற்றது’ என்ற நம்பிக்கையில், அனைத்து மத மற்றும் தார்மிகக் கொள்கைகளையும் நிராகரித்தல் (நீலிசம்) போன்ற இரட்டை அம்சங்களைத் தவிர்த்து, நோயாளிகளின் நலனுக்காக, தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நான் செய்வேன்.
அரவணைப்பும் அனுதாபமும் அறுவைசிகிச்சை நிபுணரின் கத்தி அல்லது வேதியியலாளரின் மருந்தைவிட முக்கியமானது என நான் அறிவேன்.
``எனக்குத் தெரியாது" என்று சொல்ல நான் வெட்கப்பட மாட்டேன். ஒரு நோயாளியின் மீட்புக்கு மற்றொருவரின் திறன்கள் தேவைப்படும்போது என் சக ஊழியர்களை அழைக்கத் தவற மாட்டேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என் நோயாளிகளின் தனியுரிமையை நான் மதிப்பேன். அவர்களின் பிரச்னைகளை பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்த மாட்டேன். பிறப்பு மற்றும் இறப்பு விஷயங்களில் நான் கவனமாக நடப்பேன். ஓர் உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்பட்டால், எல்லாவற்றுக்கும் நன்றி. ஆனால், ஓர் உயிரை எடுப்பது என் சக்திக்கு உட்பட்டதாக இருந்தாலும்கூட... இந்த அற்புதமான பொறுப்பை மிகுந்த பணிவுடனும், எனது சொந்த பலவீனம் பற்றிய விழிப்புணர்வுடனும் எதிர்கொள்வேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நான் கடவுளுடன் விளையாட மாட்டேன். நான் காய்ச்சலுக்கோ, புற்றுநோய் கட்டிக்கோ சிகிச்சை அளிக்கவில்லை; நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதனுக்கே சிகிச்சை அளிக்கிறேன் என்பதை நினைவில் கொள்வேன். நோய்வாய்ப்பட்டவர்களை நான் போதுமான அளவு கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர்களின் தேவை குடும்பங்களுக்கும் பொருளாதாரச் சமநிலைக்கும் மிக அவசியம். என் பொறுப்பு அவர்களின் பிரச்னைகளையும் உள்ளடக்கியது என்பதை நான் அறிவேன்.

என்னால் முடிந்தபோதெல்லாம் நோயைத் தடுப்பேன். ஏனெனில், குணப்படுத்துவதைவிட தடுப்பதே சிறந்தது. என் சக மனிதர்கள் அனைவருக்கும், மனம் மற்றும் உடல் பலவீனமானவர்களுக்கான சிறப்புக் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய சமூகத்தின் உறுப்பினராக நான் இருப்பதை நினைவில் கொள்கிறேன். சிறந்த மரபுகளைப் பாதுகாக்கும் வகையில் நான் எப்போதும் செயல்படுவேன். நான் இந்த உறுதிமொழியை மீறவில்லை என்றால், நான் வாழும் காலத்தில் மதிக்கப்பட்டு, அதன் பிறகு, அன்புடன் நினைவுகூரப்படும் வாழ்க்கையை அனுபவிப்பேன். என் உதவியை நாடுபவர்களைக் குணப்படுத்தும் மகிழ்ச்சியை நான் நீண்ட காலமாக அனுபவிப்பேன்...’
இன்றைய மருத்துவர்களில் பலர், இன்றைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள இந்த உறுதிமொழி போதுமானதாக இல்லை என்று நம்புகிறார்கள். எடுத்துக்காட்டாக, சட்டபூர்வமாக்கப்பட்ட கருக்கலைப்பு, மருத்துவரின் உதவியுடன் தற்கொலை மற்றும் ஹிப்போகிரட்டிஸின் காலத்தில் கேள்விப்படாத பிற நடைமுறைகள்... இப்படி. இருப்பினும், மருத்துவர்கள் இன்னும் ஹிப்போகிரட்டிஸின் பின்வரும் கொள்கைகளைப் புனிதமாக வைத்திருக்கிறார்கள்...
* நோயாளிகளை முடிந்தவரை சிறந்த முறையில் நடத்துதல்.
* தீங்கு மற்றும் அநீதியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தல்.
* நோயாளியின் தனியுரிமையைப் பாதுகாத்தல்.
* அடுத்த தலைமுறைக்கு மருத்துவத்தின் ரகசியங்களைக் கற்பித்தல்.
சரகர்
பண்டைய இந்தியாவில் உருவாக்கப்பட்ட மருத்துவ முறை மற்றும் வாழ்க்கை முறையான ஆயுர்வேதத்துக்கு முக்கிய பங்களித்தவர்களில் குறிப்பிடத்தக்க அறிஞர் சரகர். இவரே பாரம்பர்ய இந்திய மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தின் அடிப்படை நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதா என்ற மருத்துவ நூலின் ஆசிரியராக அறியப்படுகிறார். சரகர் பண்டைய இந்தியாவில் கி.மு 200 - கி.பி 200-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இவர், காஷ்மீரைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார்.
சரகர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர். சரக சம்ஹிதை நூலில் இதயம், சுவாசம், ரத்தக்கொதிப்பு, பற்கள் போன்றவற்றின் நோய்களுக்கான சிகிச்சைமுறை, நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு, உறக்கம், ஓய்வு சார்ந்த கட்டுப்பாடுகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. சரகரின் நூல்களில் கூறப்பட்டுள்ள மூலிகைகள், மருத்துவ முறைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தக் கூடியவர்கள் இல்லாததால், இந்நூல்களைப் பற்றிய புரிந்துணர்வு இந்தியாவில் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது.
சரகா என்ற சொல் `அலைந்து திரிந்த அறிஞர்கள்’ அல்லது `அலைந்து திரியும் மருத்துவர்கள்’ எனப் பொருள்படுகிறது. சரகர் என்ன சொல்கிறார்?
`இந்திய பாரம்பர்யம் மற்றும் ஆயுர்வேத முறைப்படி, ஆரோக்கியமும் நோய்களும் முன்னரே தீர்மானிக்கப்படவில்லை. மனித முயற்சி மற்றும் வாழ்க்கைமுறையில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒருவரின் வாழ்நாளை நீடிக்கலாம். சிகிச்சை அளிப்பதைவிட, அனைத்து வகையான நோய்களையும் தடுப்பதே சிறப்பு. இயற்கை மற்றும் ஆறு பருவங்களுக்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மறுசீரமைத்தால் முழுமையான ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் அளிக்கலாம்.

குணப்படுத்துவதைவிட தடுப்பு சிறந்தது என்பதே சரகரின் முதன்மைக் கோட்பாடு. `அறிவு மற்றும் புரிதலின் விளக்கைக் கொண்டு நோயாளியின் உடலில் நுழையத் தவறிய ஒரு மருத்துவர் ஒருபோதும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது. நோயாளியின் நோயை பாதிக்கும் சூழல் உட்பட அனைத்துக் காரணிகளையும் அவர் முதலில் ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் சிகிச்சையை பரிந்துரைக்க வேண்டும். நோயைக் குணப்படுத்துவதைவிட நோய் வராமல் தடுப்பதுதான் முக்கியம்’ என்கிறார் சரகர்.
`இயக்கம் (வாதம்), உருமாற்றம் (பித்தம்) மற்றும் உயவு மற்றும் நிலைத்தன்மை (கபம்) ஆகிய மூன்று தோஷங்கள் அல்லது கொள்கைகளைக் கொண்டிருப்பதால்தான் ஓர் உடல் செயல்படுகிறது. உண்ணும் உணவின் மீது தாதுக்கள் (ரத்தம், சதை மற்றும் மஜ்ஜை) செயல்படும்போது இந்த தோஷங்கள் உருவாகின்றன. உண்ணும் அதே அளவு உணவுக்கு, ஒவ்வோர் உடலும் வேறுபட்ட அளவு தோஷத்தை உற்பத்தி செய்கிறது. அதனால்தான் ஓர் உடல் மற்றொன்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது’ என்கிற சரகர், மனித உடலில் உள்ள மூன்று தோஷங்களின் சமநிலை சீர்குலைந்தால் நோய் ஏற்படுகிறது என்று வலியுறுத்தினார். சமநிலையை மீட்டெடுக்க அவர் மருந்துகளைப் பரிந்துரைத்தார். உடலில் கிருமிகள் இருப்பதை அவர் அறிந்திருந்தாலும், அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
சரகர் மனித உடலின் உடற்கூறியலை ஆய்வு செய்தார். மனித உடலில் உள்ள பற்கள் உட்பட மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 360 என அவர் கருதினார். இதயத்தை உடலைக் கட்டுப்படுத்தும் மையமாக அவர் கருதினார். 13 முக்கிய சேனல்கள் மூலம் இதயம் முழு உடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த சேனல்களைத் தவிர, பல்வேறு அளவுகளில் எண்ணற்ற வேறு விஷயங்கள் இருந்தன. அவையே பல்வேறு திசுக்களுக்கு ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு, கழிவுப் பொருள்கள் வெளியேறவும் வழிகாட்டுகின்றன. முக்கிய சேனல்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் உடலில் ஒரு நோய் அல்லது சிதைவு ஏற்படுகிறது.
அக்னிவேசா என்ற அறிஞர் பண்டைய மருத்துவர் ஆத்ரேயாவின் வழிகாட்டுதலின்கீழ், கி.மு 8-ம் நூற்றாண்டில் ஒரு கலைக்களஞ்சிய மருத்துவத் தொகுப்பை உருவாக்கினார். அதன் பெயர் அக்னிவேச சம்ஹிதை. இந்த நூல் சரகரால் திருத்தப்பட்டு சரக சம்ஹிதை என்ற பெயரில் வெளிவந்தது. சரக சம்ஹிதை அதன் பெயரைத் தக்க வைத்துக்கொண்டு, வேறு ஆசிரியர்களால் பதினேழு அத்தியாயங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. சரக சம்ஹிதா என்பது ஆயுர்வேதத்தின் இரண்டு அடிப்படை நூல்களில் ஒன்றாகும் (மற்றொன்று சுஷ்ருத சம்ஹிதா). சரக சம்ஹிதா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு நிலையான படைப்பாக இருந்தது. இது அரபு மற்றும் லத்தீன் உட்பட பல அயல் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஹிப்போகிரட்டீஸ் Vs சரகர்
* `மருத்துவத்தின் தந்தை’ ஹிப்போகிரட்டிஸ் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களின் ஆவணப்படுத்துதல் முயற்சிகளின் காரணமாக அதன் முக்கிய அம்சங்கள் இன்றுவரை உலகெங்கும் மருத்துவத் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், சரகரின் எண்ணக் குவியல்களில் குறிப்பிடத்தக்க கருத்துகள் இருந்தாலும்கூட, அவற்றை உலகெங்கும் எடுத்துச் செல்லும் முயற்சி நடைபெறவில்லை. ஒருவேளை அப்படியொரு பரவல் சாத்தியப்பட்டிருந்தால் இந்த இரு மேதைகளின் ஆய்வுப்பணிகளும் இணைத்து மேம்படுத்தப்பட்டு மருத்துவ உலகம் இன்னும் வேகமாக வளர அப்போதே ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
* வரும் முன் காப்பதே சிறப்பு என்பதே சரகரின் பிரதான கொள்கை. இதுவே மருத்துவ உலகின் அடிப்படை நோக்கமாக உருவாகி இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, வந்த பின் சிகிச்சை அளிப்பதையே இன்றைய மருத்துவம் வணிக இலக்காக மாற்றிக்கொண்டுவிட்டது. அதனால்தான் `மக்கள் மருத்துவம்’ என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டது.
* மருத்துவர்களுக்கான அடிப்படை நெறிமுறைகளை உருவாக்கி, அவற்றைப் பிரபலப்படுத்துவதிலும் வெற்றி கண்டிருக்கிறார் ஹிப்போகிரட்டிஸ். சரகர் வாழ்ந்த இந்திய துணைக்கண்டத்திலும்கூட ஹிப்போகிரட்டிஸ் உறுதிமொழியையே எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
* உணவே மருந்து என்கிற கொள்கை ஹிப்போகிரட்டிஸ் கூறியது மட்டுமல்ல; இந்திய பாரம்பர்யத்திலும் காலங்காலமாக இதுவே பின்பற்றப்பட்டு வருகிறது.
* பித்தம், ரத்தம் போன்ற கருத்துகளில் சில வேறுபாடுகள் இருந்தாலும்கூட, இரு அறிஞர்களும் ஏறக்குறைய ஒரேவிதமான எண்ணத்தையே கொண்டிருந்தனர்.
- சஹானா