Published:Updated:

விறுவிறுப்பாக நடக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகள்... +2 தேர்வு முடிவுகள் எப்போது?

தேர்வெழுதும் மாணவிகள்
தேர்வெழுதும் மாணவிகள்

"வழக்கம்போல ஓர் ஆசிரியர் காலை மற்றும் மதிய வேளையில் தலா 12 விடைத்தாள்களை மட்டுமே திருத்துகிறோம். அந்த எண்ணிக்கையில் மாற்றமில்லை."

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையே கடந்த மார்ச் இறுதியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்தன. பின்னர் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதால், விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமாகின. இந்த நிலையில் அந்தப் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

தேர்வெழுதும் மாணவிகள்
தேர்வெழுதும் மாணவிகள்
ஆண்டுதோறும் தமிழகம் முழுக்க சராசரியாக 50 முதல் 70 மையங்களில் மட்டுமே 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும். இந்த ஆண்டு ஆசிரியர்களின் நலன் கருதியும், விரைவாகப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காகவும், 200-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் முந்தைய ஆண்டுகளில் சராசரியாக 20 நாள்கள் நடைபெற்ற இந்தப் பணிகளை, இந்த ஆண்டு ஒருவாரத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

ஆசிரியர்கள் சிரமமின்றி விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு வருவதற்காகச் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா அச்சத்தின் காரணமாகப் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களின் சொந்த வாகனங்களில்தான் விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்கின்றனர். இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் மையங்கள் எப்படி இயங்குகின்றன என்பது குறித்து அறிய, வட மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம். தன் பெயர் மற்றும் தான் பணியாற்றும் பள்ளி குறித்த விவரங்களைப் பகிர வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேசினார்.

தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள்
தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள்

"விடைத்தாள் திருத்தும் மையத்துக்குள் நுழையும்போதே, வெப்பநிலை சோதிக்கும் கருவியைக் கொண்டு அனைத்து ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்கின்றனர். இதை ஒரு வருகைப்பதிவேட்டில் குறித்து வைத்து, ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களின் உடலில் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கிறதா எனவும் ஆய்வு செய்கிறார்கள். பின்னர், கைகளை சோப்பு கொண்டு கழுவிய பிறகே, ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பிறகு, அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துகிறோம்.

ஆண்டுதோறும் ஆசிரியர்கள் தாங்களேதான் விடைத்தாள் திருத்த பேனா உள்ளிட்ட அவசியமான பொருள்களைக் கொண்டு செல்வோம். இந்த ஆண்டு தினமும் மாஸ்க் மட்டுமல்லாமல், பேனா உள்ளிட்ட தேவையான அனைத்துப் பொருள்களையும் மையத்திலேயே கொடுக்கிறார்கள். தற்போது நாள் முழுக்க மையத்துக்குள் மாஸ்க் அணிந்துகொண்டுதான் பணி செய்கிறோம். முந்தைய ஆண்டுகளில் ஓர் அறையில் ஒரு நீளமான பெஞ்சில் இரு முனைகளிலும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் அமர்ந்திருப்போம். இந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் சமூக இடைவெளியை உறுதிசெய்ய, ஒரு பெஞ்சில் ஓர் ஆசிரியர் மட்டுமே அமர வைக்கப்படுகின்றனர்.

தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள்
தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள்
தொடரும் கொரோனா வார்டு தற்கொலைகள்! காரணம் என்ன? - மனநல மருத்துவர்கள் விளக்கம்

ஆண்டுதோறும் விடைத்தாள் திருத்தும் பணிகள் 20 நாள்களுக்கு மேல் நீடிக்கும். குறிப்பிட்ட ஓர் ஆண்டில் மட்டும் 28 நாள்கள் வரையும் இந்தப் பணி நடந்தது. இந்த ஆண்டில் கடந்த செவ்வாய்க்கிழமை விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கின. வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமையுடன் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம்போல ஓர் ஆசிரியர் காலை மற்றும் மதிய வேளையில் தலா 12 விடைத்தாள்களை மட்டுமே திருத்துகிறோம். அந்த எண்ணிக்கையில் மாற்றமில்லை” என்கிறார்.

ஒவ்வொரு மையத்திலும் தேவைக்கேற்ப பல்வேறு குழுக்கள் பிரிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறும். ஆனால், ஓர் அறையில் ஒரு குழுவைச் சேர்ந்த 8 பேர் மட்டுமே இருப்பார்கள். அதில் ஆறு பேர் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் (உதவித் தேர்வாளர்கள்). அவர்கள் சரியாக விடைத்தாள்களைத் திருத்தியிருக்கிறார்களா என்பதைச் கூர்ந்தாய்வு அலுவலர் (scrutiny officer) ஒருவர் ஆய்வு செய்வார். பிறகு, முதன்மை தேர்வாளர் (chief examiner) ஒருவர் ஆய்வு செய்வார். இப்படி, ஒரு பாடத்துக்குக் குறைந்தபட்சம் இரண்டு குழுக்கள் ஒரு மையத்தில் செயல்படும். மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு மட்டும் மூன்று குழுக்கள் செயல்படும்.

விடைத்தாள் திருத்தும் மையம்
விடைத்தாள் திருத்தும் மையம்
ஓர் ஆசிரியருக்கு ஒரு விடைத்தாள் திருத்துவதற்கு 10 ரூபாய் பணித் தொகையாக (remuneration) வழங்கப்படும். ஒருநாளில் 24 பேப்பர் திருத்தினால் 240 ரூபாய் வழங்கப்படும். தவிர, உணவு உள்ளிட்ட மற்ற தேவைகளுக்காக ஓர் ஆசிரியர் விடைத்தாள் திருத்த வரும் நாள் ஒன்றுக்கு தலா 200 ரூபாய் வழங்கப்படும். மேலும், பயணச் செலவுகளுக்கான தொகையும் வழங்கப்படும்.

விடைத்தாள் திருத்தும் மையத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் மற்றும் கொரோனா சூழலில் பணியாற்றுவது குறித்துப் பேசும் அந்த ஆசிரியர், "பொதுவாக ஒரு மாவட்டத்திலுள்ள மாணவர்களின் விடைத்தாள்கள் வேறு மாவட்டத்தில்தான் திருத்தப்படும். அந்த விடைத்தாள்கள் எங்கு செல்கிறது, எந்த ஆசிரியர் திருத்தியது உள்ளிட்ட விவரங்கள் மிகவும் ரகசியம் காக்கப்படும். அந்த விஷயங்கள் எங்களுக்குக்கூட தெரியாது. நாங்கள் திருத்துவது வேறு மாவட்ட மாணவர்களின் விடைத்தாள் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும். மற்றபடி அது அரசு அல்லது தனியார் பள்ளி மாணவர்களின் விடைத்தாளா? அந்த மாணவர் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர் என்பது உட்பட எந்த விஷயங்களும் எங்களுக்குத் தெரியாது.

தேர்வு முடிகளைப் பார்க்கும் மாணவிகள்
தேர்வு முடிகளைப் பார்க்கும் மாணவிகள்

விடைத்தாள் திருத்தும் பணியின்போது அனைத்து ஆசிரியர்களும் தங்களின் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும். மிக அவசியமான தேவைக்கு மட்டும் அறையிலிருந்து வெளியில் சென்று செல்போனைப் பயன்படுத்தலாம். அதேநேரம் ஓர் அறையில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் வெப் கேமராவால் கண்காணிக்கப்படும்.

சில தினங்களுக்கு முன்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியபோது நான் உட்பட சக ஆசிரியர்கள் பலரும் கொரோனா அச்சுறுத்தலால் பயந்தோம். ஆனால், விடைத்தாள் திருத்தும் மையங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். எனவே, எந்த அச்சமும் இல்லாமல் விடைத்தாள் திருத்தும் பணிகளைச் செய்கிறோம். கொரோனா அச்சத்தால் என்னுடைய இருசக்கர வாகனத்தில்தான் செல்கிறேன். அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்புப் பேருந்தைப் பயன்படுத்தவில்லை. ஊரடங்கு நீடிக்கும் நிலையில், எங்களது அடையாள அட்டையைக் காண்பித்தால் காவல்துறையினர் எந்தக் கெடுபிடிகளும் செய்யாமல் உடனே எங்களை விட்டுவிடுகின்றனர். இதனால் தற்போது தினமும் விடைத்தாள் திருத்தச் செல்வதற்கான போக்குவரத்துப் பயன்பாட்டில் எந்தச் சிக்கலும் இல்லை.

தேர்வெழுதும் மாணவிகள்
தேர்வெழுதும் மாணவிகள்

விடைத்தாள் திருத்தும் பணிகளில் பெரும்பாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவார்கள். உடல்நிலை சரியில்லாதது உட்பட தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டும் அவர்களில் சில ஆசிரியர்களுக்கு மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். தேவை இருக்கும்பட்சத்தில் மட்டும் அனுபவமுள்ள சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் இந்தப் பணிக்குப் பயன்படுத்தப்படுவார்கள்” என்று முடித்தார்.

தமிழ்நாடு முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட பிறகே, இந்த ஆண்டில் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டைப்போலவே, இனிவரும் ஆண்டுகளிலும் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் அனைத்துப் பணிகளையும் எளிதாகவும் விரைவாகவும் முடிக்க முடியும் என்பது ஆசிரியர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அரசுத் தேர்வுகள் இயக்ககம்

12-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வெழுதிய பல லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்க தமிழக அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தை அணுகினோம். யாருமே அழைப்பை ஏற்கவில்லை.

கல்வித்துறை வட்டாரத்தில் விசாரிக்கையில், "விடைத்தாள் திருத்தும் பணிகளுக்குப் பிறகு, மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் சில வாரத்தில் முடிந்துவிடும். அதன்படி நடந்தால் வரும் ஜூன் இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடலாம். ஆனால், கொரோனா அச்சம் காரணமாகச் சூழலுக்கு ஏற்ப தமிழக அரசு முடிவெடுக்கும் பட்சத்தில், தேர்வு முடிவுகள் வெளியாவதற்குத் தாமதமாகவும் வாய்ப்புள்ளது” என்று கூறினர்.

அடுத்த கட்டுரைக்கு