Published:Updated:

எந்தெந்த படிப்புகளுக்கு எதிர்காலம்?

எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?
பிரீமியம் ஸ்டோரி
எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?

பொறியியல், மருத்துவப் படிப்புகளில் போட்டியைக் கையாளும் வகையில் டெசிமல் பாய்ன்டில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

எந்தெந்த படிப்புகளுக்கு எதிர்காலம்?

பொறியியல், மருத்துவப் படிப்புகளில் போட்டியைக் கையாளும் வகையில் டெசிமல் பாய்ன்டில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

Published:Updated:
எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?
பிரீமியம் ஸ்டோரி
எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?

கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கல்வியில் மிகப்பெரும் தேக்கமும் குழப்பமும் நிலவுகின்றன. தேர்வே எழுதாமல் பிளஸ் டூ மாணவர்கள் ஆல்பாஸ் செய்யப்பட்டுள்ளார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் 50 சதவிகிதம், பிளஸ் 1 மதிப்பெண்ணில் 20 சதவிகிதம், பிளஸ் 2 செய்முறை மதிப்பெண் + உள்மதிப்பீடு 30 சதவிகிதம் என மதிப்பெண் தீர்மானிக்கப்பட்டு, உயர்கல்வி மாணவர் சேர்க்கையும் தொடங்கிவிட்டது.

பொறியியல், மருத்துவப் படிப்புகளில் போட்டியைக் கையாளும் வகையில் டெசிமல் பாய்ன்டில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. பெரும்பாலான மாணவர்களுக்கு அவர்களே நம்பமுடியாத அளவுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.

எந்தெந்த படிப்புகளுக்கு எதிர்காலம்?

இதுவரையில்லாத போட்டி

புதிய மதிப்பீட்டு முறையால் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உட்பட எல்லாப் படிப்புகளுக்குமான கட்-ஆஃப் மதிப்பெண்களும் உயர்ந்துள்ளன. அதனால் பெரும் போட்டியை மாணவர்கள் சந்திக்கப்போகிறார்கள்.

“அறிவியல் பிரிவில் மட்டும் 551 - 600 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் 30,599 பேர். கடந்த ஆண்டுகளில் இதில் மூன்றில் ஒரு பங்கு இருந்தால் பெரிது. கடந்த ஆண்டு கட்-ஆஃப் 190-க்கு மேல் எடுத்தவர்கள் 3,445 பேர். இந்த ஆண்டு 9,000 பேர். கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம். கடந்த ஆண்டு 180-க்கு மேல் எடுத்தவர்கள் 9,190. இந்த ஆண்டு 22,000. கடந்த ஆண்டு 170-க்கு மேல் எடுத்தவர்கள் 15,550. இந்த ஆண்டு 38,000. கடந்த ஆண்டு 160-க்கு மேல் எடுத்தவர்கள் 22,999. இந்த ஆண்டு 45,000.

நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சலிங் நடக்கும்போது, ஒரு பேட்ச் கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்தபிறகு மற்றொரு பேட்ச் உள்ளே போகும். ஒரு பேட்ச்சில் 350 மாணவர்கள் இருப்பார்கள். ஆன்லைன் கவுன்சலிங்கில் ஒரே நேரத்தில் 15,000 பேர் உள்ளே நுழைவார்கள். இந்த முறை, பெரும்பாலானோர் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதால் 0.1 என்ற அளவுக்குக்கூடப் போட்டி இருக்கலாம்...” என்கிறார் கல்வியாளர் ரமேஷ் பிரபா.

எந்தெந்த படிப்புகளுக்கு எதிர்காலம்?

எல்லோருக்கும் இன்ஜினீயரிங் சீட்

கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு முன்பாகவே கவுன்சலிங் நடத்தப்பட்டதால் நீட் எழுதிய, பிளஸ் டூ டாப் ஸ்கோரர் பலரும் அரசின் டாப் பொறியியல் கல்லூரிகளில் சீட் பெற்றுவிட்டார்கள். பிறகு நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ் கிடைத்ததால் இன்ஜினீயரிங் வேண்டாம் என்று சென்றுவிட்டார்கள். அப்படி டாப் கல்லூரிகளில் 300-க்கும் மேற்பட்ட சீட்கள் காலியாகிவிட்டன. இந்த ஆண்டு நீட் தேர்வு நடந்து கீ ஆன்சர் வெளியிடப்பட்ட பிறகே இன்ஜினீயரிங் கவுன்சலிங் நடப்பதால் இந்தக் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

“பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக விண்ணப்பித்த எல்லோருக்கும் சீட் வழங்கியும் 75,000 சீட்கள் மிச்சமிருந்தன. மேலும், விண்ணப்பிப்பவர்களில் 60 முதல் 70 சதவிகிதம் மட்டுமே கவுன்சலிங்கில் பங்கேற்கிறார்கள். அதனால் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், பதற்றமில்லாமல் காத்திருக்கலாம். நல்ல கல்லூரி கிடைக்கும்.

இன்ஜினீயரிங்கில், காலேஜ் ஆப் இன்ஜினீயரிங் கிண்டி, ஏசி டெக் போன்ற அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள் மட்டுமே 27 இருக்கின்றன. இந்தக் கல்லூரிகளில் வெறும் 7,500 முதல் 15,000 ரூபாய்க்குள் படிப்பை முடித்துவிடலாம். பொறியியல் படிக்க விரும்புபவர்கள் கவுன்சலிங் வரை பதற்றமில்லாமல் காத்திருக்கலாம்...” என்கிறார் ரமேஷ் பிரபா.

எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?

இன்ஜினீயரிங்கைப் பொறுத்தவரை கடந்த சில வருடங்களாகவே சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக் போன்ற கோர் கோர்ஸ்கள்மீது மாணவர்களின் விருப்பம் குறைந்துவிட்டது. கொரோனாவால் பல தொழில்கள் முடங்கிவிட்டன. உற்பத்தித்துறையில் பலரும் வேலையிழந்தார்கள். ஆனால், ஐ.டி துறை மட்டும் வழக்கம்போல இயங்கியது. மென்பொறியாளர்கள் வீட்டில் அமர்ந்து ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்தார்கள். இந்த ஆண்டு அட்மிஷனில் இது எதிரொலிக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

“இந்த ஆண்டு மாணவர்களின் பெருவிருப்பமாக கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளே இருக்கின்றன. குறிப்பாக, டேட்டா சயின்ஸ் மீது மாணவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். சமீபமாக சர்வீஸ் கம்பெனிகளே அதிகமாக வளாக நேர்காணலுக்கு வருகின்றன. கலை அறிவியல் படிப்புகளிலும் டேட்டா சயின்ஸ் படிப்புக்கு வரவேற்பு இருக்கிறது. ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகளையும் மாணவர்கள் விரும்புகிறார்கள். இளநிலைப் படிப்புகளோடு ஒப்பிடும்போது எம்.டெக், எம்.எஸ்ஸி போன்ற ஒருங்கிணைந்த படிப்புகளுக்குக் கட்டணமும் குறைவு என்பதால் அப்படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம்” என்கிறார் வி.ஐ.டி கல்வி நிறுவனங்களின் இளநிலை சேர்க்கை இயக்குநர் கலைச்செல்வன்.

கலைச்செல்வன்
கலைச்செல்வன்

படிப்பைத் தேர்வு செய்வது எப்படி?

“ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரும் ஐ.டி, ஐ.டி என்று சேர்ந்தார்கள். அதன்பிறகு இ.சி.இ-யில் குவித்தார்கள். கடந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மீது மாணவர்களின் கவனம் சென்றது. இந்த ஆண்டும் அதே டிரெண்ட்தான். அதேநேரம், 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 60 சதவிகிதம் இடங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், இ.இ.இ, இ.சி.இ, மெக்கானிக்கல், ஐ.டி ஆகிய 6 படிப்புகளில் மட்டுமே உள்ளன. கிட்டத்தட்ட ஒரு லட்சம் இடங்கள். இவற்றைத்தான் பெரும்பாலான மாணவர்கள் எடுத்தாக வேண்டும்.

படிப்பைத் தேர்வுசெய்வதைப்போல கல்லூரியைத் தேர்வுசெய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு நல்ல கல்லூரியில் சுமாரான பிரிவைப் படித்தால்கூட நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும். பெரிய எதிர்காலம் இருப்பதாகக் கருதும் ஒரு படிப்பை சுமாரான கல்லூரியில் படித்தால் வேலை கிடைப்பது கடினம்.

இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பல புதிய பிரிவுகள் வந்துள்ளன. ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் அண்ட் மெஷின் லேர்னிங், பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் அண்ட் சைபர் செக்யூரிட்டி போன்ற படிப்புகள் பல கல்லூரிகளில் வந்துள்ளன. இந்தப் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கலை அறிவியலில், பி.காம் எப்போதும் எவர்கிரீன். பேங்கிங், இன்ஷூரன்ஸ், அட்வர்டைசிங், கோ-ஆப்பரேட்டிவ் மேனேஜ்மென்ட், கார்ப்பரேட் செகரட்ரிஷிப் என 21 வகையான பி.காம் படிப்புகள் தமிழகத்தில் உள்ளன. பி.காம் படித்தபடியே சி.ஏ, கார்ப்பரேட் செகரட்ரிஷிப் போன்ற தேர்வுகளையும் எழுதுவது எதிர்காலத்தை வளப்படுத்தும்.

பி.ஏ எக்கனாமிக்ஸ், சோஷியாலஜி, பிபிஏ ஆகிய மூன்றும் எப்போதும் நல்ல எதிர்காலம் தரும் படிப்புகள். தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் இரண்டுக்கும் சமீபமாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. ‘கன்டென்ட் ரைட்டர்’ என்ற புதிய பணிக்கு ஏராளமான தேவைகள் இருக்கின்றன. பி.பி.ஓவில் ஆங்கில இலக்கியம் படித்தவர்களை அதிகம் எடுக்கிறார்கள். ஒருகாலத்தில் பி.பி.ஓ-க்களில் இன்ஜினீயரிங் படித்தவர்களைத்தான் எடுத்தார்கள். ஆனால் இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தருவது சிரமமாக இருந்ததால், இப்போது ஆங்கிலம் படித்தவர்களைத் தேர்வுசெய்து கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுக்கிறார்கள். பி.எஸ்ஸி சைக்காலஜி, விஷூவல் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக் மீடியா படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சமீபத்தில் பி.எஸ்.டபிள்யூ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம்” என்கிறார் ரமேஷ் பிரபா.

கலை அறிவியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நினைத்தால் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரே கல்லூரியில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நினைத்தாலும் தனித்தனியாகவே விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தது 4 முதல் 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வைப்பது நல்லது.

ரமேஷ் பிரபா
ரமேஷ் பிரபா

ஆன்லைன் படிப்புகளில் சேரலாமா?

கொரோனாத் தாக்கத்துக்குப் பிறகு, ஆன்லைன் பட்டப்படிப்புகளைப் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. கொரோனாவுக்கு முன்பே பல நாடுகள் ஆன்லைன் கல்விக்கு முன்னேறிவிட்டன. அங்கெல்லாம் வழக்கமான படிப்புகளுக்கு என்ன மதிப்போ, அதே மதிப்புதான் ஆன்லைன் படிப்புக்கும்.

“அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழில்நுட்பம், இணைய வசதிகள் நிறைவாக இருக்கின்றன. ஆன்லைன் கல்விக்கான அடிப்படைக் கட்டமைப்பும் அங்கெல்லாம் வலுவாக இருக்கிறது. இங்கு சில வருடங்களுக்கு முன்புவரை ஆன்லைன் பட்டப்படிப்பை அங்கீகரிக்கவே இல்லை. இப்போதுதான் யுசிஜி சில கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இனிமேல்தான் அவை கவனம் பெறும். தொலைதூரக் கல்வியில் நமக்குச் சில படிப்பினைகள் இருக்கின்றன. பலர் தேர்வே எழுதாமல் டிகிரி வாங்கினார்கள். அதுமாதிரியான தவறுகள் ஏதும் ஆன்லைன் பட்டப்படிப்பில் நிகழ்ந்துவிடக்கூடாது. தரமான கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் பட்டப்படிப்பில் சேர்வது பாதுகாப்பானது” என்கிறார் ரமேஷ் பிரபா.

எதிர்காலம் என்னாகும்?

‘கொரோனா செட்’, ‘தேர்வெழுதாமல் பாஸ் செய்த குரூப்’ என்றெல்லாம் மாணவர்களைக் கிண்டல் செய்கிறார்கள் மீம் கிரியேட்டர்கள். இது மாணவர்களின் தவறல்ல; உலகம் முழுவதும் இதுதான் நிலை. இந்தச் சூழலிலிருந்து மாணவர்களை மீட்கவேண்டிய கடமை பெற்றோருக்கு மட்டுமல்ல, பள்ளிக்கும் சமூகத்துக்கும்கூட இருக்கிறது.

உயர்கல்விக்குத் தேவையான திறன்களை வளர்ப்பவை பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புகள்தான். இந்த இரண்டு வகுப்புகளையும் முறைப்படி படிக்காமல் இந்த ஆண்டு கல்லூரியில் கால் வைக்கிறார்கள் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள்.

“உண்மையில் இது மிகவும் இக்கட்டான சூழல். 18 வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்குத் தடுப்பூசி போட்டு, கல்லூரியைத் திறக்க குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகிவிடும். அதனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்தான். வேலைவாய்ப்பிலும் இது எதிரொலிக்கவே செய்யும். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திக்கொள்ளக் கூடுதலாக உழைக்க வேண்டும். தங்கள் துறையில் புதுப்புது விஷயங்களைத் தேடி அறிய வேண்டும்” என்கிறார் கலைச்செல்வன்.

“இந்த விஷயத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை மட்டுமன்றி, உளவியலாகவும் அவர்களின் நிலையறிந்து ஆசிரியர்கள் உதவவேண்டும். ஏற்கெனவே இங்கு பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட இன்ஜினீயரிங்கில் அரியர் வைக்கும் நிலை இருக்கிறது. காரணம், இன்ஜினீயரிங் கணிதம் சற்று சிரமமானது. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 கணிதத்தையே இந்த மாணவர்கள் முறையாகக் கற்கவில்லை. கல்லூரிகளில் இவர்களுக்கு நேரடியாக இன்ஜினீயரிங் பாடங்களை நடத்தினால் ஒன்றும் புரியாது. அதனால் மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ ஒன்றை உருவாக்கி முதலில் நடத்தவேண்டும். ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாகக் கவனித்து எதிலெல்லாம் சிரமப்படுகிறார்களோ அதில் கவனம் செலுத்த வேண்டும்...” என்கிறார் ரமேஷ் பிரபா.

கொரோனாவால் எல்லா இயல்புகளும் மாறி உலகமே புத்தியல்பைத் தரித்துக்கொண்டிருக்கிறது. கல்வியிலும் அது எதிரொலிக்கிறது. பதற்றமில்லாமல் இந்தச்சூழலைக் கடக்க மாணவர்கள் தயாராக வேண்டும்... பெற்றோரும் ஆசிரியர்களும் அதற்கு உதவவேண்டும்!