மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்? கல்வியாளர் வழிகாட்டல் #DoubtOfCommonMan

மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ இவற்றைப் பற்றியும் இரண்டில் எதில் படித்தால், மாணவரின் எதிர்காலத்திற்கு சிறந்தது என்று, கல்வியாளர் கே.ஆர். மாலதியிடம் கேட்டோம்.
``தமிழகத்தில் ஏராளமான மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன. பல பள்ளிகள் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. உண்மையில் எந்தப் பாடத்திட்டம் சிறந்தது, மெட்ரிக்கா, சி.பி.எஸ்.இ-யா?" என்ற கேள்வியை விகடன் #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருந்தார் வாசகர் மணி.
இந்தக் கேள்வியை அநேகப் பெற்றோர்கள் எதிர்கொண்டிருப்பார்கள். பள்ளி அட்மிஷனின்போதும் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பற்றிப் பேசிக்கொள்வார்களே தவிர, இரண்டு முறைகளைப் பற்றிய விவரம் தெரிந்திருப்போர் சொற்பமே. எனவே, மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எ.ஸ்.இ இவற்றைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் இரண்டில் எதில் படித்தால், மாணவரின் எதிர்காலத்திற்குச் சிறந்தது என்று, கல்வியாளர் கே.ஆர். மாலதியிடம் கேட்டோம்.
பிள்ளைகள் படிக்கும் பாட முறையைப் பற்றிப் பெற்றோர்கள் தெரிந்துகொள்வது நல்ல விஷயம்தான். அப்போதுதான் அவர்களின் படிப்புக்கு உதவுவதோடு, உயர்கல்விக்கு சரியாகத் திட்டமிடவும் முடியும். - கல்வியாளர் மாலதி

மெட்ரிகுலேஷன்
மெட்ரிகுலேஷன் முறையில், பயிற்றுமொழி ஆங்கிலம். அதிகப்பட்சமாக 14 பாடங்கள் வரை நடத்தப்பட்டன. மேலும் தமிழ் மற்றும் விருப்பப்படமாக மூன்றாவதாக ஒரு மொழி கற்பிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் 5 பாடங்கள் மட்டுமே இருப்பதால், ஒரே விதமான சமத்துவமான கல்வியை எல்லோருக்கும் அளிக்க வேண்டும் என அரசு முடிவெடுத்தது. அதனால், 2009 ஆண்டில் கொண்டு வரப்பட்ட, சமச்சீர் பாடத்திட்ட முறைக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் உட்படுத்தப்பட்டன. அதாவது, தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் இவைதாம் அங்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால், அவை பயிற்றுமொழி ஆங்கிலமாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி பயிற்று மொழி பள்ளிகள் இருந்தாலும் அவை எண்ணிக்கையில் மிகவும் குறைவுதான். இயல்பாகவே பெற்றோர்களுக்கு ஆங்கிலம் மீதான ஈர்ப்பால் மெட்ரிகுலேஷன் பள்ளியை நோக்கிச் செல்கின்றனர்.
சி.பி.எஸ்.இ
1950 களில் உத்திரபிரதேச மாநிலத்தில் ஹை ஸ்கூல் போர்டு ஒன்று இருந்தது. அதைத்தான் 1956 ஆம் ஆண்டு, சி.பி.எஸ்.இ என்று மாற்றப்பட்டது. இது உருவானதற்கு முக்கியக் காரணம், மத்திய அரசு ஊழியர்கள் பணிமாறுதலால் இந்தியாவின் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதனால், அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது. எனவே, இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பாடத்திட்டம் உள்ள பள்ளியை உருவாக்கினார்கள். தொடக்கத்தில் ராணுவப் பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகள்தாம் இருந்தன. பின்னாளில் இதில் தனியாரும் நுழைய சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. சிபிஎஸ்இ பள்ளிகளில், பயிற்றுமொழி ஆங்கிலம். கூடுதலாக இந்தி மொழியும் கற்றுத்தரப்படும்.

ஏனெனில், மத்திய அரசுப் பணியாளர்களின் இடமாறுதல் காரணத்தினால், மாணவர்களுக்கு அதுவே உதவும் என நினைத்ததால் அந்த முடிவு எடுத்தனர். கடந்த 15 ஆண்டுகளாக, தனியாரும் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்த வந்ததால், இந்தியுடன் கூடுதலாக இன்னொரு இந்தியமொழியைக் கற்றுத்தர அனுமதி அளித்தது. எனவே, அவர்களின் பிராந்திய மொழியையும் கூடுதலாகக் கற்றுத்தர முடிவெடுத்தனர். தமிழகத்தில் தமிழ், கர்நாடகாவின் கன்னடம் என்பதாக. இதனால், மும்மொழிக் கல்வியாக மாறிவிட்டது. இந்தியா முழுக்க 19,000 பள்ளிகளும், 25 நாடுகளிலும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன.

தனியார் நுழைந்தது ஏன்?
தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் பெறப்படும் கட்டணத்தை முறைப்படுத்த, 2009 -ம் ஆண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, ஒரு பள்ளி மாணவர்களிடம் இவ்வளவுதான் கட்டணம் வாங்கவேண்டும் என்று நிர்ணயம் செய்தது. இதனால் பலரும் சிபிஎஸ்இ பள்ளியைத் தொடங்கினார்கள். ஏனெனில், இந்தக் கட்டண நிர்ணயம் சிபிஎஸ்இ பள்ளிகளைக் கட்டுப்படுத்தாது என்பதுதான்.
இதனால் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பலவும் தங்கள் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றம் செய்தன. அதிக செலவு செய்துபடிக்கும் படிப்பே சிறந்ததாக இருக்கும் எனப் பிம்பம் மக்கள் மத்தியில் இருப்பதால் சிபிஎஸ்இ பள்ளிகளை நோக்கிச் சென்றனர்.

சிபிஎஸ்இ பாடங்கள் நுழைவுத்தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
இரண்டில் எது சிறந்தது?
கல்வியைப் பொறுத்தவரை பாடங்கள் எல்லாமும் நேஷனல் கரிக்குலம் ஃப்ரேம்வொர்க் வழிகாட்டலில்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால், சிபிஎஸ்இ பாடங்கள் நுழைவுத்தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. JEE உள்ளிட்ட தேர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, சிபிஎஸ்இயில் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்படுகிறது. மாநிலப் பாடத்திட்டத்தில் எல்லாப் பாடங்களும் ஒரே மாதிரியாகப் பார்க்கப்பட்டன. சமீபத்தில்தான் நுழைவுத்தேர்வுகளை மனத்தில் கொண்டு மாற்றங்கள் நடந்திருக்கின்றன. நம்முடைய பாடத்திட்டங்களில் படித்த பலரும் மருத்துவப் படிப்புக்கும் பொறியியலும், ஐஐடிக்கும் சென்றனர். நுழைவுத்தேர்வு என்பது அவசியமாகும்போது மாணவர்கள் மனப்பாட முறையிலிருந்து மாற வேண்டியிருக்கிறது. எனவே, இதுதான் சிறந்தது அது சிறந்தது அல்ல என்று சொல்லமுடியாது. ஒரு மாணவருக்கு ஏற்றது என்பதை அறிந்துகொள்வதே அவசியம்.