Published:Updated:

தொடரும் கொரோனா... பள்ளிகளுக்கு ‘ஜீரோ இயர்’ சாத்தியமா?

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்கள்

நேரடியாகப் பள்ளிக்குப் படிக்கச் சென்றால் எவ்வளவு வாங்குவார்களோ, அதேயளவு கட்டணத்தை ஆன்லைன் கிளாஸுக்கும் வாங்கிக்கொண்டார்கள்

தொடரும் கொரோனா... பள்ளிகளுக்கு ‘ஜீரோ இயர்’ சாத்தியமா?

நேரடியாகப் பள்ளிக்குப் படிக்கச் சென்றால் எவ்வளவு வாங்குவார்களோ, அதேயளவு கட்டணத்தை ஆன்லைன் கிளாஸுக்கும் வாங்கிக்கொண்டார்கள்

Published:Updated:
மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மாணவர்கள்

2020 மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கொரோனாவின் முதல் அலை நாட்டையே நிர்மூலமாக்கியதால், பள்ளிகள், கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டன. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆன்லைன் கிளாஸ் கடந்த ஆண்டு களைகட்டியது. இந்தநிலையில், இந்த ஆண்டும் கொரோனா தனது கோரத்தாண்டவத்தைத் தொடங்கிவிட்டதால், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் செயல்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பேசியபோது, ‘‘சென்ற ஆண்டு முழுமையாகப் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் கிளாஸ் நடத்தினார்கள். பள்ளிகளுக்கு மின்சாரக் கட்டணம், தண்ணீர் செலவு எனப் பல வகைகளிலும் மிச்சமானாலும், நேரடியாகப் பள்ளிக்குப் படிக்கச் சென்றால் எவ்வளவு வாங்குவார்களோ, அதேயளவு கட்டணத்தை ஆன்லைன் கிளாஸுக்கும் வாங்கிக்கொண்டார்கள்.

இளையராஜா, இளமாறன், நந்தகுமார்
இளையராஜா, இளமாறன், நந்தகுமார்

9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் படிப்படியாகப் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க வேண்டிய சமயத்தில் மீண்டும் கொரோனா இரண்டாவது அலை வந்து கெடுத்துவிட்டது. அடுத்த அகடாமிக் வருடத்துக்கான மாணவர் சேர்க்கையைப் பல பள்ளிகள் ஜனவரி, பிப்ரவரியிலேயே தொடங்கி தற்போது முடித்துவிட்டன. இந்த முறை கொரோனா தாக்கம் இருக்காது என்று கருதி பெற்றோர்களும் பணத்தைக் கட்டி சீட்டைப் பெற்றுவிட்டார்கள்.

ஆன்லைன் கிளாஸால் ஏற்படும் சிரமங்களை கடந்த ஆண்டே நாங்கள் அனுபவித்துவிட்டோம். காலை, மாலை இரு வேளை ஆசிரியர்கள் ஆன்லைனில் வந்து கிளாஸ் எடுத்தாலும், வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் படிப்புக்குத் தடையாக உள்ளன. பெரும்பாலான நடுத்தர மக்கள் ஒற்றை அறையை வைத்துக்கொண்டு, வீட்டு வேலையும் செய்ய முடியாமல், படிக்கவைக்கவும் முடியாமல் திண்டாடிவிட்டார்கள். அதிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை படுமோசம். அவர்களின் பெற்றோர்கள் பலருக்கு ஸ்மார்ட்போன்கள் இல்லை, இணையதள வசதியில்லை. இதனால்தான், தமிழக அரசு ’கல்வி’ தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்தியது. இருந்தபோதும் டி.வி-க்களில் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பழகிப்போன மாணவர்களுக்கு, டி.வி மூலம் சொல்லித்தரும் பாடங்கள் மனதில் ஏறவில்லை.

இது போன்ற பல சிக்கல்களைக் கணக்கில் கொண்டுதான், `ஒன்றாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்’ என்று தமிழக அரசு அறிவித்தது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தைப் பார்த்தால், வரும் கல்வியாண்டும் ஆல் பாஸ் போட வேண்டிய சூழலும், ஆன்லைன் கிளாஸ் என்ற தொல்லையும் ஏற்படும் எனத் தெரிகிறது. அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்தே ஓராண்டு பிரேக்விட்டு ஜீரோ இயராக அறிவித்து, அடுத்த ஆண்டு முதல் படிப்பைத் தொடரச் செய்வது என்ற ஒரு முடிவெடுத்தால்கூட நல்லதுதான்” என்றனர்.

கல்வி ஆலோசகர் இளையராஜா, “ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்விதான் ஒரு மாணவருக்கான அடிப்படைக் கல்வி. எப்படி வார்த்தைகளை உச்சரிப்பது, எழுதுவது, வாக்கியமாக அமைப்பது போன்றவற்றை அந்த வகுப்புகளில்தான் கற்றுக்கொள்கிறார்கள். இதை முழுமையாக அறிந்துகொள்ள பள்ளிகளுக்குச் சென்று படிப்பதுதான் ஒரே வழி. ஆனால், காலத்தின் தேவை கருதி, மாணவர்களுக்குக் கல்வி மீதான தொடர்பு விட்டுப்போய்விடக் கூடாது என்பதால், ஆன்லைன் வகுப்புகளும் அவசியமாகின்றன. இதைவிடுத்து ஓராண்டு பிரேக்விடுவது என்பது மாணவர்களின் கல்வியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேசமயம், தனியார் பள்ளிகள் கட்டணக் குறைப்பைச் செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது. அரசு இதில் தலையிட்டு, `ஆன்லைன் வகுப்புக்கு என 20 சதவிகிதக் கட்டணத்தைத்தான் பள்ளிகள் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என உத்தரவு போட வேண்டும். அமையப்போகும் புதிய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார் தெளிவாக.

தொடரும் கொரோனா... பள்ளிகளுக்கு  ‘ஜீரோ இயர்’ சாத்தியமா?


தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறனிடம் பேசியபோது, ‘‘மாணவர்களுக்கு விடுமுறை என்றாலும், ஆசிரியர்களான நாங்கள் தினமும் பள்ளிக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறோம். அடுத்த கல்வியாண்டுக்கு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. உயிரா, படிப்பா என்றால் உயிர்தான் முக்கியம். அதனால்தான் அரசு, `கல்வி டி.வி’ மூலம் பாடங்களை நடத்தியது. முழுமையாக ஜீரோ இயராக அறிவிப்பது சாத்தியமற்றது. அது பிற்காலத்தில் அத்தனை மாணவர்களுக்கும் பாதிப்பாக அமையும். முடிந்தவரை `மைக்ரோ டீச்சிங்’ எனப்படும் ஐந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர், `ஒரு நாள் ஒரு பாடம்’ என்ற நடைமுறையை அமல்படுத்தலாம்” என்றார்.

தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமாரிடம் பேசினோம். ‘‘கொரோனா தாக்கம் தொடருவதால் என்ன செய்வது என்று எங்களுக்கே புரியவில்லை. புதிய அரசு அமையட்டும் எனக் காத்திருக்கிறோம். புதிய முதல்வர் பொறுப்பேற்றதும், அவரை நேரடியாகச் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவிருக்கிறோம். ஆந்திராவில் பள்ளிகள் மூடப்பட்டதால், பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 25,000 ரூபாய் பணமும், 25 கிலோ அரிசியும் மாதந்தோறும் அந்த மாநில அரசு வழங்கியது. அமையவிருக்கும் புதிய அரசு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அது போன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். சுகாதாரம்போல கல்வியும் முக்கியம் என்பதால், வரும் கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் ஆன்லைன் கிளாஸ்களை நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism