Published:Updated:

`2 மாவட்ட எல்லைக்குள் சிக்கிய இளையரசனேந்தல் பிர்க்கா!'– உள்ளாட்சித் தேர்தல் சிக்கல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியனுடன் தற்போதைய தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனிலுள்ள இளையரசனேந்தல் பிர்க்காவை இணைக்கப்படாத இரண்டு மாவட்ட நிர்வாகச் சிக்கலால் அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. இதனால் கிராம மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இளையரசனேந்தல்
இளையரசனேந்தல்

முந்தைய திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் இளையரசனேந்தல் பிர்க்காவுக்கு உட்பட்ட அப்பநேரி, அய்யநேரி, சித்திரம்பட்டி, புளியம்குளம், இளையரசனேந்தல், ஜமீன் தேவர்குளம், பிச்சைத்தலைவன் பட்டி, வடக்குப்பட்டி, நக்கலமுத்தன்பட்டி, பிள்ளையார்நத்தம், லெட்சுமியம்மாள்புரம், முக்கூட்டுமலை ஆகிய 12 வருவாய் கிராமங்கள் இருந்தன. 1.5.2008-ல் இளையரசனேந்தல் பிர்க்கா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்டது.

இரண்டு மாவட்டங்கள்
இரண்டு மாவட்டங்கள்

இதையடுத்து இளையரசனேந்தல் பிர்க்காவுக்கு உட்பட்ட கிராமங்கள் வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்ட நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக யூனியன், மின்வாரியம், தொடக்கக்கல்வி ஆகியவை மாற்றப்படாமல் உள்ளன. இந்த 12 வருவாய் கிராமங்கள் கடந்த 11 வருடங்களாக, நிர்வாக ரீதியாக தூத்துக்குடி மாவட்டத்துடனும், உள்ளாட்சி அமைப்பின் ரீதியாக முந்தைய நெல்லை மாவட்டத்திலும், அதாவது தற்போதைய தென்காசி மாவட்டத்திடமும் உள்ளது.

இதனால், 12 வருவாய் கிராம மக்கள் கோவில்பட்டிக்கும், கிராமங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகள் நடைபெற குருவிகுளம் யூனியனுக்கும் மாறி மாறி அலைந்து வருகின்றனர். இளையரசனேந்தல் பிர்க்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி மறுவரையறைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜெயபிரகாஷ் நாராயணசாமி
ஜெயபிரகாஷ் நாராயணசாமி

இதில் திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களும் அடக்கம். தென்காசி மாவட்டத்தில் குருவிகுளம் யூனியன் உள்ளதால், அதற்கு உட்பட்ட இளையரசனேந்தல் பிர்க்காவுக்கு உள்ளாட்சித் தேர்தல் தற்போது இல்லை. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது, அதற்கு உட்பட்ட இளையரசனேந்தல் பிர்க்காவைச் சேர்ந்த 12 கிராமங்களுக்குத் தேர்தல் நடக்காது என்பதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமியிடம் பேசினோம். ``இளையரசனேந்தல் பிர்க்காவிற்குட்பட்ட 12 கிராமங்களை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வலியுறுத்தி, கடந்த 2017-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு நடந்து வருகிறது. மேலும், இதுதொடர்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆட்சியர்கள், மாநில தேர்தல் ஆணையர், உள்ளாட்சித் துறைச் செயலாளர் மற்றும் இயக்குநர் ஆகியோரிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த 12 வருவாய் கிராமங்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாதது, இப்பகுதி மக்களுக்குப் பணியை மேலும் பாதிக்கும்.

இளையரசனேந்தல் சாலை
இளையரசனேந்தல் சாலை

விவசாயிகளின் பயிர்க்காப்பீடு மற்றும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. உடனடினாக இந்த 12 ஊராட்சிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். ``இந்த பிர்க்கா தற்போதைய புதிய தென்காசி மாவட்ட எல்லைக்குள் வருவதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை” என்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்.