Published:Updated:

`இனி சோசலிசம், கம்யூனிஸத்துக்கு இந்த மண்ணில் இடமில்லை!’ - சர்ச்சை அரசன் பிரேஸிலின் அதிபரான கதை #BrazilElection

`இனி சோசலிசம், கம்யூனிஸத்துக்கு இந்த மண்ணில் இடமில்லை!’ - சர்ச்சை அரசன் பிரேஸிலின் அதிபரான கதை #BrazilElection
`இனி சோசலிசம், கம்யூனிஸத்துக்கு இந்த மண்ணில் இடமில்லை!’ - சர்ச்சை அரசன் பிரேஸிலின் அதிபரான கதை #BrazilElection

வலதுசாரி ஆட்சியாளரின் கீழ் பிரேஸில் ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.  


 

பிரேஸில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு தீவிர வலதுசாரி அரசியல்வாதியான சயீர் பொல்சனாரோ (Jair Bolsonaro) `இனி இந்த சோசலிசம், கம்யூனிஸம், ஜனரஞ்சகவாதம், இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றோடு உறவாட முடியாது’ என்னும் பொன்னான வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். பிரசாரத்தின்போதே பல்வேறு சர்ச்சையான கருத்துகளைப் பேசி மக்களை அசரடித்தவர் இவ்வாறு பேசியதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பிரேஸிலில் ஆங்காங்கே பெண்கள் ஒன்றுகூடி அதிபராகப் பொல்சனாரோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பெண்கள் இவரை வெறுப்பதற்கான காரணம் என்ன. அது ஒரு தனிக்கதை, பின்னர் பார்க்கலாம். முதலில் பொல்சனாரோ தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சாதகமான சூழல் உருவானது எப்படி என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.


 

பனிப்போர் காலத்துக்குப் பின் பிரேஸிலில் ராணுவ சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. 1985-ம் ஆண்டு அங்கு குடியரசு ஆட்சி கால்பதித்தது. மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு பிரேஸில் அரசியல் வரலாற்றில் இடதுசாரியே ஆதிக்கம் செலுத்திவந்தது. 2003-ம் ஆண்டு பிரேஸில் அதிபராகத் தொழிலாளர் கட்சியின் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா பதவியேற்றார். அவரின் ஆட்சியில் பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், பொருளாதார சறுக்கல்களைச் சந்தித்தார். 2007-ம் ஆண்டு அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அவருக்குப் பின் 2011-ம் ஆண்டு தில்மா ரூசெஃப் பதவியேற்றார். ஆனால், அவராலும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை. 

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சியினர் தொழிலாளர் கட்சிக்கு எதிராகவும், ஆட்சி கலைய வேண்டும் என்றும் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் நிதி மேலாண்மை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 2016-ம் ஆண்டு அதிபர் பதவியிலிருந்து தில்மா நீக்கப்பட்டார். அவருக்குப் பின் மிச்சேல் தெமர் அதிபரானார். பிரேஸிலில் நடந்த இந்த மாற்றங்கள் அனைத்துக்குமே காரணம் மேல்தட்டு வர்க்கத்தினர்தான் என்கிறது பொருளாதார ஆய்வுக் கட்டுரைகள். 

வீழ்த்தப்பட்ட மக்கள் நாயகன் லூலா... 

இதனிடையே முன்னாள் அதிபர்களான லூலா, தில்மா உள்ளிட்டவர்கள் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது. அரசின் எண்ணெய் நிறுவனத்தில் பணி ஒப்பந்தம் வழங்குவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாக லூலா மீது புகார் கூறப்பட்டது. மக்களின் நாயகனாக இருந்த 72 வயது லூலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. லூலாவை விடுவிக்கும்படி பலர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். அவருக்கு எதிராகப் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாகப் பிரேஸிலில் குறுந்தகவல்கள் பரவின. புரட்சி வெடிக்கும் என உலக நாடுகள் எதிர்பார்த்தன. எதுவும் பலனளிக்கவில்லை. மக்களின் உணர்ச்சிகளுக்குச் சட்டத்தில் இடமில்லை என்றது நீதிமன்றம்.


 

2018 தேர்தல் வந்தது. எதிர்க்கட்சி தொழிலாளர்கள் கட்சியை வீழ்த்த தாங்கள் நீண்ட நாள் வகுத்த திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கின. சிறைத்தண்டனை பெற்ற லூலு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவானது. அவருக்குப் பதில் இடதுசாரிகள் சார்பில் ஃபெர்னாண்டோ ஹத்தாத் களமிறங்கினார். 


பிரேஸில் வரலாற்றை மாற்றிய தேர்தல்... 

2018 பிரேஸில் அதிபர் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் ஃபெர்னாண்டோவும் வலதுசாரி கட்சியான சமூக தாராளவாத கட்சி (Social Liberal Party) சார்பில் சயீர் பொல்சனாரோவும் போட்டியிட்டனர். 

தொழிலாளர் கட்சி மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார், பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவை பொல்சனாரோவுக்கு சாதகமாக அமைந்தது. இதை வைத்தே பிரசாரம் செய்தார். முன்னாள் ராணுவ தளபதியான பொல்சனாரோ பிரசாரத்தின்போது சில விசித்திரமான வாக்குறுதிகளை முன்வைத்தார்.


 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் துப்பாக்கி உரிமம் பெறுவதை எளிமையாக்குவோம், போலீஸ் விசாரணையின்போது சித்ரவதை செய்யும் முறையை சட்டபூர்வமாக்குவோம், ட்ரம்ப் போலவே பாரிஸ் பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவோம். அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். இன்னும் நிறைய நிறைய... மூச்சு முட்டும் அளவுக்குப் பிரசாரத்தின்போது சர்ச்சைகளின் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். பல சமயம் இனவெறியை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரசாரத்தின்போதே இவருக்கு எதிராக மக்கள் இணையத்தில் கொந்தளித்தனர். அப்படியிருந்தும் அதிபர் தேர்தலில் 55% வாக்குகள் பெற்று பொல்சனாரோ வெற்றி மகுடம் சூடினார். இவரின் இந்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர்கள் மேல்தட்டு வர்க்கத்தினரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களும்தான். அவர்களின் கண்களுக்கு இவர் பண்பாட்டு பாதுகாவலான தெரிந்திருக்கிறார் என்கின்றனர் பெண் சமூக ஆர்வலர்கள்.

சர்ச்சை நாயகனுக்கு எதிராக வெடித்த #EleNao போராட்டம்...

கட்டுரையின் தொடக்கத்தில் பிரேஸில் பெண்கள் இவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்குக் காரணம் இவரின் சர்ச்சையான ஆணாதிக்க கருத்துகள்தான். ஒருமுறை தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற பெண் உறுப்பினரைக் குறிப்பிட்டு `உன்னை பாலியல் வன்கொடுமை செய்யமாட்டேன். நீ அதற்குக் தகுதியானவர் கிடையாது’ என்றார். இந்தப் பேச்சு பெண்களின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பொல்சனாரோவுக்கு எதிராக # EleNao அதாவது # NotHim என்ற பிரசாரத்தை இணையத்தில் மேற்கொண்டனர். இவ்வளவு சர்ச்சைகளை உள்ளடக்கிய இவரின் அரசியல் வாழ்க்கையில் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் இடம்பெறவில்லை. இந்த ஒரு காரணமே இவரை அதிபராகத் தேர்வு செய்ய வைத்ததாக இவரின் ஆதரவாளர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.


வெற்றி உரை.. 

அதிபர் தேர்தல் முடிவு வந்ததும் ஃபேஸ்புக் வாயிலாக வெற்றி உரையாற்றினார். அதில் அவர் பேசிய சில வரிகள் பிரேஸில் நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வண்ணம் உள்ளது. 

“இனி ஜனநாயகம், சோசலிசம், கம்யூனிஸம், ஜனரஞ்சகவாதம், இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றோடு உறவாட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. அதற்காக சர்வாதிகார ஆட்சி என்று அர்த்தம் கிடையாது. இது வெறும் வார்த்தைகள் அல்ல. கடவுளின் முன் நான் கொடுக்கும் வாக்குறுதி’ என்றார். கூடவே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் வாழ்த்து சொன்னதாகவும் அது தனக்கு பெருமகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 


 

`சிறையில் அடைபட்டிருக்கும் லூலா அளவுக்கு பிரேஸில் மக்களின் மனதில் பொல்சனாரோவால் இடம்பிடிக்க முடியாது. ஆனாலும் அவர் நேர்மையானவர் என்று நினைக்கிறோம். புதிதாக ஏதாவது செய்வார் என்று நம்புகிறோம்’ என்று பிரேஸில் இளைஞர்கள் இணையத்தில் பதிந்து வருகின்றனர்.பிரேஸில் மக்களுக்கு பொல்சனாரோ மாற்றம் கொண்டு வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மாற்றம் வரும் என்று நம்புவோம்!