Published:Updated:

‘பா.ம.க-விற்காக எம்.பியை ஓரம்கட்டிய அ.தி.மு.க!’ -அரக்கோணம் தொகுதியில் சலசலப்பு

‘பா.ம.க-விற்காக எம்.பியை ஓரம்கட்டிய அ.தி.மு.க!’ -அரக்கோணம் தொகுதியில் சலசலப்பு
‘பா.ம.க-விற்காக எம்.பியை ஓரம்கட்டிய அ.தி.மு.க!’ -அரக்கோணம் தொகுதியில் சலசலப்பு

‘பா.ம.க-விற்காக எம்.பியை ஓரம்கட்டிய அ.தி.மு.க!’ -அரக்கோணம் தொகுதியில் சலசலப்பு

``அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியை பா.ம.க-விற்கு தாரைவார்க்கக் கூடாது. மீண்டும் எனக்கே வாய்ப்பு கொடுங்கள்’’ என்று அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார், அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.பி ஹரி. மேலும், சில அ.தி.மு.க நிர்வாகிகளும், அரக்கோணத்தில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்திருப்பதால், அ.தி.மு.க - பா.ம.க கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

வடமாவட்டங்களில் உள்ள முக்கியமான நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாக அரக்கோணம் பார்க்கப்படுகிறது. ஏனெனில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வெற்றிபெற்ற காட்பாடி சட்டமன்றத் தொகுதி, எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள சோளிங்கர் தொகுதி, அந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டித்தரும் ராணிப்பேட்டை தொகுதி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆற்காடு தொகுதி, நாடாளுமன்றத் தொகுதியின் மையப்பகுதியான அரக்கோணம் தொகுதி, முருகர் கோயிலுக்குப் பெயர்போன திருத்தணி தொகுதி என மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்கியிருக்கின்றன. தி.மு.க மற்றும் பா.ம.க-விற்கு கணிசமான வாக்குவங்கி உள்ள அரக்கோணம் தொகுதியை, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கைப்பற்றியது. அதற்கு முக்கியக் காரணம், ஜெயலலிதாவின் ஆளுமைத் திறன் எனலாம். இந்தமுறை, அ.தி.மு.க-வுடன் கூட்டணி உடன்படிக்கை செய்துகொண்டுள்ள பா.ம.க, அரக்கோணம் தொகுதியைக் கேட்டுப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பா.ம.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அரக்கோணம் தொகுதியில் ஏற்கெனவே வெற்றிபெற்று, ரயில்வே துறை இணையமைச்சராக இருந்தவருமான அரங்க வேலுவைக் களமிறக்க பா.ம.க திட்டமிட்டிருக்கிறது. 

அரக்கோணம் தொகுதியை பா.ம.க-விற்கு தாரைவார்க்க, அத்தொகுதியின் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கோ.ஹரி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அரக்கோணம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக அவர், அ.தி.மு.க. தலைமை அலுவகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். அதேபோல், முன்னாள் மாவட்டச் செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை உட்பட வேலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் சில அ.தி.மு.க நிர்வாகிகளும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அரக்கோணத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாத பா.ம.க, தேர்தல் வியூகங்களை அமைத்துவருகிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹரியைச் சரிக்கட்ட முடியாததால், அவரை அ.தி.மு.க ஓரம்கட்டி வருகிறது. வேலூரில் 26-ம் தேதி நடைபெற்ற, ரூ.1,000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு, வேலூர் எம்.பி செங்குட்டுவன் மற்றும் அரக்கோணம் எம்.பி ஹரிக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை. இவர்களுக்குப் பதிலாக, பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை எம்.பி வனரோஜா மட்டும் கலந்துகொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக மாறிய வேலூர் எம்.பி.செங்குட்டுவன், இப்போது எந்த நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் ஒதுங்கி நிற்கிறார். ஆனால், வேலூரில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அரக்கோணம் எம்.பி.ஹரி கலந்துகொள்வார். அப்படிப்பட்டவரை, கூட்டணி சுயநலத்திற்காகக் கழற்றிவிடுவதை ஏற்க முடியாது, என்று கொந்தளிக்கின்றனர் எம்.பி ஹரியின் ஆதரவாளர்கள். இந்தப் பிரச்னை ஒருபுறம் அ.தி.மு.க-விற்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ பார்த்திபன் தலைமையிலான அ.ம.மு.க-வினர், அ.தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிப்பதற்காக, வியூகம் அமைத்துவருகிறார்கள். வீதி, வீதியாக மேடை அமைத்து, அ.தி.மு.க-விற்கு எதிராகப் பிரசாரம் செய்துவருகிறார்கள். இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவில் பலமான வியூகங்களை அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி. 

இந்த இக்கட்டான சூழல், தி.மு.க-விற்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் அ.தி.மு.க, பா.ம.க கட்சிகள் கவனமாக இருக்கின்றன. தி.மு.கவைப் பொறுத்தவரை, அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அரக்கோணம் தொகுதியைக் குறிவைத்திருக்கிறது. 1996-க்கு முன்புவரை, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக அரக்கோணம் தொகுதி இருந்தது. அதன்பிறகு, திராவிடக்கட்சிகளின் வசமானது. இந்தத் தேர்தலில், அரக்கோணம் தொகுதியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு