Published:Updated:

தேர்தல் தேதி அறிவித்த நிலையில் சேலத்தில் அவசர அவசரமாக மடிக்கணினி விநியோகம்

தேர்தல் தேதி அறிவித்த நிலையில் சேலத்தில் அவசர அவசரமாக மடிக்கணினி விநியோகம்
தேர்தல் தேதி அறிவித்த நிலையில் சேலத்தில் அவசர அவசரமாக மடிக்கணினி விநியோகம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி நேற்று மாலை அறிவித்த நிலையில், முதல்வர் மாவட்டமான சேலத்தில் பெரும்பாலான பள்ளிகளில் அவசர அவசரமாக விடிய விடிய மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி விநியோகம் செய்யப்பட்டது. தேர்தலுக்காக ஆளும் அ.தி.மு.க அரசு வழங்கி இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

இதுபற்றி பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, ``தமிழக அரசு கல்வித் துறையின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும். அதை ஒவ்வொரு வருடமும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேரும் காலகட்டத்தில் பள்ளியில் விழா ஏற்பாடு செய்து மடிக்கணினி வழங்குவது வழக்கம்.

ஆனால், நேற்று வேலை நாள்களாக அறிவித்து அனைத்து ஆசிரியர்களையும் பள்ளிக்கு வரச் சொல்லி காலையிலேயே மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து மடிக்கணினி வந்தது. உடனே மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என உத்தரவும் பிறப்பித்தார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாணவர்களைப் பிடிப்பது சிரமம். இருந்தாலும் ஆட்டோவில் சென்று தெருத் தெருவாகச் சொல்லி மாணவர்களைக் கூட்டி வந்து விடிய விடிய மடிக்கணினி வழங்கினோம்.

தேர்தலை மனதில் வைத்து ஆளுங்கட்சியின் நெருக்கடியால் மடிக்கணினி வழங்கப்பட்டது. இதில் ஒரு கூத்து என்னவென்றால் சில பள்ளிகளுக்கு மடிக்கணினி வரவில்லை. அந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு மடிக்கணினி கேட்டு பிரச்னை செய்தார்கள். நேற்று மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து உடனே மடிக்கணினி கொடுக்கச் சொன்னவர்கள்.

இன்று மடிக்கணினி கொடுக்கக் கூடாது என்றும் சொல்லுகிறார்கள். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நாங்கள் பகையாளியாகிற சூழ்நிலை ஏற்படுகிறது. நாங்கள் இன்னும் ஓரிரு நாள்களுக்குள் மடிக்கணினி வழங்காமல் இருக்கும் மாணவர்களுக்கும் வழங்கி விடுவோம்'' என்றார்.
 
இதுபற்றி சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷமூர்த்தி, ``நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் மடிக்கணினியைப் பள்ளிகளில் வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் நேற்று மடிக்கணினி வழங்கி இருப்பார்கள். எந்தெந்த பள்ளிகளில் மடிக்கணினி வழங்கினார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் நாங்கள் அரசு நலத்திட்டங்களைப் பற்றி வாய்திறக்கக் கூடாது. பத்திரிகைகளுக்கும் பேட்டிக் கொடுக்கக் கூடாது'' என்றார்.