Published:Updated:

``என்.எல்.சி மூன்றாவது சுரங்கத் திட்டம்” - கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

``என்.எல்.சி மூன்றாவது சுரங்கத் திட்டம்” - கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை
``என்.எல்.சி மூன்றாவது சுரங்கத் திட்டம்” - கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைக்க சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம் பகுதிகளில்
நிலங்களைக் கையகப்படுத்தும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக
கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர்.

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனம் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைக்க புவனகிரி, கம்மாபுரம் ஒன்றியங்களில் 26 ஊராட்சிகளில் உள்ள 40 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் 12,500 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு இப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்எல்சி நிறுவனம் நிலங்களைக் கையகப்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், மேலும் என்எல்சி நிறுவனம் முன்பு நிலங்களை கையக்படுத்திய மக்களுக்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு, மாற்று இடம் என எதையும் முறையாக வழங்கவில்லை.

அதனால் தங்கள் நிலத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட தரமாட்டோம் எனவும், `கோ பேக் என்.எல்.சி’ எனக் கூறி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிராம மக்களுக்கு ஆதவராகத் தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உட்பட அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து மக்களுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க, எம்.பி. எம்.எல்.ஏ-க்களும் முதல்வரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே பெரியநற்குணம் கிராமத்தில் இப்பகுதி விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கும் நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் திட்டத்தினைக் கைவிடாவிட்டால் வரும் எம்.பி. தேர்தலை, பாதிக்கப்படும் கிராம மக்கள் அனைவரும் புறக்கணிப்போம் என பேனர் வைத்துள்ளனர். கிராம மக்கள் வைத்துள்ள தேர்தல் புறக்கணிப்பு பேனர் அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.