Published:Updated:

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத தேனி - காத்திருக்கும் அ.ம.மு.க!

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத தேனி - காத்திருக்கும் அ.ம.மு.க!
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத தேனி - காத்திருக்கும் அ.ம.மு.க!

அ.ம.மு.க சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பட்டியலில் தேனி தொகுதி இடம்பெறவில்லை. 

இதற்கான காரணம் என்ன என்று தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். ``அ.தி.மு.க-வுக்கு என்றுமே சாதமாக இருப்பது, தென்மாவட்டங்களில் ஒன்றான தேனி மாவட்டம்தான். தற்போது அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்து அ.ம.மு.க உருவாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளில் பெரும்பாலானோர், அ.ம.மு.க பக்கம் சென்றுவிட்டார்கள். இந்த நிலையில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள் என அறிவிப்பதில் அ.தி.மு.க’வும், அ.ம.மு.க’வும் மிக கவனமாக இருக்கிறார்கள். கட்சிக்காரர்களின் ஓட்டுகளை யார் பெருவாரியாக எடுத்துக்கொள்வது என்ற திட்டம் தான் இதற்குக் காரணம். 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அதற்கான வேலைகளில் ரவீந்திரநாத்குமார் தீவிரம் காட்டிவருகிறார். இன்னொருபுறம், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தேனி தொகுதி காங்கிரஸ் வசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேனியில் போட்டியிட்டு இரண்டுமுறை வெற்றிபெற்றவரும், தேனி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவருமான ஜே.எம்.ஆரூண், காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி.வி தினகரனும், ஜே.எம்.ஆரூணும் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் டி.டி.வி தினகரனை வீழ்த்தினார் ஆரூண். 

அதேபோல், 2009-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர், தேனி நாடாளுமன்றத் தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வன், ஆரூண் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வனை வீழ்த்தினார் ஆரூண். தற்போது மீண்டும் ஆரூண் நிறுத்தப்பட்டால் அது அனைத்துக்கட்சிகளுக்குமே சிறிது கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதை அறிந்துதான், டி.டி.வி தினகரன், தங்களது தேனி தொகுதி வேட்பாளரை அறிவிக்கவில்லை. இளவரசி மகன் விவேக், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒருபக்கம் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், மறுபக்கம் விவேக், இன்னொருபக்கம் ஜே.எம்.ஆரூண் என தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.” என்றனர்.

தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க என அனைத்துக் கட்சிகளுமே அறிவிக்கப்படும் வேட்பாளரைப் பொறுத்து வலுவான வேட்பாளரை அறிவிக்கலாம் என காத்துக்கொண்டிருக்கிறார்கள் அ.ம.மு.க-வினர். அனைத்துக்கும் சில தினங்களில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.