Published:Updated:

`ஐ.பெரியசாமி தலைமையில் ஊர்வலம்' - திண்டுக்கல் பிரசாரத்தைத் தொடங்கிய தி.மு.க!

`ஐ.பெரியசாமி தலைமையில் ஊர்வலம்' - திண்டுக்கல் பிரசாரத்தைத் தொடங்கிய தி.மு.க!
`ஐ.பெரியசாமி தலைமையில் ஊர்வலம்' - திண்டுக்கல் பிரசாரத்தைத் தொடங்கிய தி.மு.க!

திண்டுக்கல் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கியது தி.மு.க. திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஜோதி முத்து அறிவிக்கப்பட்டிருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் கவிஞர் திலகபாமா மற்றும் சத்திரப்பட்டி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் போட்டியில் இருந்தன. இந்நிலையில் மாநில துணைப் பொதுச்செயலாளரான ஜோதிமுத்துவை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க போட்டியிடாததால் சோர்வடைந்திருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். இன்றுதான் வேட்பாளரே அறிவிக்கப்பட்டிருக்கிறார். இனிதான் பணிகள் தொடர வேண்டும். ஆனால், கூட்டணியை முதலில் முடிவுசெய்த தி.மு.க, வேட்பாளர்களை அறிவிப்பதிலும் முந்தியது. தற்போது, பிரசாரத்திலும் தி.மு.க முன்னணியில் உள்ளது. திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளர் வேலுச்சாமி, நிலக்கோட்டை இடைத்தேர்தல் வேட்பாளர் சௌந்தரபாண்டியன் இருவரும் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர். மாவட்டச் செயலாளர்கள் சக்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர். பெரியார் சிலை, அண்ணாசிலை, வ.உ.சி சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரசாரத்தைத் தொடங்கினார்கள். சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தவர்களை வேட்பாளர்கள் வணங்கினார்கள்.

 அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, ''மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். தமிழக மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றிபெறும். 18 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க வெற்றிபெறும். அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக முதல்வராகத் ஸ்டாலின் பதவி ஏற்பார்'' என்று தெரிவித்தார்.