Published:Updated:

`எந்த விதத்தில் நியாயம்; எப்படி ஏற்க முடியும்?'- துரைமுருகன் மகனுக்கு எதிராக பொங்கும் திமுக நிர்வாகிகள்

`எந்த விதத்தில் நியாயம்; எப்படி ஏற்க முடியும்?'- துரைமுருகன் மகனுக்கு எதிராக பொங்கும் திமுக நிர்வாகிகள்
`எந்த விதத்தில் நியாயம்; எப்படி ஏற்க முடியும்?'- துரைமுருகன் மகனுக்கு எதிராக பொங்கும் திமுக நிர்வாகிகள்

வேலூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளராக துரைமுருகன் மகன் அறிவிக்கப்பட்டுள்ளதால், ‘சீட்’ கிடைக்காமல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் பலர், கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், இதுவரை நேரடி அரசியலில் தலைகாட்டியதில்லை. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகே, கதிர் ஆனந்த் முதல் முறையாக நேரடி அரசியலில் நுழைந்திருக்கிறார். அதே நேரத்தில், கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதை தி.மு.க-வினர் விரும்பவில்லை. துரைமுருகனின் அரசியல் வாழ்க்கையைப் பார்க்கும்போது, பொருளாளர் பதவி மட்டுமல்ல, பொதுச்செயலாளர் பொறுப்பைக்கூட அவருக்கு வழங்கலாம். ஆனால், துரைமுருகன் மகன் என்கிற ஒரு தகுதியை மட்டுமே வைத்திருக்கும், கதிர்ஆனந்தை வேட்பாளராக நிறுத்தியிருப்பது, எந்த விதத்தில் நியாயம்... எப்படி ஏற்க முடியும்... என்று கட்சிக்காக நீண்டகாலம் உழைத்த மூத்த நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள்.

முன்னாள் எம்.பி முகமதுசகி, தன் மகனுக்காக வேலூர் தொகுதியைக் குறிவைத்திருந்தார். அதேபோல, மத்திய மாவட்ட செயலாளராக உள்ள அணைக்கட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் தலைமையில், மூத்த நிர்வாகிகள் பலர் துரைமுருகன் மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், துரைமுருகன் கோபமடைந்ததால் இவர்களெல்லாம் அமைதிப்படையாக மாறி குழிபறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

துரைமுருகனின் நீண்டகால நண்பரும், தி.மு.க-வில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு பொறுப்புகளை வகித்த குடியாத்தத்தைச் சேர்ந்த சீவூர் துரைசாமி, திடீரென பா.ம.க-வில் இணைந்துகொண்டார். பலமுறை அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், கட்சியின் பொருளாளர், ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அமைச்சர் எனப் பல்வேறு பதவிகளைச் சுமக்கிறார் துரைமுருகன். அவரின் மகனும் எம்.பி-யாகிவிட்டால், கட்சியில் முக்கிய பொறுப்பை வாங்கிக்கொடுத்துவிடுவார். கட்சிக்காக உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோன எங்களைத் தூக்கியெறிந்துவிட்டார் எனக் குமுறுகிறார்கள் மூத்த நிர்வாகிகள்.