Published:Updated:

`பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடித்துள்ளது!’ -ஏ.கே.மூர்த்தி காட்டம்

`பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடித்துள்ளது!’ -ஏ.கே.மூர்த்தி காட்டம்
`பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பியடித்துள்ளது!’ -ஏ.கே.மூர்த்தி காட்டம்

``சாராய ஆலை வைத்திருக்கும் முதலாளிகள்தான் தி.மு.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையைக் காப்பியடித்து, அப்படியே தி.மு.க வெளியிட்டுள்ளதாக’’ அரக்கோணம் தொகுதி பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி கடுமையாக சாடினார்.

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க மூத்த தலைவரான ஏ.கே.மூர்த்தி, வேலூரில் 19-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``நான், அரக்கோணம் தொகுதிக்கு வந்து 24 மணிநேரம் ஆகவில்லை. மக்கள் ஆதரவு இப்போதே தெரிகிறது. பொது வேட்பாளராக... வித்தியாசமான வேட்பாளராக... என்னைப் பாருங்கள். வெற்றிபெறச் செய்தால், முழுமையாக மக்களுக்கு பணியாற்றுவேன். தி.மு.க முதலாளி கட்சி. இது, பாட்டாளி கட்சி. எந்த நேரத்திலும் சாமானிய மக்கள் எங்களைச் சந்திக்கலாம். சாராய ஆலை அதிபர்கள்தான், தி.மு.க வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, இரவு, பகலாக அவர்கள் சாராயம் ஊற்றிக்கொடுக்கிறார்கள். 

நான் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன். இப்போதும் விவசாயம் செய்கிறேன். 38 ஆண்டுகளாக டாக்டர் ராமதாஸுடன் மக்களுக்காகச் சேவை செய்கிறேன். சாதாரண தொண்டன் நான். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். பா.ம.க-வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையைச் 70 சதவிகிதம் தி.மு.க காப்பியடித்து வெளியிட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை, தி.மு.க 80 சதவிகிதம் காப்பி அடித்தது. அவர்கள் காப்பி அடிப்பதற்காகவே பிறந்தவர்கள். டாக்டர் ராமதாஸ் சொன்னதால்தான் பேன்ட் போடுகிறேன். பா.ம.க-வில் உள்ள அனைவரையும் பேன்ட் போட சொல்லியிருக்கிறார். நான், 30 ஆண்டுகளாக அவரின் பேச்சை கடைப்பிடிக்கிறேன்’’ என்று வெளிப்படையாக பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.