தி.மு.க - அ.தி.மு.க வாக்குறுதிகள்... தமிழ்நாட்டின் பிரச்னைகளை முன்வைத்து ஓர் ஒப்பீடு! #VikatanInfographics | Comparision of DMK and ADMK manifestos with Tamilnadu's major problems

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (22/03/2019)

கடைசி தொடர்பு:09:51 (23/03/2019)

தி.மு.க - அ.தி.மு.க வாக்குறுதிகள்... தமிழ்நாட்டின் பிரச்னைகளை முன்வைத்து ஓர் ஒப்பீடு! #VikatanInfographics

தமிழ்நாட்டின் மக்கள் அதிகமாகப் பேசிய, போராடிய, டிரெண்டிங்கில் இடம்பெற்ற பிரச்னைகளைப் பற்றி இரண்டு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் என்ன கூறியுள்ளன?

தி.மு.க - அ.தி.மு.க வாக்குறுதிகள்... தமிழ்நாட்டின் பிரச்னைகளை முன்வைத்து ஓர் ஒப்பீடு! #VikatanInfographics

மிழ்நாட்டு மக்கள் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். சமூக நீதி, சுற்றுச்சூழல், வாழ்வாதாரம், கார்ப்பரேட் எதிர்ப்பு, சாதிக் கொடூரம் முதலானவற்றின் அடிப்படையில் இந்தப் பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். 

இந்தச் சூழலில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே நாளில் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. தமிழ்நாட்டு மக்கள் அதிகமாகப் பேசிய, போராடிய, டிரெண்டிங்கில் இடம்பெற்ற பிரச்னைகளைப் பற்றி இரண்டு கட்சிகளுமே பொதுவான பிரச்னைகளாகத் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்துள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மத்திய அரசு அதை அமைக்காமல் பெயரளவுக்கு காவிரி மேலாண்மைக் குழு என்ற பெயரில் ஒன்றை அமைத்திருப்பது தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. மத்தியில் காங்கிரஸ், பி.ஜே.பி என எந்தக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், காவிரிப் பிரச்னையைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாடே தொடர்ந்து வருகிறது.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் காவிரி மேலாண்மை வாரியம் பற்றிய வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் `காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதி `சிறப்பு வேளாண்’ மண்டலமாக அறிவிக்கக் கோரி சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும் எனத் தி.மு.க-வும் `பாதுகாக்கப்பட்ட வேளாண்’ மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தப்படும் என அ.தி.மு.க-வும் கூறியுள்ளன.

திமுக - அதிமுக

தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசிடம் வலியுறுத்தவுள்ளதாகத் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் உறுதியளித்துள்ளன. ஒரே வித்தியாசம், `தி.மு.க, இந்தியா முழுவதும் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிராக உள்ளது’ எனக் கூறி, ரத்து செய்ய வலியுறுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளது. அ.தி.மு.க அறிக்கையில், `தமிழக மாணவர்கள் உரிய தகுதியைப் பெறும்வரை, தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்குபெற வலியுறுத்தப்படும்’ என நீட் தேர்வு பற்றிக் கூறியுள்ளது.

பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிறது தி.மு.க. வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும் என்கிறது அ.தி.மு.க கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என இரண்டு கட்சிகளுமே கூறியுள்ளன.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றி தி.மு.க பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. வேலையின்மைக்குத் தீர்வாக, அ.தி.மு.க மத்திய அரசு உதவியுடன் `எம்.ஜி.ஆர் வேலைவாய்ப்புகள் திறன் மேம்பாட்டுத் திட்டம்’ அமல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.

``எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்ற காரணத்தால், நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் மீத்தேன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது’’ என்று கடந்தகால தவறுகளைச் சுய விமர்சனமாக முன்வைத்து, விவசாயம் பாதுகாக்கப்பட மீத்தேன் திட்டம் ரத்து செய்ய வலியுறுத்தப்படும் எனக் கூறுகிறது தி.மு.க. அ.தி.மு.க-வோ தன்னுடைய தேர்தல் அறிக்கையில் மீத்தேன் திட்டம் பற்றிய வாக்குறுதிகள் எதையும் இடம்பெறச் செய்யவில்லை.

தேர்தல் வாக்குறுதிகள்

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடு, சாலை அமைப்பதற்கு எதிர்ப்பாகவும், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பயன்படுத்தி சாலை அகலப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஏற்கெனவே எழுந்துள்ள எதிர்ப்பையும் மீறி, மேலும் இரண்டு எட்டு வழிச் சாலைகளை வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய ஸ்டெர்லைட் ஆலை, சாதி ஆணவப் படுகொலைகள், டாஸ்மாக் மதுக்கடைகள் ஆகியவற்றைப் பற்றி எந்த வாக்குறுதியையும் இரண்டு கட்சிகளும் தெரிவிக்கவில்லை. தி.மு.க-வின் தூத்துக்குடி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் கனிமொழி,  ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்துப் பேசியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையின் மூல நிறுவனமான வேதாந்தா குழுமம், பி.ஜே.பி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குத் தேர்தல் நிதியளித்ததாக 2014-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் கூட்டணியாக இருக்கும் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி இந்தப் பிரச்னைகளைக் கையாண்ட விதத்தை மக்கள் ஏற்கெனவே கண்டுள்ளனர். அ.தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே ஐந்தாண்டுக்காலம் வாய்ப்புகள் இருந்தன. அரசின் நிலைப்பாடு ஒன்றாகவும் மக்கள் நிலைப்பாடு ஒன்றாகவும் இருந்ததுதான் பிரச்னைகளின் அடிப்படை. அந்த வகையில் அ.தி.மு.க-வின் அறிக்கை பின்தங்கியுள்ளதாகவே தெரிகிறது.

வாக்குறுதிகள் அளிக்கப்படுவதும், அவை நிறைவேற்றப்படாமல் போவதும் தேர்தல் அரசியலில் சாதாரண நிகழ்வுகள். எனினும் தி.மு.க-வின் அறிக்கை ரஃபேல் ஒப்பந்த ஊழல் குறித்த விசாரணை, பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் வங்கிகளில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு, இந்தியா முழுவதும் சமத்துவபுரங்கள், கல்புர்கி, கௌரி லங்கேஷ் படுகொலைகள் குறித்த விசாரணை போன்ற வாக்குறுதிகளை முன்னிறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.


டிரெண்டிங் @ விகடன்