``காந்திநகர் தொகுதியைக் கைப்பற்றிய அமித் ஷா!”- அத்வானி நிலை என்ன? | Current status of Advani in party

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (22/03/2019)

கடைசி தொடர்பு:13:15 (22/03/2019)

``காந்திநகர் தொகுதியைக் கைப்பற்றிய அமித் ஷா!”- அத்வானி நிலை என்ன?

அமித்ஷாவுடன் அத்வானி

பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் அத்வானியின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட உள்ளார். பா.ஜ.க-வில் ஏற்கெனவே அமித் ஷாவும், மோடியும் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களை ஓரம்கட்டிவிட்டார்கள் என்கிற பேச்சு தற்போது வரை உள்ளது. இந்த நிலையில், நீண்டகாலமாக அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வந்தார். அந்தத் தொகுதியிலேயே இந்த முறையும் போட்டியிடும் ஆசை அத்வானிக்கு இருந்தது. இதற்கிடையே பா.ஜ.க-வின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அந்தப் பட்டியலில் அத்வானியின் தொகுதியான காந்திநகர் தொகுதியில் கட்சியின் தலைவர் அமித் ஷா போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளனர். இது அத்வானியின் ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

``மூத்த தலைவர் என்றுகூட பார்க்காமல் அத்வானியை ஏற்கெனவே ஓரம்கட்டி வைத்துள்ளார்கள். இப்போது தொகுதியையும் பறித்துக் கொண்டுவிட்டார்கள்” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டனர் அத்வானியின் ஆதரவாளர்கள். ஆனால், பா.ஜ.க தரப்பில் வேறு ஒரு தகவலை சொல்கிறார்கள். ``அத்வானிக்கு வயதாகிவிட்டது. இப்போது காந்தி நகர் தொகுதியை அவருக்கு வழங்கினால் பிரசாரம் செய்வது எளிதானதல்ல. இதுகுறித்து அவரிடம் பா.ஜ.க தலைமை ஆலோசனை நடத்தியது. அதனடிப்படையில் அவருக்கு வரும் ஜூன் மாதம் ராஜ்யசபா சீட் வழங்க பா.ஜ.க தலைமை முடிவு செய்துள்ளது. இந்தத் தகவல் அத்வானிக்கும் தெரிவிக்கப்பட்டதற்கு ஓ.கே. சொல்லிவிட்டார். எனவே, தனது தொகுதியில் அமித் ஷா போட்டியிட அத்வானியும் ஓ.கே சொல்லிவிட்டார்'' என்கிறார்கள்.