ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமாரின் சொத்து மதிப்பு வெளியீடு! | OPS son Ravindranathkumar's Property Value Issued

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (22/03/2019)

கடைசி தொடர்பு:09:45 (23/03/2019)

ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமாரின் சொத்து மதிப்பு வெளியீடு!

ரவீந்திரநாத் குமார்

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், இன்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது, தனது அசையும் அசையா சொத்து விவரங்கள் மற்றும் தன்மீது குற்ற வழக்குகள் இருக்கின்றனவா என்ற உறுதியளிப்புப் பத்திரமும் வழங்கினார். ரவீந்திரநாத்குமார் குறிப்பிட்ட சொத்துமதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தனது கையில் ரொக்கமாக 82ஆயிரத்து714 ரூபாயும், தனது மனைவி கையில் 62 ஆயிரத்து 450 ரூபாயும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வங்கிக் கணக்குகளில், சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் 14 லட்சத்து 73 ஆயிரத்து 063 ரூபாயும், பெரியகுளம் சிட்டி யூனியன் வங்கியில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 410 ரூபாயும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ரவி, தனது மனைவிக்கு பெரியகுளம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக் கிளையில் 41 ஆயிரத்து 306 ரூபாய் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது மகன் ஜெய்தீப் பெயரில் சென்னை மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கிக் கிளையில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 131 ரூபாயும், மகள் ஜெயஸ்ரீ பெயரில் அதே கிளையில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 067 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரிலையன்ஸ் மணியில் 56 ஆயிரத்து 300 ரூபாயும், விஜயானந்த் டெவலப்பர்ஸ் பி.லிட் நிறுவனத்தில் 33 ஆயிரத்து 340 ரூபாய் பங்குகள் (Equity Share) இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியின், மெட்லைஃப் இன்சூரன்ஸில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 575 ரூபாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கார் விவரம் :

தன்னிடம் 6 லட்சத்து 35 ஆயிரத்து 992 ரூபாய் மதிப்புள்ள ஹூண்டாய் i10 கார் மற்றும், 36 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள டொயோட்டோ ஃபார்சூனர் கார் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

தங்கம் வெள்ளி விவரம் :

ரவீந்திரநாத்குமாரிடம் 120 கிராம் தங்கமும் 1.1கிலோ வெள்ளியும், அவரது மனைவியிடம் 760 கிராம் தங்கமும் 4.75 கிலோ வெள்ளியும், 10 கேரட் வைரமும், அவரது மகன் ஜெய்தீபிடம் 120கிராம் தங்கமும், மகள் ஜெயஸ்ரீ’யிடம் 300கிராம் தங்கமும், மகன் ஆதித்யாவிடம் 120 கிராம் தங்கமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  

 

அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு :

ரவீந்திரநாத்குமார் : 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 224 ரூபாய்

அவரது மனைவி : 31 லட்சத்து 58 ஆயிரத்து 506 ரூபாய்

மகன் ஜெய்தீப் : 5 லட்சத்து 23 ஆயிரத்து 131 ரூபாய்

மகள் ஜெயஸ்ரீ :10 லட்சத்து 61ஆயிரத்து 067 ரூபாய்

மகன் ஆதித்யா : 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்

 

அசையா சொத்து மதிப்பு :

விவசாய நிலமாக ரவீந்திரநாத்குமாரிடம் பெரியகுளம் மற்றும் தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில், 31.37 ஏக்கர் நிலம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்தும் 2011-ம் ஆண்டு வாங்கப்பட்டதாகவும், அந்த நிலத்தில் 15 லட்சம் மதிப்பிலான கட்டுமானம் செய்திருப்பதாகவும், தற்போது அதன் மதிப்பு (தோராயமாக) 1 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரத்து 303 ரூபாய் எனவும், தனக்கு பூர்வீக சொத்துகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடன் விவரம் :

வங்கிகள் மற்றும் தனி நபர்களிடம் வாங்கிய கடன் மற்றும் செலுத்தவேண்டிய தொகை : 3 கோடியே 27 லட்சத்து 34 ஆயிரத்து 079 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். அதில், தனது தம்பி ஜெயபிரதீப்பிற்கு 33 லட்சத்து 03 ஆயிரத்து 136 ரூபாயும், தனது தாய் விஜயலெட்சுமிக்கு 83 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும் கடன் செலுத்தவேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்து பெறப்பட்டதாகும்.