Published:Updated:

`சிறு துரும்பைகூட அசைக்கவில்லை' - தம்பிதுரையை விளாசிய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி!

`சிறு துரும்பைகூட அசைக்கவில்லை' - தம்பிதுரையை விளாசிய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி!
`சிறு துரும்பைகூட அசைக்கவில்லை' - தம்பிதுரையை விளாசிய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி!

 "மக்கள் இந்த அரசு மீது கோபத்திலும், கொந்தளிப்பிலும் இருக்கிறார்கள். நரேந்திர மோடிக்கு எதிரான அலை தற்போது வீசுகிறது" என்று கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்தார்.


கரூரில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்  ஜோதிமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைமை சார்பில் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் முறைப்படி அறிவிக்கப்பட்டது. கரூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட வேடச்சந்தூர், விராலிமலை, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவும், வாழ்த்தும் பெற்றார்.

இதனிடையே, கரூர் வருகை தந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரும், கரூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஜோதிமணி, "மக்கள் கோபத்திலும், கொந்தளிப்பிலும் இருக்கிறார்கள். நரேந்திர மோடி அரசுக்கு எதிரான அலை தற்போது வீசுகிறது. 'இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன், விவசாய வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன், ரூபாயின் மதிப்பை உயர்த்துவேன்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது.

மக்கள் சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை செல்லாது என்று ஒரே இரவில் தேசிய தொலைக்காட்சி மூலம் ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிகாரத்தை கையில் எடுத்து அறிவித்த ஒரு இரக்கமற்ற அரசை அகற்ற மக்கள் காத்திருக்கிறார்கள். இந்திய தேசியத்தை வலுப்படுத்த காங்கிரஸ் அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பை மோடி அரசு சிறுகுறு தொழில்களை அழித்து அறிவு ஆயுதமாக மாற்றிய அரசு மோடி அரசு. மத்தியில் ஆட்சி கொடுமை என்றால், மாநிலத்தில் ஆட்சி நடத்தும் பினாமி எடப்பாடி அரசு போராடும் மக்களை சுட்டுக் கொன்றது கூட தெரியாது என்று தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த முதல்வர் எடப்பாடி. 

தமிழகத்துக்கு எதிராக கீழடி ஆய்வு, நீட் தேர்வு, நிதிக்குழு கலைப்பு என ஏராளமான மக்கள் விரோதப் போக்கை மத்திய அரசு செய்ய காரணமாக இருந்தது பினாமி எடப்பாடி அரசு. தமிழகத்தை ஒரு இருண்ட காலத்தை நோக்கி பி.ஜே.பி அரசு எடுத்துச் சென்றுவிட்டது. மக்களவை துணை சபாநாயகர், முன்னாள் சட்டத்துறை அமைச்சர், அ.தி.மு.கவில் முக்கியமான தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த தம்பிதுரை நினைத்திருந்தால், பிரதமரை எப்பொழுது வேண்டுமானாலும் சந்தித்து கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்திருக்கலாம். ஆனால், அவர் சிறு துரும்பை கூட அசைக்கவில்லை. அதை நிரூபிக்கும் விதமாக, அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் கொந்தளித்து ஊரை விட்டு துரத்துகிறார்கள். அவரிடம் சண்டையிடுகிறார்கள். அவரும் மக்களிடம் திருப்பி சண்டையிடும் மோசமான சூழல் கரூர் பாராளுமன்ற தொகுதியில் நிலவுகிறது. கரூரில் எம்.பி ஆகப் பதவி வகித்த தம்பிதுரைக்கு எண்ணற்ற கல்லூரிகள் சொந்தமாக இருக்கிறது. 


ஆனால், கரூரில் அவருடைய 10 ஆண்டு பதவிக் காலத்தில் ஒரு கல்லூரியை கூட துவங்கவில்லை. விராலிமலை, மணப்பாறை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி இல்லாமல் இருக்கிறது. தனக்கு சொத்து சேர்ப்பதும், தனக்கு தேவையான காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதிலும் குறியாக இருந்தார். தற்போதுகூட ஒரு மருத்துவக் கல்லூரியை கட்டி, அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறார். கடந்த சில நாள்களாக பி.ஜே.பி அரசை சாடி வந்த அவர், தற்போது கல்லூரி துவங்க அனுமதி கிடைத்ததும், 'பி.ஜே.பி போல சிறந்த கட்சி, நரேந்திர மோடி போல சிறந்த பிரதமர் யாரும் இல்லை' என மாற்றி பேசி வருகிறார். எந்தப் பதவியில் இருந்தாலும், தம்பிதுரை தன்னை வளப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்தி வந்தார். இனிமேலும் அப்படித்தான் பயன்படுத்துவார். அதற்கு தொகுதி மக்கள் இனியும் அனுமதிக்கமாட்டார்கள். 18 வயது முதல் 35 வயது வரையிலான 45 சதவிகித இளைஞர்கள் ஓட்டு எனக்குதான் விழும். இரண்டு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்" என்றார். 

பின் செல்ல