`வைகோவுக்கு டெல்லி கன்பார்ம், உங்களுக்கு?' - கணேசமூர்த்தியைக் கலங்க வைத்த உடன்பிறப்புகள் | Reason behind MDMK choosing DMK's symbol for election

வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:42 (26/03/2019)

`வைகோவுக்கு டெல்லி கன்பார்ம், உங்களுக்கு?' - கணேசமூர்த்தியைக் கலங்க வைத்த உடன்பிறப்புகள்

ஈரோட்டில் உதயசூரியன் சின்னம்தான் என முடிவாகிவிட்டதில் உடன்பிறப்புகள் அதிக உற்சாகத்தில் உள்ளனர். நேற்று மாலை மொடக்குறிச்சியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் 3,000 பேருக்கு மேல் திரண்டுவிட்டனர். இவ்வளவு பேர் திரள்வார்கள் எனக் கட்சி நிர்வாகிகளே எதிர்பார்க்கவில்லை.

`வைகோவுக்கு டெல்லி கன்பார்ம், உங்களுக்கு?' - கணேசமூர்த்தியைக் கலங்க வைத்த உடன்பிறப்புகள்

ரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க வேட்பாளர் நிற்பதால் உற்சாகத்தில் திளைக்கின்றனர் உடன்பிறப்புகள். `சுயேச்சை சின்னத்தில் நிற்பதால் பலன் கிடைக்காது எனப் பலமுறை கணேசமூர்த்தியிடம் வலியுறுத்தினோம். இப்போது ம.தி.மு.க தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டதில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

ஸ்டாலினுடன் வைகோ

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது மறுமலர்ச்சி தி.மு.க. ஒரு ராஜ்யசபா ப்ளஸ் ஒரு மக்களவைத் தொகுதி என்ற விகிதத்தில் தொகுதிப் பங்கீடு நடைபெற்றதில் உற்சாகமாக இருந்தார் வைகோ. `தனிச்சின்னத்தில் போட்டியிட இருக்கிறோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பில்லை' என உறுதியாகத் தெரிவித்திருந்தார் வைகோ. இந்தக் கருத்தில் ஈரோடு தி.மு.க-வினருக்கு உடன்பாடில்லை. இதையடுத்து, வேட்பாளர் கணேசமூர்த்தியின் வீட்டுக்கே சென்றார் தி.மு.க-வின் மூத்த நிர்வாகி சுப்புலட்சுமி ஜெகதீசன். அவருடன் மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சென்றிருந்தனர். அப்போது நடந்த விவாதத்தில், `தனிச்சின்னத்தில் நிற்பதால் எந்தப் பயனும் இல்லை. இந்த முறை உங்களுக்குப் பம்பரம் சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் தி.மு.க வலுவாக இருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்' என எடுத்துக் கூறினர். இதைக் கேட்ட கணேசமூர்த்தியும், `தலைமையிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்' எனக் கூறியிருந்தார். 

ஸ்டாலினுடன் வைகோ

இவ்வளவு பேசிய பிறகும் ம.தி.மு.க தலைமையிடம் இருந்து எந்த அசைவுகளும் தென்படவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் வைகோவைச் சந்திக்க அவசரமாகக் கிளம்பினார் கணேசமூர்த்தி. இந்தச் சந்திப்பின் முடிவில், உதயசூரியன் சின்னத்தில் நிற்பது என ம.தி.மு.க தலைமை முடிவு செய்தது. இந்தத் `திடீர்' மனமாற்றம் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிக்குள் இருக்கும் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்களைச் சென்று சந்தித்தார் கணேசமூர்த்தி. அவர்கள் அனைவரும் ஒரே குரலில், `உதயசூரியன் சின்னத்தில் நின்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். சுயேச்சை சின்னத்தை எடுத்துக்கொண்டு வந்தால் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்' எனக் கூறியுள்ளனர். பொதுவாக, ஈரோட்டைப் பொறுத்தவரையில் மாமன், மச்சான் முறை வைத்துத்தான் கட்சி நிர்வாகிகள் பேசிக் கொள்வார்கள். 

கணேசமூர்த்தி

அதில் சிலர் பேசும்போது, `மாமா... போனமுறையே நீங்கள் நிறைய செலவு செய்து தோற்றுவிட்டீர்கள். இந்த முறையும் தோற்றுவிட்டால் சிரமம் ஆகிவிடும். ராஜ்யசபா சீட் மூலமாக வைகோ நிச்சயமாக டெல்லி சென்றுவிடுவார். நீங்கள் செல்ல முடியுமா எனப் பாருங்கள்' என ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளனர். இத்தனை எதிர்ப்புக் குரல் வரும் என கணேசமூர்த்தியும் எதிர்பார்க்கவில்லை. கட்சிப் பிரமுகர்களிடம் இருந்து வந்த தொடர்ச்சியான வேண்டுகோள்களால், கணேசமூர்த்தியின் மனம் மாறிவிட்டது. இதையடுத்தே அவசரப் பயணமாகச் சென்று வைகோவைச் சந்தித்தார். அவருடைய வேண்டுகோளில் இருந்த நியாயத்தை வைகோவும் புரிந்துகொண்டார்" என விவரித்தவர்கள், 

வைகோ

``ஈரோட்டில் உதயசூரியன் சின்னம்தான் என முடிவாகிவிட்டதில் உடன்பிறப்புகள் அதிக உற்சாகத்தில் உள்ளனர். நேற்று மாலை மொடக்குறிச்சியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் 3,000 பேருக்கு மேல் திரண்டுவிட்டனர். இவ்வளவு பேர் திரள்வார்கள் எனக் கட்சி நிர்வாகிகளே எதிர்பார்க்கவில்லை. இதுவே மிகப் பெரிய ஆச்சர்யம்தான். சின்னத்தை அறிவித்ததால்தான் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காண முடிந்தது. கூட்டத்தில், `உதயசூரியனில் நிற்கிறேன்' என கணேசமூர்த்தி அறிவித்தபோது, தொண்டர்கள் கூட்டத்தில் விசில் பறந்தது. இதுவரையில் தொகுதி செலவுக்குத் தி.மு.க தலைமையிடம் இருந்து எந்த உத்தரவாதமும் வரவில்லை. அநேகமாக, கணேசமூர்த்தியே செலவு செய்ய வேண்டிய சூழலும் ஏற்படலாம்" என்கின்றனர் நிதானமாக.