மோடி சொன்னதும் நடந்ததும்: பிரதம மந்திரி `ஜன் தன் யோஜனா’ சொல்வது என்ன? | What is Pradhan Mantri Jan Dhan Yojana?

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (25/03/2019)

கடைசி தொடர்பு:16:02 (26/03/2019)

மோடி சொன்னதும் நடந்ததும்: பிரதம மந்திரி `ஜன் தன் யோஜனா’ சொல்வது என்ன?

``உண்மையில் இந்தக் கணக்குகளைப் பயன்படுத்துபவர்களைவிட ஆரம்பித்து அப்படியே விட்டவர்கள்தான் அதிகம். பயன்படுத்தாத கணக்குகளுக்குப் பராமரிப்புச் செலவு என்பது வங்கிகளுக்கு வீணான செலவுதான்!’’

மோடி சொன்னதும் நடந்ததும்: பிரதம மந்திரி `ஜன் தன் யோஜனா’ சொல்வது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியமைத்து ஐந்தாண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. பி.ஜே.பி. கூட்டணி அரசு, கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, நடைமுறைப்படுத்தியது. அந்தத் திட்டங்களின் உண்மையான நோக்கம், சரியான பயனாளிகளை திட்டப் பலன்கள் சென்றடைந்துள்ளதா, பல திட்டங்களில் இப்போதைய நிலை என்ன என்பது குறித்த தகவல்களை இந்தத் தொடரில் காண்போம்... 

'பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா': 

பிரதமரின் 'மக்கள் நிதி திட்டம்' என்பதுதான் இதற்கு அர்த்தம். பிரதமராகப் பதவியேற்ற 2014-ம் ஆண்டு மோடி தனது சுதந்திர தின உரையில், இந்தத் திட்டத்தை அறிவித்தார். அதே ஆண்டில் ஆகஸ்டு 28-ம் தேதி, மக்கள் நிதி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வங்கி சேவைகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தத் திட்டம். 

சிறப்பம்சம்: 

'ஜன் தன் யோஜனா' திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தேவையில்லை. மேலும் வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தக் கணக்கைத் தொடங்கி, 6 மாத காலம் உரியப் பரிவர்த்தனைகளை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5,000 ரூபாய் ஓவர் ட்ராப்ட் வசதி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள், ஓய்வூதியம் மற்றும் மற்ற காப்பீடு சேவைகளை மிகச் சுலபமாக அணுகலாம்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயுவுக்கான அரசின் மானியம் மற்றும் இதர அரசுத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கான அனைத்து தொகைகளும், சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதன் மூலம் லஞ்சம், முறைகேடு மற்றும் இடைத்தரகர்களின் தலையீடு முற்றிலுமாக இருக்காது.

ஜன் தன் யோஜனா - நடந்தது என்ன?

அடிப்படை வங்கிச் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் கீழ் (Basic Savings Bank Deposit Account) குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தை 2005-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் 25 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட அந்தத் திட்டமே சில திருத்தங்களுடன் பிரதமரின் மக்கள் நிதித் திட்டமாக அறிவிக்கப்பட்டது.

 ஜன் தன் யோஜனா

'ஜன் தன்' வங்கிக் கணக்குகளில் ஐந்தில் ஒரு வங்கிக் கணக்கு பயன்படுத்தாமலேயே இருந்து வருகிறது. ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்த 33 விழுக்காட்டினர், ஜன் தன் யோஜனாவின் கீழ் புதிதாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். தவிர, இந்தியா முழுவதும் 48 விழுக்காடு வங்கிக் கணக்குகள் பயன்படுத்தாமல்தான் உள்ளன என்று உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

2010 - 2014-ம் ஆண்டுவரை, கிராமப்புறங்களில் பல்வேறு வங்கிகளின் 12,748 கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகளில் 3,03,504 பேர் பணியமர்த்தப் பட்டுள்ளனர். கடந்த நான்காண்டுகளில் கிராமப்புறங்களில் 4,679 வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டு, 1,77,639 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஜன் தன் திட்டத்தின் கீழ் சுமார் 35 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அவற்றில் 25.60 கோடி கணக்குகளே செயல்பாட்டில் உள்ளன என்று தெரியவந்துள்ளது. சுமார் 94,617 கோடி ரூபாய் இந்தக் கணக்குகளில் வைப்புத்தொகையாக இருந்து வருகிறது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓராண்டிற்கும் மேல் பரிவர்த்தனையில்லாமல் இருந்த 92,52,609 ஜன் தன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பல்லாயிரம் கோடி ரூபாய் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

'ஜன் தன் யோஜனா' பற்றி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் ஒருவர் கூறுகையில், "இத்தகைய கணக்குகளைத் தொடங்கிய பெரும்பாலானோர் ஏற்கனவே வேறு வங்கிகளில் கணக்குகள் வைத்திருந்தவர்கள்தான். அதிலும் சிலர், ஜன் தன் திட்டத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கினர். அதற்குக் காரணம், 'அந்தக் கணக்குகளில் பிரதமர் பணம் போடப் போகிறார்' என்ற தவறான புரிதல்தான். அதன் பின்னர் அந்த வங்கிக் கணக்குகளை அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்படியே விட்டுவிட்டனர். 

மேலும் ஜன் தன் கணக்குகள் மூலம் 5,000 ரூபாய் வாங்கிய பலரும் அதைத் திரும்பச் செலுத்தவே இல்லை. மேலும் பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள், ஜன் தன் யோஜனா கணக்கைப் புதுப்பித்து, கடன்பெற முயற்சி செய்தனர். உண்மையில் இந்த கணக்குகளைப் பயன்படுத்துபவர்களைவிட ஆரம்பித்து அப்படியே விட்டவர்கள்தான் அதிகம். பயன்படுத்தாத கணக்குகளுக்குப் பராமரிப்புச் செலவு என்பது வங்கிகளுக்கு வீணான செலவுதான்" என்று சொல்லி முடித்தார்.


டிரெண்டிங் @ விகடன்