``சாடிஸ்ட் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?” - மோடியைக் கடுமையாகச் சாடிய ஸ்டாலின் | Dmk president election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (26/03/2019)

கடைசி தொடர்பு:11:37 (26/03/2019)

``சாடிஸ்ட் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?” - மோடியைக் கடுமையாகச் சாடிய ஸ்டாலின்

திருவள்ளூரில் பூந்தமல்லி சட்டமன்ற தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணசாமி மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று மாலை பிரசாரம் செய்தார்.

ஸ்டாலின்

திருவள்ளூர் காக்களூர் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடும் விமர்சனம் செய்து பேசினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற பூந்தமல்லி சட்டமன்ற தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். 

மேலும் பேசிய ஸ்டாலின், ``சர்வாதிகார பிரதமரை, உதவாக்கரை முதல்வரை ஒரே நேரத்தில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஒரு மனிதன்  உடம்பில் இரண்டு கட்டிகள் இருக்கிறது. அதை ஒரே நேரத்தில் நீக்க வேண்டும். அப்போதுதான் அந்த மனிதனைக் காப்பாற்ற முடியும். அப்படித்தான் நாட்டிற்கு ஆபத்தான நிலை வந்திருக்கிறது. அதனால், ஒரே நேரத்தில் பிரதமரையும் முதல்வரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நமது அணி மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி ஆட்சியையும் எடப்பாடி ஆட்சியையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்காகத்தான் இந்த மக்கள் கிளர்ந்து எழுந்து நிற்கிறார்கள். நாடும் நமதே நாற்பதும் நமதே. கை சின்னமும் சூரியனும் ஒன்றாக இணைந்து இருக்கிற நேரத்தில் எப்போதும் வெற்றிதான் கிடைக்கும். காங்கிரஸ் ஆட்சியில் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், தற்போது பி.ஜே.பி கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி அரசு என்ன திட்டத்தை கொண்டு வந்து விட்டார்கள்” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர், ``எடப்பாடி அவரைப் போலவே உதவாக்கரை என்று எண்ணி நம்மைப் பார்த்து பேசியிருக்கிறார். எடப்பாடி ஒரு உதவாக்கரை மோடி ஒரு சர்வாதிகாரி. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தமிழகத்திற்குத் தேவையான பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அது தெரியாமல் எடப்பாடி பேசுகிறார். பழைய வரலாறு எடப்பாடிக்கு தெரியாது. கஜா புயல் பாதிக்கப்பட்ட நேரத்தில் மக்களைச் சந்திக்க எடப்பாடி உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவில்லை. ஏன் வரவில்லை என்று கேட்டால் சேலத்தில் உறவினர்கள் வீட்டில் கிடாவெட்டு விருந்தில் இருந்தேன் என்கிறார். அப்புறம் ஹெலிகாப்டரில் வந்தார். ஹெலிகாப்டரை பார்த்து கும்பிட்ட எடப்பாடி ஹெலிகாப்டரில் வந்தார். அவருக்கு வந்த வாழ்வைப் பார்த்தீர்களா?" என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

``தமிழகத்திற்குப் பெயர் சொல்லுகிற மாதிரி எந்த ஒரு திட்டத்தையும் பா.ஜ.க அரசுடன் கூட்டணி வைத்து இருக்கிற எடப்பாடி அரசு கொண்டு வரவில்லை. தற்போது கூட்டணி வைத்திருப்பதே நாற்காலி விழாமல் தங்களுடைய பதவிகளை பாதுகாத்துக் கொள்ளத்தான்" என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,  ``பிரதமர் இந்தியாவின் காவலாளி என்கிறார். அப்படி என்றால் வாட்ச்மேன். வாட்ச்மேனுக்கே அசிங்கம். மோடி எடப்பாடிக்கும் ஓ.பி. எஸ் க்கும் தான் காவலாளி. பணக்காரர்களுக்குத்தான் காவலாளி. நாட்டு மக்களுக்கு அல்ல என்றார்.

நாடாளுமன்றத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு பேசிய அ.தி.மு.கவின் துணை சபாநாயகர் தம்பிதுரை பி.ஜே.பி ஆட்சியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் ஒன்று கூட நன்றாக இல்லை. அவற்றில் அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இன்று அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் பல தவறான தகவல்களை சொல்லி இருக்கிறார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாச் சொல்லுங்கடா போக்கத்த பசங்களா" என்று கிண்டலாகப் பேசிய ஸ்டாலின் ராமதாஸ் பற்றியும் குறிப்பிட்டார்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்ன ராமதாஸ், இப்போது எப்படிக் கூட்டணி வைத்து இருக்கிறார். பத்திரிகையாளர்கள் இடத்தில் பத்திரம் எழுதி தரட்டுமா பாண்டு பேப்பர் கொடுங்க என்று கேட்ட ராமதாஸ் இன்று எதற்காக கூட்டணி வைத்தார். பணத்திற்காகவும் பதவிக்காகவும் எடப்பாடி அரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இப்போது அவர் தமிழக அரசு நல்ல அரசு என்கிறார். தமிழக விவசாயிகள் டெல்லியில் பல போராட்டத்தை நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தையும் மதிக்காமல் மோடி அவர்களையும் சந்தித்து கூட பேசவில்லை. ஆனால், பணக்காரர்களையும் நடிகைகளிடமும் மோடி பேசி வருகிறார். இப்படிப்பட்ட பிரதமரை சாடிஸ்ட் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது. தி.மு.க வெற்றி பெற்றால் பூந்தமல்லி பகுதியில் மக்களுக்கு தேவையான மேம்பாலம் பட்டா போன்ற வசதிகளைச் செய்து தரும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருப்பதைப் போல அனைத்துத் திட்டங்களையும் செய்து தருவோம். சொன்னதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம் என்று கலைஞர் சொல்வதைப் போல நாங்கள் செய்து காட்டுவோம் என்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.