Published:Updated:

`நான் இறக்குமதிசெய்யப்பட்ட வேட்பாளர் என்றால், தமிழிசை யார்?' - கனிமொழி காட்டமான கேள்வி

`நான் இறக்குமதிசெய்யப்பட்ட வேட்பாளர் என்றால், தமிழிசை யார்?' - கனிமொழி காட்டமான கேள்வி
`நான் இறக்குமதிசெய்யப்பட்ட வேட்பாளர் என்றால், தமிழிசை யார்?' - கனிமொழி காட்டமான கேள்வி

“நான் இறங்குமதிசெய்யப்பட்ட வேட்பாளர் என்றால்,  தமிழிசை யார்? ரஃபேல் ஒப்பந்தம்குறித்து விரிவாக பா.ஜ.க-வினர் பேசிவிட்டு, என்னுடைய நேர்மையைப் பற்றி அவர்கள் பேசட்டும்” என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கான 42 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை செய்தியாளர்கள் முன்பு வெளியிட்டார்.  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தி.மு.க சார்பில் கிராம ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில், மக்களிடமிருந்து 1,200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதை கருத்தில்கொண்டு, தூத்துக்குடியில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேவையானதை வைத்து திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இத்தொகுதியில், கடந்த 5 ஆண்டுகளாக வளர்ச்சிச் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. நீர் மேலாண்மைக்கு என எந்தத்  திட்டமும் இல்லை. தொழில் வளர்ச்சி ஏதுமில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தொகுதி, நாடாளுமன்ற உறுப்பினராக வாய்ப்பு கிடைத்தால், தூத்துக்குடியில்  புதிய தொழிற்சாலைகள், துறைமுகம்  விரிவாக்கம், தூத்துக்குடி விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை, நசிந்து வரும் பனைத் தொழில் வளர்ச்சி, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க  நடவடிக்கை மற்றும் புதிய தொழில் முதலீடுகளை தூத்துக்குடிக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன்.

சேதுசமுத்திரத் திட்டம் பற்றி தவறான தகவல் மீனவர்களிடையே பரப்பப்பட்டுள்ளது. அதைப்பற்றி அவர்களுக்கு தெளிவுபடுத்தி, அவை இயற்கையைப் பாதிக்காதவாறு இத்திட்டம் கொண்டுவரப்படும். இதுவே, மீனவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கும். இந்த மாவட்டத்தில், தொடர்ந்து பலமுறை நான் மக்கள் பணி செய்துள்ளேன். நான் தத்தெடுத்த கிராமம் இருப்பதால், மாவட்டம் முழுவதும் நலத் திட்டம் செயல்படுத்த பணி மேற்கொண்டுள்ளேன். ராஜ்யசபாவில், இதுவரை 600 கேள்விகளுக்கு மேல் கேட்டுள்ளேன். 144 விவாதங்களில் கலந்துகொண்டுள்ளேன். இதற்காக, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுகூட என்னைப் பாராட்டியுள்ளார். பிறகு எப்படி நான் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறமுடியும்?

நான் இறங்குமதிசெய்யப்பட்ட வேட்பாளர் என்றால்,  தமிழிசை யார்? ரஃபேல் ஒப்பந்தம்குறித்து விரிவாக பா.ஜ.க-வினர் பேசிவிட்டு, என்னுடைய நேர்மையைப் பற்றி அவர்கள் பேசட்டும். ஸ்டெர்லைட் அநீதிக்கு கண்டிப்பாக தி.மு.க ஆட்சியில் நியாயம் கிடைக்கும். மத பிரச்னையைத் தூண்டுவது பா.ஜ.க-தான். அதை எதிர்க்கத்தான் இந்தக் கூட்டணி. ஆனால், யாருடன் கூட்டணியில் இருந்தாலும் தனித்தன்மையை தி.மு.க விட்டுகொடுத்தது கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும்” என்றார்.