Published:Updated:

பதற்றமான பரமக்குடியில் பதறும் வேட்பாளர்கள்!- உளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்

பதற்றமான பரமக்குடியில் பதறும் வேட்பாளர்கள்!- உளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்
பதற்றமான பரமக்குடியில் பதறும் வேட்பாளர்கள்!- உளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்

பரமக்குடி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க.வில் நிலவும் உள்ளடி வேலைகளைச் சமாளிக்க முடியாமல் நிர்வாகிகள் திணறுகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் பரமக்குடி தனித்தொகுதி. இந்தத் தொகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. நெசவாளர்களும் வியாபாரிகளும் அதிகளவில் உள்ளனர். ஆதிதிராவிடர், முக்குலத்தோர், யாதவர், சவுராஸ்டிரா, செட்டியார் சமூகத்தினரின் ஓட்டுகள் கணிசமாக உள்ளன. வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக நெசவாளர்களும் வியாபாரிகளும் உள்ளனர். பரமக்குடி, எமனேஸ்வரத்தில்தான் நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குளறுபடியால் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பரமக்குடி எம்.எல்.ஏ. டாக்டர் முத்தையா செயல்பட்டார். இதனால் அவரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ.வான டாக்டர் முத்தையா டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் சதன் பிரபாகரும் தி.மு.க. சார்பில் சம்பத்குமாரும் போட்டியிடுகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. இதனால்தான் சிட்டிங் எம்.பியான அன்வர்ராஜாவுக்கு இந்தமுறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அமைச்சர் மணிகண்டனும் மாவட்டச் செயலாளர் முனியசாமியும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியை கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுக்கு ஒதுக்க சம்மதம் தெரிவித்தனர். இதனால் பா.ஜ.க. சார்பில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நயினார்நாகேந்திரன் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி போட்டியிடுகிறார். இதனால் தொகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

பரமக்குடி சட்டபேரவை இடைத்தேர்தலிலும் சீட் கிடைக்க அ.தி.மு.க.வினரிடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் சதன் பிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சதன்பிரபாகரனின் தந்தை நிறைகுளத்தானின் செல்வாக்கு காரணமாக இந்தமுறை சதன்பிரபாகரனுக்கு சீட் கிடைத்துள்ளது. அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக பரமக்குடி நகர் இளைஞரணி அமைப்பாளர் எஸ்.சம்பத் குமார் போட்டியிடுகிறார். தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவரின் சிபாரிசு காரணமாகத்தான் சம்பத்குமாருக்கு சீட் கிடைத்துள்ளது. இது பரமக்குடி தி.மு.க.வினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற சம்பத்குமாரிடம் கட்சித் தலைமை கேள்வி கேட்டபோது அவரின் பதிலைக் கேட்டு தலைமை கழக நிர்வாகிகளே அதிர்ந்து போய் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சாதிக்கலவரத்துக்குப் பெயர் போன ஊர் பரமக்குடி. பரமக்குடி நகரில் அமைந்துள்ள பொன்னையாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். சாதிப் பிரச்னைகளுக்கு அடித்தளமான பகுதியான பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தி.மு.க. சீட் கொடுத்துள்ளதால் பிற சமுதாய மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஏற்கெனவே மாற்றுச் சமுதாய மக்கள் குருபூஜைக்கு பசும்பொன்னுக்குச் செல்லும்போது இந்தப் பகுதியில்தான் கொலை செய்யப்பட்டனர். அதை மையப்படுத்தியே அ.தி.மு.க.வினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
 
 தி.மு.க.வில் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் முத்துராமலிங்கத்துக்கும் முன்னாள் அமைச்சர் தங்கவேலன் மற்றும் அவரின் மகன் திவாகரன் ஆகியோருக்கிடையே கடும் கோஷ்டி பூசல் இருந்துவருகிறது. உள்கட்சி பூசலால் தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமாருக்கு கட்சியினர் தரப்பில் போதிய ஆதரவு இல்லாத சூழல் நிலவுகிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சம்பத்குமார், தொகுதிக்குள் நுழைந்ததும் போலீஸார் அவர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பரமக்குடி எம்.எல்.ஏ.வாக இருந்த டாக்டர் முத்தையா தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொகுதியில் எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் நடைபெறவில்லை. இதனால் ஆளுங்கட்சி மீது பரமக்குடி தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துவருகின்றனர். இது, அ.தி.மு.க. வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு மைனஸாக இருந்துவருகிறது. அந்த எதிர்ப்பலையை தி.மு.க. சாதகமாக்கப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்தது. ஆனால், வேட்பாளர் தேர்வில் கட்சித் தலைமை எடுத்த முடிவால் பரமக்குடி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமாரை வெற்றி பெற வைக்க தி.மு.க.வில் பல்வேறு சவால்களைச் சந்தித்துவருகின்றனர். 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான டாக்டர் முத்தையாவுக்கு இரட்டை இலைச் சின்னம் இல்லை. மேலும் அவர் ஆளுங்கட்சியை எதிர்த்து களம் காண்கிறார். அவரிடம் தோல்வியடைந்துவிடக்கூடாது என்பதில் அ.தி.மு.க.வினர் கவனமாக இருக்கின்றனர். சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் முத்தையாவால் அ.தி.மு.க.வின் வாக்குகள் தொகுதியில் சிதற வாய்ப்புள்ளது. 
தி.மு.க., அ.தி.மு.க, அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கிடையே பரமக்குடியில் கடும் போட்டி நிலவுகிறது. பரமக்குடி இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றனர். ஒவ்வொரு கட்சிகளில் நிலவும் கோஷ்டி பூசலால் பரமக்குடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

பரமக்குடி இடைத்தேர்தல் குறித்து உளவுத்துறை அ.தி.மு.க. தலைமைக்கு ரிப்போர்ட் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில் `அ.தி.மு.க. வேட்பாளர் சதன்பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும் உள்ளடி வேலையால் சிக்கல். மேலும் அ.ம.மு.க. வேட்பாளர் முத்தையா பிரிக்கும் ஓட்டுகளும் அ,தி.மு.க. வெற்றியைப் பாதிக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. கட்சித் தலைமையிலிருந்து பரமக்குடி அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு