`செந்தில் பாலாஜியை அடக்க நினைத்தால்..!'- தம்பிதுரை, விஜயபாஸ்கருக்கு எதிராகச் சீறும் கரூர் தி.மு.க-வினர் | Case filed against Senthilbalaji by admk

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (26/03/2019)

கடைசி தொடர்பு:16:10 (26/03/2019)

`செந்தில் பாலாஜியை அடக்க நினைத்தால்..!'- தம்பிதுரை, விஜயபாஸ்கருக்கு எதிராகச் சீறும் கரூர் தி.மு.க-வினர்

காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்யும்போது, குளித்தலை டிஎஸ்பி-க்கும், செந்தில் பாலாஜிக்கும் பிரச்னை ஏற்பட்டது. செந்தில் பாலாஜி மீது டிஎஸ்பி கைவைத்துத் தள்ளியதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜோதிமணி

ஏப்ரல் 18-ம் தேதி, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள், மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கத் தயாராகிவிட்டன. வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்திலும் குதிக்க வைத்துவிட்டன. அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் மறுபடியும் தம்பிதுரையே களம் காண்கிறார். தி.மு.க கூட்டணியில், கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்தக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜோதிமணி வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். தம்பிதுரையும், ஜோதிமணியும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தம்பிதுரைக்கு 11 முதல் 12 வரை நேரம் `ஒதுக்கப்பட்டிருந்தது. ஜோதிமணிக்கு 12  முதல் 1 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

செந்தில் பாலாஜி

அதன்பிறகு, நடந்தவைபற்றி நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட தி.மு.க-வினர் சிலர், "தம்பிதுரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்தும், 12.30 வரை ஆட்சியர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால், கோபமான செந்தில்பாலாஜி, 'தம்பிதுரையை வெளியேற்றவும், எங்களுக்கு நேரம் ஆகிறது' என்று சத்தம் போட்டார். அப்போது, அவருக்கு குளித்தலை டிஎஸ்பி பதில் சொன்னார். அவருடைய சமாதானத்தை ஏற்காத செந்தில் பாலாஜி, உள்ளே போக முயற்சித்தார். அப்போது டிஎஸ்பி சுகுமார், செந்தில் பாலாஜியை நெஞ்சில் கைவைத்துத் தள்ளினார். இதனால், செந்தில்பாலாஜிக்கும் சுகுமாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேட்பாளர் ஜோதிமணியும் டிஎஸ்பி-யோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்தபிறகு, புரோட்டக்கால்படி ஜோதிமணியிடம்தான் வேட்புமனு வாங்கி இருக்க வேண்டும். ஆனால், வேண்டுமென்றே தம்பிதுரையின் டம்மி வேட்பாளரை வேட்புமனு வழங்கச்செய்து, நேரம் கடத்தினார்கள். இப்படி  தேர்தல் விதிமுறைகளை மீறி, ஜோதிமணிக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில், தம்பிதுரை கலெக்டர் அறையில் இருந்தது தவறு. முறையாக தம்பிதுரை மீதுதான் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும்.

தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்தபோது...

ஆனால், ஜனநாயக ரீதியில் தட்டிக்கேட்ட செந்தில் பாலாஜி மீது தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் இன்று மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செஞ்சிருக்காங்க. இது வன்மையாகக் கண்டிக்கத்தது. இதற்கு பின்னே, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைங்கர்யம் இருக்குன்னு சொல்றாங்க. ஜோதிமணி வெற்றிக்காக செந்தில்பாலாஜி கடுமையான வியூங்களை, களப்பணிகளைச் செய்துவருகிறார். 'இரண்டு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றிபெறுவார்' என்று செந்தில் பாலாஜி பேட்டிகொடுத்தார். அந்த பயத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீஸாருக்கு அழுத்தம்கொடுத்து, செந்தில் பாலாஜி மீது வழக்குப் போட வைத்ததாகச் சொல்றாங்க. இதன்மூலம், செந்தில் பாலாஜியைக் கைதுசெய்யவைத்து, அவரது வேகத்தைக் குறைக்கலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவரை அடக்க நினைத்தால், அவரது வேகம் இன்னும் அதிகமாகுமேயொழிய, குறையாது. தம்பிதுரை தோல்வியைத் தழுவப்போவது உறுதி!" என்றார்கள்.