தினகரனுக்கு குக்கர் சின்னம் தர ஏன் மறுத்தது உச்ச நீதிமன்றம்? | Why did supreme court refuse cooker symbol for ttv dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:08 (27/03/2019)

தினகரனுக்கு குக்கர் சின்னம் தர ஏன் மறுத்தது உச்ச நீதிமன்றம்?

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ``குக்கர் சின்னம், இரட்டை இலைச் சின்னம் என இரண்டையும் ஏன் ஒரே நேரத்தில் கேட்கிறீர்கள்?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

தினகரனுக்கு குக்கர் சின்னம் தர ஏன் மறுத்தது உச்ச நீதிமன்றம்?

``அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு, பொதுவான குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது’’ எனத் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்ற 40 தொகுதிகள், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உட்பட 19 இடைத்தேர்தல் தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆதரவு வேட்பாளர்களுக்கு, பொதுச் சின்னம் ஒன்றை ஒதுக்கப் பரிசீலிக்குமாறும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் இன்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சூடான வழக்கு வாதத்தில், தினகரனுக்குச் சிக்கலை உண்டாக்கும் சில உத்தரவுகளையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தினகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 59 தொகுதிகளில் தங்களது வேட்பாளர்கள் போட்டியிட ஏதுவாக, பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை வழங்கிட வேண்டுமென்றும் தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

மார்ச் 15-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. நேற்று (மார்ச் 25-ம் தேதி) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, `ஹோலி பண்டிகை விடுமுறை என்பதால் பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை’ எனத் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

தினகரன்

உஷ்ணமான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ``நீதிமன்றத்துக்குதானே விடுமுறை. உங்களுக்கு என்ன? இன்று மாலை 5.30 மணிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டதோடு, வழக்கின் விசாரணையை இன்று காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார்.  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சஞ்சய் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ``இரட்டை இலை வழக்கின்போது, இடைக்கால நிவாரணமாக எங்களுக்குக் குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அப்போது அவர்கள் உறுதி அளித்தபடி குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக, எதிர்வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலிலும் ஒதுக்கிட வேண்டும்’’ என வாதிட்டார். குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ``இரட்டை இலை வழக்கு முடிந்துவிட்டது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு இப்போது செல்லுபடியாகாது. இன்று நடைபெறும் விசாரணை, பதிவு செய்யாத அமைப்பான உங்களுக்குக் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியுமா... முடியாதா என்பதுதான். நீங்கள்தான் கட்சியைப் பதிவு செய்யவில்லையே’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கபில்சிபில், ``ஒரு கட்சியைப் பதிவுசெய்ய மாதக் கணக்காகிவிடும். அதற்கு இப்போது நேரமில்லை. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கலுக்கான கால அவகாசம் முடிகிறது. அதற்குள் எங்களுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டால்தான், வேட்பாளர்கள் அச்சின்னத்தில் போட்டியிட முடியும்’’ என்றார்.

கபில்சிபிலின் பதிலில் திருப்தியடையாத தலைமை நீதிபதி, ``மார்ச் 15-ம் தேதி உங்கள் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் ஒத்திவைத்தபோதே, தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்திருக்கலாம் அல்லது நேற்றாவது பதிவுசெய்திருக்கலாம். கடைசி நேரத்தில் வந்து நின்றால் எப்படி’’ என்றார்.

தினகரன் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, ``இரட்டை இலையில் உரிமை கோரும் எங்கள் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தனிக்கட்சியாக அ.ம.மு.க-வை நாங்கள் பதிவுசெய்தால், இரட்டை இலை உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க நேரிடும்’’ என்றார்.

``குக்கர் சின்னம், இரட்டை இலைச் சின்னம் என இரண்டையும் ஒரே நேரத்தில் ஏன் கேட்கிறீர்கள்’’ எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ``தேர்தல் ஆணையத்தின் விதி எண் 29 ஏ, பதிவு செய்யாத கட்சிக்கு பொதுச்சின்னம் வழங்கத் தடை செய்துள்ள நிலையில், அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது எப்படி முடியும்’’ என மீண்டும் கேள்வி எழுப்பியது. அதற்கு அபிஷேக் மனு சிங்வி, ``இன்று மாலை 5 மணிக்குள் கட்சியைப் பதிவு செய்கிறோம். 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவதால், தற்காலிக நிவாரணமாகக் குக்கர் சின்னத்தை வழங்குங்கள்’’ என மீண்டும் வலியுறுத்தினார். உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்கி கபில் சிபில்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இ.பி.எஸ், ஓ.பி.எஸ் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, ``இரட்டை இலைக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என ஏற்கெனவே இரண்டு முறை தீர்ப்பாகிவிட்டது. இந்நிலையில், பதிவு செய்யாத ஓர் அமைப்புக்குப் பொதுச் சின்னத்தை வழங்குவது ஏற்புடையது அல்ல. வெறும் உறுதிமொழியை மட்டுமே அடிப்படையாக வைத்து குக்கர் சின்னத்தை அவர்களுக்கு வழங்கிடக் கூடாது’’ என்று வாதிட்டார். 

`தினகரன் தரப்புக்கு பொதுச் சின்னம் வழங்க சட்டப்படி வாய்ப்பில்லை’ எனத் தேர்தல் ஆணையமும் உறுதிப்பட தெரிவித்தது. இறுதியாகப் பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ``அ.தி.மு.க-வுக்கு தினகரன் தரப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். ஆனால், பயணம் செய்ய வேண்டிய பேருந்தை அவர்கள் தவறவிட்டுவிட்டனர். அவர்கள் ஒரு குழுவாகச் செயல்படுவதை மறுப்பதற்கில்லை. எவ்வளவு பெரிய இயக்கமாக, தலைவராக இருந்தாலும், அவர்களது சின்னம் மூலமாகத்தான் அடையாளம் ஆகிறார்கள். 59 தொகுதிகளுக்கும் தனித்தனி சின்னம் வழங்கினால், தினகரன் தரப்பினரது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். 

ஆகவே, தினகரன் தரப்பு வேட்பாளர்களுக்கு பொதுச்சின்ன பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை பொதுச்சின்னமாக 59 தொகுதிகளிலும் ஒதுக்கத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் வெற்றிபெறும் பட்சத்தில், சுயேச்சைகளாகத்தான் கருதப்படுவார்கள். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தினகரனின் அ.ம.மு.க ஒரு கட்சியாக அங்கீகரிக்கவில்லை’’ எனத் தீர்ப்பளித்தார். 

முதல் 5 நிமிடங்களிலேயே முடியவிருந்த குக்கர் வழக்கை, கபில் சிபில், அபிஷேக் மனுசிங்வி இருவரும் மீட்டுக் கொண்டுவந்தனர். ஆனாலும், தனிச்சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிடாமல் பரிந்துரை மட்டுமே செய்துள்ளதால், அப்பரிந்துரையைத் தேர்தல் ஆணையம் ஏற்குமா, ஏற்காதா என்பது தெரியவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 59 தொகுதிகளிலும் தினகரன் ஆதரவு வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத்தாக்கல் செய்து வருகின்றனர். 
 


டிரெண்டிங் @ விகடன்