தி.மு.க கோஷ்டிப் பூசல்! - திருவள்ளூர் தொகுதி காங்கிரஸுக்குப்போக இதுதான் காரணமா? | is this reason for thiruvallur constituency allocated congress

வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:28 (27/03/2019)

தி.மு.க கோஷ்டிப் பூசல்! - திருவள்ளூர் தொகுதி காங்கிரஸுக்குப்போக இதுதான் காரணமா?

திருவள்ளூர் நாடாளுமன்றத் தனித்தொகுதி தி.மு.க-வின் கையை விட்டுப் போனதற்கு மாவட்டச் செயலாளர் நாசர்தான் காரணம் என்கிறார்கள் தி.மு.க-வினர்.

நாசர்

கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க-விடம் இருக்கும் திருவள்ளூர் தனித் தொகுதியை இந்த முறை தி.மு.க கைப்பற்றி விடும் என்று மாவட்ட தி.மு.க-வினர் எதிர்பார்த்தனர்.  நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தி.மு.க தரப்பில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் காயத்ரி ஸ்ரீதரனுக்குதான் சீட் என்று உறுதியாக சொல்லப்பட்டது. இல்லையென்றால் முன்னாள் எம்.பி கிருஷ்ணசாமிக்கு என்றார்கள். இருவரில் யாருக்காவது ஒருவருக்கு சீட்டு உறுதி என்ற பேச்சு திருவள்ளூர் மாவட்ட தி.மு.க-வில் பலமாய் பேசப்பட்டது. ஆனால் கடந்த மூன்று நாள்களுக்கு முன்னால் தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட திருவள்ளூர் தொகுதி திடீரென  காங்கிரஸுக்கு ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இதற்கு, திருவள்ளூர் தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் நாசர்தான் காரணம்  என்கிறார்கள் தி.மு.க.வினர். நாசர் மற்றும் திருவள்ளூர் தி.மு.க எம்.எல்.ஏ  ராஜேந்திரன் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் கோஷ்டிப் பூசல்தான் இந்தத் தொகுதி தி.மு.க-வின் கைவிட்டு போனதற்கான காரணம் என்கிறார்கள்.

காயத்ரி


எம்.எல்.ஏ ராஜேந்திரன் தலைமையில் ஒரு அணியினரும் நாசர் தலைமையில்  ஒரு அணியினரும் செயல்பட்டுவருகிறார்கள்.  அதனடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக  தி.மு.க நடத்தும் எந்தப் போராட்டத்திலும் குறைந்த அளவிலேயே தி.மு.க-வினர் கலந்துகொண்டனர். அண்மையில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பொறுப்பாளர்கள் சரியாக கூட்டத்துக்கு வந்துள்ளனரா என்று ஸ்டாலின் எடுத்த அட்டடென்ஸில் பெரும்பாலான பொறுப்பாளர்கள் மிஸ்ஸிங். பூந்தமல்லி நகரச் செயலாளர் ரவிக்குமார் பூந்தமல்லி ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் அண்ணன் தம்பிகள். ஒரே குடும்பத்தில் இரண்டு  பேருக்கு பதவிகளை வாங்கிக் கொடுத்தது நாசர். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியாக (திருவள்ளூர்) இருந்த காலத்திலேயே தி.மு.க அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால் தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற ஒரு சென்டிமென்ட் இருந்து வந்தது. அந்த சென்டிமென்ட் தற்போது ஒர்க் அவுட் ஆகாது என்கிறார்கள் தி.மு.க-வினர். அதனால் நாசருக்கும் எம்.எல்.ஏ ராஜேந்திரனுக்கும் இடையே இருக்கும் கோஷ்டிப் பூசலால் தொகுதி காங்கிரஸுக்குச் சென்றது. ஏற்கெனவே கடந்த முறை நின்று பல லட்சங்களைச் செலவு செய்து தோற்றுப்போன காயத்ரி ஸ்ரீதரன், இந்தத் தடவை  உறுதியாக தனக்கு சீட் கிடைக்கும் என்று நம்பி இருந்தார்.

ராஜேந்திரன்



ஆனால் அவருக்கு கடைசி வரை மாவட்டச் செயலாளர் நாசர், பக்க பலமாய் இருந்து கட்சித் தலைமையிடம் பேசி சீட் வாங்கி தருவார் என்று நம்பியிருந்த காயத்ரியின் காலை வாரி விட்டாராம். தி.மு.க-வுக்கு திருவள்ளூர் தொகுதியில் பலம் இல்லை காங்கிரஸுக்கு பலம் இருக்கிறது என்று சொல்லி கூட்டணிக்குத் தொகுதியை தாரை வார்த்து விட்டாராம் என்ற செய்தி தி.மு.க வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசியத் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், ``மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் தி.மு.க கடந்த 10 ஆண்டுகளாகவே தொய்வடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. திருவள்ளூர் தி.மு.க எம்.எல்.ஏ-வான ராஜேந்திரன் பல கிராமப்புறப் பகுதிகளுக்குச் சென்று கட்சிப் பணிகளை இதுவரை செய்யவே இல்லை. இவர் தொகுதிக்குட்பட்ட சில கிராமங்களில் சுடுகாடும் இல்லை. சுடுகாட்டுப் பாதையும் இல்லை'' என்கிறார்கள்  நாசரின் ஆதரவாளர்கள்.

ஆனால், எம்.எல்.ஏ ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் தனது சொந்தத் தொகுதியிலேயே நாசர் ஜெயிக்க முடியாமல் வெளியூர் நபரான பாண்டியராஜனிடம் மண்ணைக் கவ்வினார். கட்சியையும் இந்தத் தேர்தலில் காவு கொடுக்கப் போகிறார் என்கிறார்கள் எம்.எல்.ஏ தரப்பினர். உதாரணத்துக்கு  வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலாக இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் நாசரை மாற்றினால்தான் கூட்டணி கட்சியும் தி.மு.க-வும் வெற்றி பெறும். பல ஒன்றியச் செயலாளர்கள் பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் அல்லது திருவள்ளூர் தனித் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வேண்டுமானால் மாவட்டச் செயலாளர் நாசரையும் அவரது ஆதரவாளர்களான பூந்தமல்லி நகரச் செயலாளர் மற்றும் ஒன்றியச் செயலாளர் மற்றும் உள்ளடி வேலை செய்யும் பொறுப்பாளர்களை மாற்றினால்தான் வெற்றியும் நிச்சயம் என்கிறார்கள் தி.மு.க-வினர். கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இல்லை என்றால் அ.தி.மு.க வேணுகோபால் ஹாட்ரிக் அடித்து அ.ம.மு.க ஏழுமலை இரண்டாவது முறையாக ஜெயிப்பார் என்ற நிலைதான் இருக்கிறது.

நாசரிடம் பேசுகையில், `இது தவறான தகவல். தலைமை எடுக்கும் முடிவில் நான் எதுவும் செய்ய முடியாது. திருவள்ளூர் எம்.பி தொகுதி தி.மு.க-வுக்குத் தலைமை தரவில்லை. நான் என்ன செய்யமுடியும்? அரசியலில் இது சகஜம். கோஷ்டிப் பூசல் இருக்கத்தான் செய்கிறது. சீட்டு கொடுக்கும் விஷயத்தில் என்னுடைய தனிப்பட்ட முடிவு எதுவும் இல்லை'' என்றார்