Published:Updated:

`2013-ல் என் ஆதங்கத்தை வெளியிட்டேன். ஆனால்...'- திருமாவளவன் குறித்து ராமதாஸ் சொல்லும் காரணம்

`2013-ல் என் ஆதங்கத்தை வெளியிட்டேன். ஆனால்...'- திருமாவளவன் குறித்து ராமதாஸ் சொல்லும் காரணம்
`2013-ல் என் ஆதங்கத்தை வெளியிட்டேன். ஆனால்...'- திருமாவளவன் குறித்து ராமதாஸ் சொல்லும் காரணம்

ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கச் செய்ததே நான்தான். 

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரனை ஆதரித்து  சிதம்பரத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில், ``சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.  மதுரையில் இருந்த திருமாவளவனை அழைத்துவந்து அரசியலில் அறிமுகம் செய்தது நான்தான். பின்னர் இருவரும் இணைந்து பல்வேறு இயங்கங்களை நடத்தினோம். வடலூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடுசெய்து, முதன் முதலாக அவரைப் பேசவைத்தேன். உங்கள் கட்சியினருக்கு அரசியல் பயிலரங்கம் நடத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்துங்கள் என்றேன். ஆனால் அவர், இளைஞர்களுக்கு வேறு மாதிரி பயிற்சிகொடுத்தது, பிறகுதான் தெரிந்தது.

அந்த கட்சிக் கொடியைப் பார்த்தாலே மக்கள் முகம் சுளித்தனர். அவர் எனக்கு 'அம்பேத்கர் விருது', 'தமிழ்க் குடிதாங்கி' எனப் பட்டம் கொடுத்தார். எனது தோட்டத்தில் அம்பேத்கர் படத்தை அவர் கையால் திறக்கவைத்தேன். ஈழத்தமிழர் பிரச்னையில் இணைந்து போராடினோம். ஆனாலும், அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அவரின் பேச்சு, போக்கு, மக்களுக்கு எதிராக சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் இருந்தது. அவர் நடத்துவது கட்சியே இல்லை. நாட்டிற்கு அந்தக் கட்சி தேவையில்லை. மக்கள் நலனுக்காக நாங்கள் கட்சி நடத்துகிறோம். அவர் வேறு ஏதோ காரணத்திற்காக கட்சி நடத்துகிறார்.

திருமாவளவன் நடவடிக்கை எல்லை மீறியதால், 2013-ல் வெளிப்படையாக அறிக்கை மூலம் என் ஆதங்கத்தைத் தெரிவித்தேன். கட்சி என்றால் கொள்கை இருக்க வேண்டும். நன்மை செய்ய வேண்டும். அந்த வகையில் அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் அதிகமாகச் செயல்படுத்தப்படுகிறது. முதல்வரும் நானும் விவசாயி என்பதால், விவசாயிகளின் கஷ்டம் தெரியும். தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முயல்கிறார். அவர் கோபப்பட்டு ஏதேதோ பேசுகிறார். அவரது தந்தை கருணாநிதியிடம் கூறி, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கச் செய்ததே நான்தான். ஆனால், என்னைப் பற்றி ஏதேதோ பேசுகிறார். அதைப்பற்றி கவலை இல்லை. நாங்கள் நல்ல அரசியல் நடத்துகிறோம். இந்தத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகரனுக்கு உங்கள் வாக்குகளை அளித்து அதிக வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். மோடி பிரதமராவது உறுதி" என்று பேசினார்.