மோடி சொன்னதும் நடந்ததும்: பிரதம மந்திரி `ஆவாஸ் யோஜனா’வில் நடந்தது என்ன? பகுதி - 2 | What happen in Pradhan Mantri Awas Yojana

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (27/03/2019)

கடைசி தொடர்பு:19:55 (27/03/2019)

மோடி சொன்னதும் நடந்ததும்: பிரதம மந்திரி `ஆவாஸ் யோஜனா’வில் நடந்தது என்ன? பகுதி - 2

கிராமப்புற மக்களுக்கு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளை வழங்கிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருந்தாலும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

மோடி சொன்னதும் நடந்ததும்: பிரதம மந்திரி `ஆவாஸ் யோஜனா’வில் நடந்தது என்ன? பகுதி - 2

பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் செயல்பாடு மற்றும் அத்தகைய வங்கிக் கணக்குகளில் எத்தனை கணக்குகள் இன்னமும் செயல்பாட்டில் உள்ளன என்பதை தொடரின் முதல் பகுதியில் பார்த்தோம். இரண்டாம் பகுதியாக, மத்திய அரசின் `அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ பற்றிப் பார்ப்போம்...

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா:

வரும் 2022-ம் ஆண்டுக்குள் `இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சொந்த வீடு’ என்ற இலக்குடன் பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம்தான் `பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்பதாகும். இந்தத் திட்டத்தை 2015 ஜூலை 25-ல் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், குடிசைவாசிகள், பட்டியல் இனத்தவர் உள்ளிட்டோருக்கு சொந்தவீட்டை உறுதிசெய்வதைக் கருத்தில்கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

சிறப்பம்சம்: 

இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சமாக, ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டரை லட்சம் ரூபாய்வரை அரசின் மானியமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு 6.5 விழுக்காடு வட்டித் தொகை மானியமாக வழங்கப்படுகிறது. 9 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மூன்று முதல் நான்கு சதவிகித வட்டித் தொகையை அரசு மானியமாகச் செலுத்தும். கடன் தொகையை 20 வருடங்களில் பயனாளிகள் திருப்பிச் செலுத்தலாம். இதன் மூலம் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்வரை வட்டி மானியத்தைப் பெறுவர். ஏற்கெனவே சொந்தவீடு வைத்திருப்பவர்கள், இத்திட்டத்தின்கீழ் கடன்பெற்று வீட்டைப் புதுப்பித்துக் கொள்ளவும் வகைசெய்யப்பட்டுள்ளது.  

வீடு வழங்கும் திட்டத்தில் நடந்தது என்ன?

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1985-ல் 'இந்திரா ஆவாஸ் யோஜனா' என்ற பெயரில் அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஏழை-எளிய மக்களுக்கு வீடுகட்டுவதற்கு வழங்கப்படும் கடன் தொகையில் மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தும், மேம்படுத்தியும் 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' என்ற பெயரில் இப்போதைய பிரதமர் மோடி தொடங்கினார். 

இப்போதைய மத்திய அரசு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அனுமதி அளித்த மற்றும் கட்டிக்கொடுத்துள்ள வீடுகளின் விவரங்களைக் கீழே காணலாம்.

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் நடந்த விவரங்கள்

நகர்ப்புறங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 65 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட 12 லட்சம் வீடுகளே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாது இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான மொத்தத் தொகையில் சுமார் 22 சதவிகித தொகையையே அரசு செலவிட்டுள்ளதாகத் தனியார் நிறுவன ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கிராமப்புற மக்களுக்கு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளை வழங்கிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருந்தாலும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கட்டப்பட்டு வரும் வீடுகளிலும் பாதிக்கும் மேற்பட்டவை இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை என்று மாநிலங்களவை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த விவரம்:

ஆவாஸ் யோஜனா வில் நடந்தது என்ன

`அனைவருக்கும் வீடு’ என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை மோடி அரசு சிறப்பாகச் செயல்படுத்தி இருப்பதுடன், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கட்டிக்கொடுத்த வீடுகளைவிட அதிக எண்ணிக்கையிலான வீடுகள், அவற்றைக் கட்டுவதற்கு ஆகும் காலம் போன்றவற்றில் இப்போதைய அரசு துரிதமாகச் செயல்பட்டுள்ளதும் தெரியவருகிறது. என்றாலும், இந்தத் திட்டத்தின் முழு வெற்றிக்கும் பி.ஜே.பி மட்டுமே காரணம் கிடையாது. வீடு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்து, கடந்த பல ஆண்டுகளாக அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து, மெருகேற்றி வைத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கும் `ஆவாஸ் யோஜனா’ வெற்றியில் பங்குண்டு என்பதே உண்மை.

- தொடரும்... 


டிரெண்டிங் @ விகடன்