Published:Updated:

"ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க அழிந்துவிடும் என நினைத்தார்கள்!" - உருகிய பா.ஜ.க வேட்பாளர்

"ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க அழிந்துவிடும் என நினைத்தார்கள்!" - உருகிய பா.ஜ.க வேட்பாளர்
"ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க அழிந்துவிடும் என நினைத்தார்கள்!" - உருகிய பா.ஜ.க வேட்பாளர்

அ.தி.மு.க-வில் உள்ள முக்கிய அமைச்சர்கள் சிலரே, சமயங்களில் ஜெயலலிதா பெயரை உச்சரிக்கத் தவறிவிடும் சூழலில்,  அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க-வினர், வாக்குகளுக்காக  ஜெயலலிதா புகழ்பாட ஆரம்பித்துள்ளனர். கோவையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவைப் புகழ்ந்து அ.தி.மு.க-வினரைக் குளிரவைத்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம், கோவை சுங்கம் பகுதியில் நேற்று நடந்தது. பியூஷ்கோயல், அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பா.ஜ.க  மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கோவை பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முதலில் மைக் பிடித்த, கோவை பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், "தமிழகத்தின் ஆளுமை மிகு முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவரின் மறைவிற்குப் பிறகு, அ.தி.மு.க. அழிந்துவிடும் என்று சிலர் எண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. ஈ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும்  இணைந்து, இப்போது அ.தி.மு.க தலைமையில் இந்த மெகா கூட்டணியை அமைத்து எதிர்க்கட்சியினருக்கு பதிலடிகொடுத்துள்ளார்கள். மோடி அரசு  தமிழகத்திற்கு ஒதுக்கிய அளவுக்கான நிதி வேறு எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில், பல மாவட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தென்னிந்திய நதிகள் இணைக்கப்பட உள்ளது. கோவை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திலான பேருந்து நிலையம் கோவையில் அமைக்கப்படும்" என்றார்

அடுத்ததாகப் பேசிய அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, " வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே சி.பி.ஆரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கப்போகிறது என்பதற்காகவே இப்போதைய போராட்டம்.
மோடி ஆட்சியில்தான் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சிறுபான்மையினரை  அ.தி.மு.க பாதுகாக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கோதாவரி காவிரி இணைப்பிற்காக முதல்வர் ஈ.பி.எஸ்ஸும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். பிரதர் மோடியும் அதை ஏற்றுக்கொண்டார். மீண்டும் மோடி தான் இந்தியாவின் பிரதமர். மக்களின் பிரச்னைகள் குறித்து தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு எதுவும் தெரியாது.  எதிரணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதிலே குழப்பம்

இங்கே ராகுல்காந்தி பெயரைச் சொன்ன ஸ்டாலின், மேற்கு வங்கத்தில் சொல்ல முடியவில்லை. இதுதான் எதிரணியின் நிலை. ஸ்ட்ராங்கான பிரதமராக உள்ள மோடிதான் மீண்டும் பிரதமராகப்போகிறார்.  இந்தப் பலமான கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். கோவையில் சி.பி.ஆர் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அதற்கு, உங்கள் ஒத்துழைப்பு தேவை. குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெற்றிபெற வேண்டும். நாடும் நமதே... நாற்பதும் நமதே. மோடியின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடியை வெற்றிபெற வைப்பது நமது கடமை" என்றார்

இறுதியில் பேசிய பியூஷ் கோயல், "தமிழக அரசும் மத்திய அரசும், ஏழைகளுக்காகவும் விவசாயிகளுக்காகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஏழை மக்களின் நிலை எங்களுக்கு நன்றாகத் தெரியும். மிகவும்  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றுப் பிழைத்த குடும்பத்திலிருந்து பிரதமராகியிருக்கும் மோடிக்கு, ஏழைகளின் வலி நன்கு தெரியும். ஏழைப் பெண்களுக்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இலவச கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறார். அதேபோல, இலவச கேஸ் திட்டத்தை பெண்களுக்காகக் கொண்டுவந்தார். ஏழை மாணவர்கள்  படிப்பதற்கு சிரமப்படக் கூடாது என்பற்காக அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டுசேர்த்திருக்கிறார்.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால்தால்தான், தழிழகம் வளர்ச்சி பாதையில் செல்லும். அண்டை நாட்டின் மூலம் நமக்கு ஏற்படும் அச்சத்தை மோடியால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். பயங்கரவாதத்திற்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்டைக் நடத்தியவர் நம் பிரதமர் மோடி. இந்தியாவில் ஏழைகள் உருவாகக் காரணமாக இருந்தது காங்கிரஸ். மக்கள் ஏழையானதற்கு  முழுப் பொறுப்பும் காங்கிரஸுக்கு உண்டு. ராகுல் காந்தி ஏழைகளுக்கு பணம் வழங்குவதாக அறிவித்திருப்பது மக்களை முட்டாள்களாக்கும் முயற்சி. அது இந்திய மக்களிடம் எடுபடாது. மீண்டும் மோடிதான் பிரதமர்" என்று முடித்தார்.

பின் செல்ல