`72,000 ரூபாய்... ராகுலின் வாக்குறுதி சாத்தியமாகுமா?’ | Can Rahul fulfill his assurance of 72000 to poor

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (27/03/2019)

கடைசி தொடர்பு:14:54 (27/03/2019)

`72,000 ரூபாய்... ராகுலின் வாக்குறுதி சாத்தியமாகுமா?’

`72,000 ரூபாய்... ராகுலின் வாக்குறுதி சாத்தியமாகுமா?’

 நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றன. அதற்கேற்றவாறு தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகள் என அந்தந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அள்ளி வீசி வருகின்றனர். அதில், காங்கிரஸ் கட்சியின் சார்பாகத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். அதில், ``காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானமாக 6,000 ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் 20 சதவிகிதம் பேர்  ஆண்டுக்கு 72,000 ரூபாய் பெறுவார்கள்’’ என்று கூறியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த வாக்குறுதி அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியைச் சார்ந்திருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் அரசியல் களத்தில் விமர்சனம் செய்துவருகின்றனர்.

ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி  தலைவர்

இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஜெயரஞ்னிடம் பேசியபோது, ``கடந்த மக்களவைத் தேர்தலின்போது கறுப்புப் பணத்தை மீட்டு அதிலிருந்து 15 லட்சம் ரூபாய் பணம் ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்திருந்தார். இது சாத்தியமில்லாத வாக்குறுதி என்பது அவருக்கே தெரியும். அதேபோன்று தற்போது ராகுல் காந்தி  72,000 ரூபாய் ஏழைக் குடும்பங்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். இது சாத்தியமா என்பதுதான் தற்போதைய கேள்வி? ஒரு குடும்பத்தின் பற்றாக்குறையைக் கணக்கில்வைத்து இந்தத் தொகையைக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். ராகுலின் இந்த வாக்குறுதியை நாம் புறம் தள்ளிவிட முடியாது.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

காரணம், மோடி தலைமையிலான ஆட்சியில் வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதாகக் கூறினார். அவர் கொடுத்த அந்த வாக்குறுதியை இதுவரை  நிறைவேற்றவில்லை. ஆனால் வருடத்திற்கு  2 கோடி பேர் வேலை இழந்து வருகிறார்கள். இன்றையச் சூழலில் புதிய வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அதனால் வரியை விதித்து அதில்  வருகிற பணத்தை மக்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலை. குறிப்பாக, இதுபோன்ற திட்டங்கள்தான் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும். அதேநேரத்தில், இந்த வரி விதிப்பு முறையில் சில சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக, சாதராண மக்களிடம் மட்டுமே வரி விதிப்பு  நடைமுறைப்படுத்தப்படுகிறது. பெரிய பெரிய தொழிலதிபர்களிடம் இந்த வரி விதிப்பு செல்லுபடியாகவில்லை என்பது மிகவும் வேடிக்கை. 

எனவே, பெரும் முதலாளிகளுக்கும் முறையான வரி விதிப்பை நடைமுறைப்படுத்தி அதிலிருந்து வரும் நிதியைக் கொண்டு, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் ராகுல் காந்தி இந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கலாம். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் வளர்ச்சி வேறுபாடு இருப்பதாகக் கூறி, `மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தனர். அந்தத் திட்டத்துக்கு 50,000 ரூபாய் கோடி செலவு செய்தனர். தற்போது  ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருப்பது அப்படியான ஒரு திட்டம்தான். அந்தத் திட்டத்துக்கு ஆன செலவைவிட இந்தத் திட்டத்துக்கு 6 மடங்கு செலவு ஏற்படலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சி அமைந்தால், அவர்கள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒரே வழி  பெரும் முதலாளிகளிடம் முறையான வரியை வசூலித்தால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும்’’ என்றார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் சரிதான்... 


டிரெண்டிங் @ விகடன்