`ஜெயலலிதா செய்ததைத்தான் எடப்பாடியும் செய்கிறார்!’ - தேர்தல் பணி மெத்தனத்தால் கடுகடுக்கும் தே.மு.தி.க | Dmdk disappointed on admk cadres election work

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (27/03/2019)

கடைசி தொடர்பு:13:47 (27/03/2019)

`ஜெயலலிதா செய்ததைத்தான் எடப்பாடியும் செய்கிறார்!’ - தேர்தல் பணி மெத்தனத்தால் கடுகடுக்கும் தே.மு.தி.க

வடசென்னைத் தொகுதியில் வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து நேற்று முன்தினம் திருவொற்றியூரில் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் தேர்தல் வேலைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள். உள்ளூர் அ.தி.மு.க-வினர் பலரும் பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராஜேஷுக்காக வேலை பார்க்கச் சென்றுவிட்டனர்.

`ஜெயலலிதா செய்ததைத்தான் எடப்பாடியும் செய்கிறார்!’ - தேர்தல் பணி மெத்தனத்தால் கடுகடுக்கும் தே.மு.தி.க

`தே.மு.தி.க போட்டியிடும் தொகுதிகளில் அ.தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை’ என்ற குமுறல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. `பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குக் காட்டும் அக்கறையைக்கூட வடசென்னை தே.மு.தி.க வேட்பாளர் மோகன்ராஜுக்குக் காட்டுவதில்லை’ என ஆதங்கப்படுகின்றனர் தே.மு.தி.க வட்டாரத்தில். 

பிரேமலதா, விஜயகாந்த்

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரையில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்று காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. தினகரனின் அ.ம.மு.க வேட்பாளர்கள் அனைவரும் நேற்று ஒரேநாளில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதுவரையில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு 1,237 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. `யாருடைய வேட்புமனுவெல்லாம் நிராகரிக்கப்படும்?’ என்ற எதிர்பார்ப்பு அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது. நாளை மறுநாள் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. 

விஜயகாந்த்

வேட்புமனு வேலைகள், சின்னம் பிரச்னை எனத் தேர்தல் ஆணையத்தின் ஆட்டம் ஒருபுறம் இருந்தாலும், வாக்கு சேகரிக்கச் செல்லும் கூட்டணிக் கட்சிகளின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. குறிப்பாக, `அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் எழுந்துள்ளது. இதுகுறித்துப் பேசும் அ.தி.மு.க கூட்டணிக்கட்சி ஒன்றின் நிர்வாகிகள் சிலர், ``மக்களிடம் சென்று வாக்கு சேகரிப்பதைவிடவும் அமைச்சர்களின் பின்னால் செல்வதைத்தான் அ.தி.மு.க-வினர் விரும்புகிறார்கள். `தேர்தல் முடிந்த பிறகும் கூட்டணிக் கட்சிகள் நம்மோடு நிற்பார்கள் என்பது நிச்சயமில்லை’ என்ற மனநிலைக்கு அ.தி.மு.க-வினர் வந்துவிட்டார்கள். தர்மபுரியில் அன்புமணி போட்டியிடுகிறார். கள்ளக்குறிச்சியில் தே.மு.தி.க துணைச் செயலாளர் சுதீஷ் போட்டியிடுகிறார். இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் அ.தி.மு.க தலைகளைப் பார்க்க முடிகிறது. பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க போட்டியிடும் மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க-வினர் எந்தவித அக்கறையையும் காட்டுவதில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளைவிடவும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியைத்தான் பிரதானமாகப் பார்க்கின்றனர். 

விஜயகாந்த்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பக்கம் கட்சி நிர்வாகிகள் இரண்டாகப் பிரிந்து நிற்கின்றனர். `தேனித் தொகுதியில் பன்னீர்செல்வம் மகனுக்காகத் தேர்தல் வேலை பார்த்தால், நாளை உறுதியாக எம்.எல்.ஏ சீட் கிடைக்கும்’ எனச் சிலர் கணக்குப் போடுகின்றனர். `சட்டமன்றத் தேர்தலில் 70 சீட்டுகளை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தால், மீதமுள்ள 30 சதவிகித சீட்டுக்களை பன்னீர்செல்வம்தான் முடிவு செய்வார். எனவே, இவர்கள் பின்னால் செல்வதே நல்லது; கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெற வைத்து என்ன கிடைக்கப்போகிறது’ என அ.தி.மு.க நிர்வாகிகள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர். எனவே, அ.தி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். `எங்கள் வெற்றியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் வெற்றியை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்பதுதான் அ.தி.மு.க-வினரின் மனநிலையாக இருக்கிறது’’ என்கின்றனர் ஆதங்கத்துடன். 

எடப்பாடி பழனிசாமி

தேர்தல் வேலைகள் தொடர்பாக நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர், ``கள்ளக்குறிச்சியைத் தவிர, தே.மு.தி.க போட்டியிடும் மற்ற 3 தொகுதிகளில் அ.தி.மு.க-வினர் எந்த வேலையையும் தொடங்கவில்லை. `தேர்தல் செலவுக்குப் பணம் வந்தால், நாங்கள்தான் விநியோகிப்போம்’ என அ.தி.மு.க நிர்வாகிகள் கூறுவதை தே.மு.தி.க-வினர் ஏற்க மறுத்துவிட்டனர். `பணம் கொடுக்கும் வேலைகளை நாங்களே பார்த்துக்கொள்வோம்’ என தே.மு.தி.க-வினர் கூறுவதை அவர்கள் ஏற்கவில்லை. தேர்தல் களத்தில் கீழ்மட்டத்தில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளோடு தே.மு.தி.க-வினரால் இணைந்து செயல்பட முடியவில்லை. `இப்படியெல்லாம் நடக்கும் எனத் தெரிந்துதான் தி.மு.க கூட்டணிக்குப் போகலாம் எனச் சொன்னோம். அதையும் மீறி அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தோம். இந்தக் கூட்டணியில் மரியாதையே இல்லை. இப்படிப்பட்ட இடத்தில் இருப்பதை கேப்டனும் விரும்ப மாட்டார். மரியாதை இழந்து நிற்க வேண்டியதாக இருக்கிறது. நாம் போட்டியிடாத தொகுதிகளில் உள்ள தே.மு.தி.க நிர்வாகிகளை அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதுவே, நாம் போட்டியிடும் தொகுதிகளில் எந்த வேலையும் நடப்பதில்லை’ எனத் தே.மு.தி.க கிளைக்கழக நிர்வாகிகள் ஆதங்கத்தோடு பேசுகின்றனர். வடசென்னை, விருதுநகர், திருச்சி, தொகுதிகளில் இந்த மோதல் நீடிக்கிறது’’ என விவரித்தவர்கள், 

பிரேமலதா

``வடசென்னைத் தொகுதியில் வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து நேற்று முன்தினம் திருவொற்றியூரில் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் தேர்தல் வேலைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள். உள்ளூர் அ.தி.மு.க-வினர் பலரும் பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராஜேஷுக்காக வேலை பார்க்கச் சென்றுவிட்டனர். அதிலும், ஆர்.கே.நகர் தொகுதியில் தே.மு.தி.க போட்டியிடுவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கள்ளக்குறிச்சியில் மட்டும் ஓரளவுக்குத் தேர்தல் வேலைகள் நடக்கிறது. `இங்கு எதாவது செய்தால் பிரேமலதாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்’ என அ.தி.மு.க தலைமை நினைக்கிறது. எனவே, `அங்கு மட்டும் எச்சரிக்கையாக இருங்கள்’ எனத் தலைமைக் கழக நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளனர். `நாம் வளர்ந்துவிடக் கூடாது’ என்ற எண்ணத்தில், ஜெயலலிதா செய்த வேலையைத்தான் எடப்பாடி பழனிசாமியும் செய்து வருகிறார் என்ற கோபமும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது’’ என்கின்றனர் குமுறலுடன்.