Published:Updated:

`ஒரு மத்திய அமைச்சரைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்!'- ஆ.ராசாவை உற்சாகப்படுத்திய உதயநிதி

`ஒரு மத்திய அமைச்சரைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்!'- ஆ.ராசாவை உற்சாகப்படுத்திய உதயநிதி
`ஒரு மத்திய அமைச்சரைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்!'- ஆ.ராசாவை உற்சாகப்படுத்திய உதயநிதி

``மோடி எனும் வில்லனுக்கு ஈ.பி.எஸ். மற்றும் ஒ.பி.எஸ். அடியாளாக உள்ளனர்'' என உதயநிதி ஸ்டாலின் ஊட்டியில் பேசினார்.

நீலகிரி தனித் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து ஊட்டியில் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த ராசா தற்போது 2ஜி வழக்கில் தன்னை விடுவித்து புது உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு மக்களைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டார். ஏப்ரல் 2-ம் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆ.ராசாவை ஆதரித்து பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஸ்டாலின் ஊட்டிக்கு வருவது இன்னும் உறுதியாகவில்லை என தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஊட்டி காப்பி அவுஸ் சதுக்கத்தில் ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ``ஐந்து வருடங்கள் நம்ம பட்ட கஷ்டம் போதும். ஒருமுறை மோடியை தேர்வு செய்தீர்கள் ஐம்பது ஆண்டுகள் நம் நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டார். மீண்டும் ஒருமுறை தேர்வு செய்தால் மேலும் ஐம்பது ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளி விடுவார் அந்தத் தவற்றை செய்யப்போகிறீர்களா. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மோடி ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் பணம் செலுத்தப்படும் என்றார். ஆனால், எல்லோருக்கும் நாமத்தைப் போட்டார். இப்போது நமக்கு அந்த வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 18-ம் தேதி நாமத்தை மோடி தலையில் நாம் போட வேண்டும்.

இன்னுமொரு சாதனையைச் செய்தார் மோடி. 500,1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து புதிய இந்தியா பிறக்கும் என்றார். அதுவும் நடக்கவில்லை. கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்றார். தீவிரவாதம் அழிக்கப்படும் என்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஜி.எஸ்.டி வரி மூலம் சிறு குறு வணிகர்களை நடு வீதிக்கு கொண்டுவந்துவிட்டார் மோடி. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ், விவசாயக் கடன் தள்ளுபடி, அதேபோல் கல்வி கடன் தள்ளுபடி, சமையல் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட விலைகள் குறைக்கப்படும் என பல திட்டங்கள் உள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையே ஹீரோவாக உள்ளது. மோடி என்னும் வில்லனுக்கு  ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அடியாளாக உள்ளனர்.  நீலகிரி தொகுதியில் ராசாவை வெறும் எம்.பி.யாக தேர்வு செய்யப்போவதில்லை. ஒரு மத்திய அமைச்சரை தேர்வு செய்ய உள்ளீர்கள்'' என்றார். மேலும், தற்போது நடைபெறும் ஆட்சி  மக்கள் விரோத அதிலும் பெண்கள் விரோத ஆட்சியாக உள்ளது. இதற்கு பொள்ளாச்சி சம்பவமே சான்று” என்றார்.