Published:Updated:

அதே கோயில்கள்... அதே சென்டிமென்ட்... - தம்பிதுரை வழியில் ஜோதிமணி

அதே கோயில்கள்... அதே சென்டிமென்ட்... - தம்பிதுரை வழியில் ஜோதிமணி
அதே கோயில்கள்... அதே சென்டிமென்ட்... - தம்பிதுரை வழியில் ஜோதிமணி

கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை தனது பிரசாரத்தை கோடங்கிப்பட்டி பட்டாளம்மன், முத்தாளம்மனை வணங்கிவிட்டுதான் தொடங்கினார். கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும், தனது முதல் நாள் பிரசாரத்தை அதே பட்டாளம்மன், முத்தாளம்மன் கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு தொடங்கி இருக்கிறார்.

ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, பரபரவென தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்கள். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக மறுபடியும் தம்பிதுரையே களம் காண்கிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். ஐந்து நாள்களுக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கிவிட்டார் தம்பிதுரை. தான் சென்டிமென்டாக கருதும் திருச்சி பைபாஸில் உள்ள கோடங்கிப்பட்டி பட்டாளம்மன், முத்தாளம்மன் கோயில்களில் சாமி தரிசனம் செய்தபிறகு, பிரசாரத்தை தொடங்கினார். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் அந்தக் கோயில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு, இன்று பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார். தொடர்ந்து, ஜோதிமணி கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி, கொங்கு நகர் , அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவரோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்கள் மத்தியில் பேசும் போது, ``திருச்சி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி பகுதியில், ஜோதிமணி வெற்றி பெற்றால் நிச்சயம் மேம்பாலம் அமைத்து தரப்படும். நான் கரூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது, மேம்பாலத்தைக் கட்டியிருப்பேன். இது தேசிய நெடுஞ்சாலை என்பதால், மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும். அதனால், அப்போது என்னால் உங்க ஊரில் மேம்பாலம் கட்ட முடியவில்லை.

ஜோதிமணி வெற்றி பெற்றால், விவசாயக் கடன், கல்வி கடன், காஸ் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றி தரப்படும்" என்றார். இந்தப் பிரசாரத்தின்போது, தி.மு.க மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.