Published:Updated:

கடலூரில் அ.ம.மு.க. வேட்பாளர்  வேட்பு மனு தள்ளுபடி

கடலூரில் அ.ம.மு.க. வேட்பாளர்  வேட்பு மனு தள்ளுபடி
கடலூரில் அ.ம.மு.க. வேட்பாளர்  வேட்பு மனு தள்ளுபடி

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புசெல்வன் தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட 23 பேர் மனுக்கள் ஏற்கொள்ளப்பட்டன. அ.ம.மு.க. வேட்பாளர் கார்த்திக் மனு உள்ளிட்ட 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைந்தது. கடலூர் மக்களவை தொகுதிக்கு தி.மு.க, பா.ம.க, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட 41 பேர்  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புசெல்வனிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெ.அன்புசெல்வன் தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட 23 பேர் மனுக்கள் ஏற்கொள்ளப்பட்டன. அ.ம.மு.க. வேட்பாளர் மனு உள்ளிட்ட 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

 அ.ம.மு.க. சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பொறியாளர் கார்த்திக் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனு பரிசீலனையின்போது இவருக்காக 10 பேர் முன்மொழிந்திருந்தனர்.

இதில் 2 பேரின் வாக்காளர் படிவத்தில் மாறுதல் இருந்ததால் இவரின் மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புசெல்வன் தள்ளுபடி செய்தார். இவரின் மாற்று வேட்பாளரான பண்ருட்டி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த காசிதங்கவேல்  வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் மாற்று வேட்பாளர், வேட்பாளரானார்.