``மோடிக்கும் ராகுலுக்கும் உள்ள வித்தியாசம் மலையையும் மடுவையும் போன்றது" - திருப்பூரில் பிரேமலதா பேச்சு | Premalatha vijayakanth election campaign at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:14 (29/03/2019)

``மோடிக்கும் ராகுலுக்கும் உள்ள வித்தியாசம் மலையையும் மடுவையும் போன்றது" - திருப்பூரில் பிரேமலதா பேச்சு

பிரேமலதா பிரசாரம்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்து, கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வின் பொருளாளர் பிரேமலதா நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா, "எதிரணியான தி.மு.க-வினர், இந்தக் கூட்டணி அமையக் கூடாது என்பதற்காகப் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்தார்கள். ஆனால், இது ஒரு வெற்றிக் கூட்டணி. இதுபோன்ற கூட்டணி இதுவரை அமைந்ததில்லை. இந்தக் கூட்டணி இப்போது மட்டுமல்ல. இனி வரும் தேர்தல்களிலும் நிச்சயமாகத் தொடரும். எங்களது கூட்டணியில் நதிகள் இணைப்புத் திட்டத்தை முதன்மைத் திட்டமாக செயல்படுத்தப் பாடுபடுவோம். ஜி.எஸ்.டி-யால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில்துறையினர், இனி ஒருபோதும் பாதிக்காத வகையில் ஜி.எஸ்.டி வரியின் சதவிகிதம் குறைக்கப்படும். அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ஜ.க-வினர் எல்லாம் பக்திமான்கள். பண்புமிக்க பணிவாளர்கள். ஆனால் எதிர்க்கட்சியினரோ, பரோட்டா கடைக்குப் போனாலும் சரி, பியூட்டி பார்லருக்குப் போனாலும் சரி, அடித்துக்கொண்டு அராஜகம் செய்கிறார்கள். ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு ரவுடியிஸம் என்றால், ஆட்சியே அவர்களிடம் சென்றால் தமிழ்நாட்டின் நிலைமை என்னவாகும். ஊழல்களின் மொத்த உருவமாகத்தான் தி.மு.க -  காங்கிரஸ் கூட்டணி அமைந்திருக்கிறது. ஈழத்தில் தமிழ் இனப் படுகொலைக்குக் காரணமான தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு இனி ஒரு ஓட்டுகூட கிடையாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். எதிரணியில் பாரதப் பிரதமராக ராகுல்காந்தி வருவார் என்று சொல்கிறார்கள். ஆனால், மோடிக்கும் ராகுல் காந்திக்கும் உள்ள வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது.
விஜயகாந்த் நலமாக உள்ளார். அவர் எந்த நேரத்தில் எப்போது  பிரசாரத்துக்கு வருவார் என்பதைப் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றார்.