``தினகரன் எதிர்பார்க்கும் மூன்று சின்னங்கள்!'- இன்று விடையளிக்குமா தேர்தல் ஆணையம்? | dinakaran expects common symbol from three symbol list

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:25 (29/03/2019)

 ``தினகரன் எதிர்பார்க்கும் மூன்று சின்னங்கள்!'- இன்று விடையளிக்குமா தேர்தல் ஆணையம்?

அ.ம.மு.க. கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதால், தினகரனுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை மறுத்ததோடு, தினகரன் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் எதிர்காலம் கருதி பொதுச் சின்னமாக ஒன்றை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்தது.

தினகரன்

இதன் தொடர்ச்சியாக, உச்சநீதிமன்ற உத்தரவு நகலுடன் தாங்கள் எதிர்பார்க்கும் மூன்று சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் தினகரன் தரப்பு சமர்ப்பித்தது. இதுவரை எந்தப் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் ஒதுக்கப்படாத, தொப்பி, குக்கர், சாவி ஆகிய மூன்று பொதுச் சின்னங்களில் இருந்து ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு தினகரன் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இன்று மாலைக்குள் இம்மூன்றில் ஒரு சின்னத்தை தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என அ.ம.மு.க-வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், பொதுச்சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைதான் செய்ததே தவிர, உத்தரவிடவில்லை. இதனால், தினகரனுக்கு பொதுச்சின்னம் வழங்க வாய்ப்பில்லை என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், ``தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் எப்போதும் பரிந்துரைதான் செய்யும். இதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. எங்களுக்கு கண்டிப்பாக பொதுச்சின்னம் வழங்கியாக வேண்டும். 100 சதவிகிதம் நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்றவரிடம், ``ஒருவேளை பொதுச்சின்னம் வழங்கப்படவில்லை என்றால் உங்கள் நிலைமை?" என்றோம்.

சி.ஆர்.சரஸ்வதி

``எங்களுடைய முதல் சின்னமே தினகரன்தான். ராயபுரத்தில் அவர் பிரசாரம் தொடங்கியபோது ஆயிரக்கணக்கானோர் நிற்க கூட இடமில்லாமல் கூடியிருந்தனர். அதே பகுதியில் எடப்பாடி பழனிசாமி வந்தபோது 500 பேர் கூட இல்லை. இந்தத் தேர்தலில் சின்னம் ஒரு பொருட்டல்ல. எங்கள் உரிமையை விட்டுத்தரக் கூடாது, பிரசாரத்துக்கும் ஏதுவாக இருக்குமே என்றுதான் பொதுச்சின்னம் கோருகிறோம்." என்றார்.

40 நாடாளுமன்றத் தொகுதிகள், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உட்பட 19 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் சுயேச்சை சின்னம் வழங்கப்பட்டாலும் அதை எதிர்கொள்ள அ.ம.மு.க. தரப்பு தயாராக இருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு தினகரன் தரப்பு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் சுயேச்சைகளாகதான் கருதப்படுவார்கள் என்பதால், தேர்தலுக்குப் பிந்தைய குதிரை பேரத்தை நடத்திவிடலாம் என எடப்பாடி தரப்பு குஷியாக உள்ளது. யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.