`எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்!’ - மோடி | modi slams congress

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:26 (29/03/2019)

`எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்!’ - மோடி

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் குறைந்தபட்ச வருமானம் உறுதியளிப்பு திட்டம் கேலிக்கூத்தானது என மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மோடி

`மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் பெறும் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி 20 சதவிகிதம் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் வழங்கப்படும்'' என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்தத் திட்டத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பா.ஜ.கவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய மோடி,` `நிலத்திலும், வானிலும் விண்வெளியிலும், பா.ஜ.க அரசு துல்லியமாகத் தாக்குதல் நடத்தி சாதனை படைத்துள்ளது. எதிர்க்கட்சிகள்தான் நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறார்கள்.

மோடி

தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். என் ஐந்தாண்டுகால சாதனையை பட்டியலிடுகிறேன். எதிர்க்கட்சிகளால் அவர்கள் சாதனையை பட்டியலிட முடியுமா?'' எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து காங்கிரஸை சாடிய அவர், ``ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆட்சிகாலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கை கூட தொடங்கவில்லை. ஆனால் தற்போது, அந்த மக்களுக்காக ஆண்டுக்கு 72,000 நிதி உதவி திட்டத்தை அறிவித்திருப்பது கேலிக்கூத்தானது'' என்றார்.