‘இலங்கையில் ரூ.27 ஆயிரம் கோடி முதலீடு?’ -ஜெகத்ரட்சகனை அலறவிடும் பா.ம.க! | "Rs 27,000 crores invested in Sri Lanka?" - New Complaint against Jagathrakshakan by PMK

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:40 (30/03/2019)

‘இலங்கையில் ரூ.27 ஆயிரம் கோடி முதலீடு?’ -ஜெகத்ரட்சகனை அலறவிடும் பா.ம.க!

``அரக்கோணம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன், இலங்கையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ. 27 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளதாகவும், அதை கணக்கில் காட்டாததால், அவரின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்’’ என்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பா.ம.க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன்

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரன், அ.ம.மு.க வேட்பாளர் பார்த்திபன் உட்பட, 29 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 27-ம் தேதி நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில், தி.மு.க, பா.ம.க, மக்கள் நீதி மய்யம் உட்பட 23 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே, பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியின் மாற்று வேட்பாளர் சரவணன் தலைமையிலான பா.ம.க நிர்வாகிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்திபனை திடீரெனச் சந்தித்து, ஜெகத்ரட்சகன் மீது பரபரப்பு புகார் அளித்தனர்.

``ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் மனைவி பெயரில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இலங்கையில் ரூ.27 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளது. இந்த சொத்துகளை ஜெகத்ரட்சகன் வேட்புமனுவில் மறைத்துள்ளார். இது, மிகப்பெரிய குற்றம். எனவே, ஜெகத்ரட்சகனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்’’ என்று பா.ம.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குத் தேர்தல் அதிகாரி, ‘‘இலங்கை நிறுவனத்தில் ஜெகத்ரட்சகன் முதலீடு செய்யவில்லை. அதிலிருந்து, விலகிக்கொண்டதாகக் கூறினார்.'' ‘‘முதலீடு செய்வதிலிருந்து ஜெகத்ரட்சகன் விலகிக்கொண்டதற்கான சான்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா?’’ என்றுப் பா.ம.க-வினர் கேள்விகேட்டனர்.

‘இல்லை’ என்று சொன்ன தேர்தல் அதிகாரி, ‘‘ஜெகத்ரட்சகன் மனுவைப் பரிசீலனைசெய்து ஏற்றுக்கொண்டோம். நீங்கள் சொல்லும் தகவலை வைத்து அவரின் மனுவைத் தள்ளுபடிசெய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது’’ என்று விளக்கமளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியிடம், ஜெகத்ரட்சகன் மீது புகார் அளிக்கப் பா.ம.க நிர்வாகிகள் முடிவுசெய்துள்ளனர்.