Published:Updated:

`கூட்டணிக்காக ராமதாஸ் செய்த காரியத்தைப் பாருங்கள்!'- திருமாவளவன் வெளியிட்ட பகீர்

`கூட்டணிக்காக ராமதாஸ் செய்த காரியத்தைப் பாருங்கள்!'- திருமாவளவன் வெளியிட்ட பகீர்
`கூட்டணிக்காக ராமதாஸ் செய்த காரியத்தைப் பாருங்கள்!'- திருமாவளவன் வெளியிட்ட பகீர்

``சமுதாய மக்கள் அளித்த வாக்கை வியாபாரமாக்கி 500 கோடி பணம் மற்றும் 7 சீட்டுகளை வாங்கிக்கொண்டு அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க அடிபணிந்துவிட்டது. இதுதான் தொண்டர்களுக்குச் செய்யும் தர்மமா?" என ராமதாஸைச் சாடினார் திருமாவளவன்.

சிதம்பரம் தொகுதியில் தி.மு.க கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து அரியலூர், பெரம்பலூர் தி.மு.க கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது.  கூட்டத்தில் அனைத்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசும்போது, ``மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்கெனவே, இந்தத் தொகுதியில் 5 ஆண்டுக் காலம் எம்.பியாக இருந்தவர். அவர் எம்.பியாக இருந்த காலங்களில் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றதில்லை. அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட்டதில்லை. எனவே, அவரை நம்பி வாக்களிக்கலாம். மாற்றுக் கட்சியினர் வேண்டுமென்றே அவர் தவறான பாதையில் இளைஞர்களை அழைத்துச் செல்கின்றார் எனக் கூறிவருகின்றனர். மேலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றால், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் உடனடியாக தொடங்கப்படும். இல்லையெனில், திட்டத்துக்குக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிய விவசாயிகளிடம் திருப்பி வழங்கப்படும். தற்போது மத்தியில் உள்ள அரசு அரசியலமைப்பு சட்டத்தைத் தூக்கி எறியும் அரசாக உள்ளது. மதச்சார்பற்ற அரசாக மத்திய அரசு இருக்க வேண்டும்" என்றார்.

அவரைத்தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசத்தொடங்கினார். ``அ.தி.மு.க கொள்ளையடித்த பணத்தைத் தேர்தலில் கொட்டுகிறார்கள். தி.மு.க கூட்டணி பேரம் பேசி அமைந்த கூட்டணி இல்லை. மாடு தரகைப்போலப் பேரம் பேசி அமைந்துள்ள கூட்டணிதான் அ.தி.மு.க கூட்டணி. சமுதாய மக்கள் அளித்த வாக்கை வியாபாரமாக்கி 500 கோடிகளைப் பெற்றுக்கொண்டு 7 சீட்டுகளை வாங்கி அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைந்துள்ளது. ராமதாஸ் கொள்கைகளைக் கற்றுத்தரவில்லை. மாறாக மரத்தை வெட்டுவது, பெட்ரோல் குண்டுகளை வீசுவது என்பதையே கற்றுக் கொடுத்துள்ளார். என்னை அறிமுகம் செய்ததாகக் கூறுகிறார்.

என்னை என் ஊரிலேயே அறிமுகம் செய்ய அவர் யார். நாட்டைக் காப்பாற்ற தி.மு.க தலைமை தேவை என்பதைக் கருத்தில் கொண்டு அமைந்த கூட்டணிதான் இந்தக் கூட்டணி. மக்களின் ஆதரவைப் பார்த்து அதைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். மீண்டும் வேண்டாம் மோடி என்பதே நமது தேர்தல் முழக்கமாக இருக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பா.ம.கவை வன்முறைக்கட்சி என்று சட்டமன்றத்திலேயே பதிவு செய்துள்ளார். அக்கட்சியுடன்தான் அ.தி.மு.க தற்போது கூட்டணி அமைத்துள்ளது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.

தேசத்தைக் காப்பாற்ற ராகுல் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க கூட்டணி அமைத்துள்ளது. இயற்கை பேரிடர்களால் ஒரு சில இடங்கள் பாதிக்கப்படும். ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். பா.ஜ.க மற்றும் சங்பரிவார் அமைப்புகளால் தேசத்திற்குப் பேராபத்து சூழ்ந்துள்ளது. அதை முறியடிக்க வேண்டிய இடத்தில் உள்ளோம். நான் எந்தக் குறிப்பிட்ட ஜாதிக்கும் எதிரானவன் அல்ல. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது கருணாநிதிதான். இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினரை ராமதாஸ் இதுவரை பார்த்ததுண்டா. ஆனால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கி பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுத்தது கருணாநிதிதான். அதை வன்னிய நண்பர்கள் மறந்துவிடக் கூடாது" எனப் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு