``50 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பேருந்து நிலைய கோரிக்கை'' - குளித்தலை மக்களின் வாக்கு யாருக்கு...? | What are the demands of Kulithalai voters in this election?

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (29/03/2019)

கடைசி தொடர்பு:21:10 (29/03/2019)

``50 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பேருந்து நிலைய கோரிக்கை'' - குளித்தலை மக்களின் வாக்கு யாருக்கு...?

``50 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பேருந்து நிலைய கோரிக்கை'' - குளித்தலை மக்களின் வாக்கு யாருக்கு...?

``சும்மா வாக்குறுதிக் கொடுத்தா பத்தாது. குளித்தலைத் தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என `பாண்டு’ பத்திரத்தில் யார் எழுதிக் கையெழுத்துப் போடுறாங்களோ, அவங்களுக்குதான் எங்க ஓட்டு’’ என்று அதிரடியாகத் தெரிவித்து, வேட்பாளர்களை மிரள வைக்கிறார்கள் அந்தத் தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள். குளித்தலை சட்டமன்றத் தொகுதி, கரூர் மாவட்டத்தில் வந்தாலும், நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை பெரம்பலூர் தொகுதியின் கீழ் அடங்கியுள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் என்.ஆர்.சிவபதியும் தி.மு.க கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சி தலைவர் பாரிவேந்தரும் களமிறங்கி இருக்கிறார்கள். `காஸ்ட்லி தொகுதி’, `கரன்சிகள் விளையாடும் தொகுதி’ என்றெல்லாம் இந்தத் தொகுதியைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், ``பணமெல்லாம் கொடுத்து எங்க வாக்குகளை வாங்கிடலாம்னு தப்புக்கணக்குப் போட்றாதீங்க. எங்க பகுதியில் உள்ள பிரச்னைகள் தொடர்பா நாங்க சொல்கிற கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன் என்று யார் எங்களுக்குப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தர்றாங்களோ, அவங்களுக்குதான் எங்களின் ஓட்டு’’ என்று அதிரடியாகச் சொல்கிறார்கள், கரூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.

குளித்தலை

இதுகுறித்து, நம்மிடம் பேசிய இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுந்தர்,
சுந்தர்``தமிழகத்தின் மையப் பகுதியான கரூர் மாவட்டத்தில் உள்ளது குளித்தலை சட்டமன்றத் தொகுதி. குளித்தலைத் தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேறாமல் பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. தி.மு.க தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியான குளித்தலை தொகுதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தையும் பல பிரதமர்களையும் உருவாக்கிய பெருமை கருணாநிதிக்கு உண்டு. ஆனால், அப்பேர்பட்ட குளித்தலைத் தொகுதியில் பேருந்து நிலையம் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கக் கூடியது. பெரம்பலூர் தொகுதியில் ஏற்கெனவே எம்.பி-யாக இருந்த மருதை ராஜாவும் குளித்தலைத் தொகுதிக்கு எதுவும் பண்ணல. அதனால், இந்த முறை குளித்தலைத் தொகுதியில் நீடிக்கும் பிரச்னையை எந்த வேட்பாளர் தீர்க்கறதா சொல்லி, பத்திரத்தில் கையெழுத்துப் போடுறாங்களோ அவருக்குத்தான் ஓட்டுப் போடுறதா முடிவு பண்ணி இருக்கோம்.

குளித்தலை நகரில் 50 ஆண்டுகளாக நிரந்தரப் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நான்கு பேருந்துகள் நிற்கும் அளவுக்குதான் இங்கு பேருந்து நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நகராட்சியாகக் குளித்தலை தரம் உயர்த்தப்பட்டு 25 ஆண்டுகளான நிலையிலும், நிரந்தர பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. இந்த நகராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன்கூடிய நவீன பேருந்து நிலையம் உருவாக்கப்பட வேண்டும். இது இந்தப் பகுதி மக்களின் 50 ஆண்டுக்கால கோரிக்கையாகும். குளித்தலையில் ரயில்வே கேட், அண்ணாநகர் உழவர்சந்தை வழியாக அடைக்கப்பட்ட சாலையை நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டு உடனடியாக உரிமையாளருக்கு உரிய தொகையைச் செலுத்தி பாதையை மீட்டெடுத்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அதேபோல், குளித்தலை நகரில் தீயணைப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும். குளித்தலை நகரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். 

தவிர, குளித்தலை நகரத்துக்கு எனத் தனியாக விளையாட்டு மைதானம் அமைத்துத் தருவதுடன், மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில் குளித்தலை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும். கடம்பர்கோயில் மற்றும் அய்யர் மலையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். குளித்தலை ரயில் நிலையத்தில் புதிய முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த புதிய தொழிற்சாலைகள், குளித்தலைப் பகுதியில் உருவாக்கப்பட வேண்டும்’’ என்று அப்பகுதி மக்களின் கோரிக்கைகளைப் பட்டியலிட்டார்.

குளித்தலையைச் சேர்ந்த ஆனந்த், ஆனந்த்``குளித்தலை - முசிறி நகரங்களுக்கு இடையே தடுப்பணை கட்டி, நீரைச் சேமிக்க வேண்டும். குளித்தலை நகரத்துக்கு முறையாகப் பாதாளச் சாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். குளித்தலை நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்டத் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். இப்பகுதியில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களும் தூர்வாரப்பட வேண்டும். முறையாக விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நதியின் கீழ் கட்டப்பட்ட மிக நீளமான பாலம் என்ற பெருமையைக் கொண்ட குளித்தலை - முசிறி இடையேயான தந்தை பெரியார் பாலம் இப்போது கேட்பாரின்றிக் கிடக்கிறது. ஆற்று மணலைத் தொடர்ந்து அள்ளியதால், பாலத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. மின் விளக்குகள் அமைத்து, அந்தப் பாலத்தைப் பராமரிக்க வேண்டும். 

வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வாய்க்கால்களையும் கிளை வாய்க்கால்களையும் தூர்வாரி விவசாயத்துக்குத் தண்ணீரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலைப் பகுதியில் எந்தத் தொழில் வளர்ச்சியும் இல்லாததால், அருகிலுள்ள கரூர் மற்றும் திருச்சிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தினசரி வேலைக்குச் சென்று வருகின்றனர். குளித்தலைப் பகுதியிலேயே தொழிற்சாலைகளை உருவாக்கி, இங்குள்ள இளைஞர்களுக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.

வாழை தொடர்புடைய தொழிற்சாலைகளையும், குளிர்பதனக் கிடங்குகளையும் ஏற்படுத்த வேண்டும். குளித்தலை அரசு கலைக் கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்களும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். குளித்தலைப் பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகளவில் மணல் அள்ளுவதை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே, அத்தகைய வேட்பாளர்களுக்கு எங்களின் ஓட்டு. மக்களிடையே இந்தப் பகுதி பிரச்னைகளை எடுத்துக்கூறி, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம்’’ என்றார்.  


டிரெண்டிங் @ விகடன்