ஆஸ்தான ஜோதிடர்களிடம் நேரம் கேட்ட தினகரன்! - பரிசுப் பெட்டி சின்னத்தைத் தேர்வு செய்த பின்னணி | Reason behind TTV Dinakaran getting gift box symbol

வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (29/03/2019)

கடைசி தொடர்பு:15:07 (30/03/2019)

ஆஸ்தான ஜோதிடர்களிடம் நேரம் கேட்ட தினகரன்! - பரிசுப் பெட்டி சின்னத்தைத் தேர்வு செய்த பின்னணி

`பரிசுப் பெட்டிக்குள் ஏதாவது வைத்துக் கொடுத்துவிடுவார்கள் என விமர்சனம் செய்ய மாட்டார்களா தலைவரே?' எனக் கேட்க, `யானைச் சின்னம் கொடுத்தாலும் டேமேஜ் செய்வதற்கு ஒரு குரூப் இருக்கத்தான் செய்யும்’ எனக் கூறியிருக்கிறார் தினகரன்.

ஆஸ்தான ஜோதிடர்களிடம் நேரம் கேட்ட தினகரன்! - பரிசுப் பெட்டி சின்னத்தைத் தேர்வு செய்த பின்னணி

ரிசுப் பெட்டி சின்னத்தைத் தினகரனுக்கு ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். `நேற்று இரவே சின்னம் தொடர்பான உத்தரவு வந்துவிட்டாலும், ஜோதிடர்களிடம் ஆலோசித்துவிட்டு இன்று காலை அறிவிப்பை வெளியிடச் செய்தார் தினகரன்’ என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். 

தினகரன்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளைவிட, சிறிய கட்சிகள்தான் தேர்தல் ஆணையத்தால் அதிகம் பாதிக்கப்பட்டன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னம் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், தற்போது ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தார் திருமாவளவன். அதற்கு மாறாக, பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க-வுக்கும் இதே சிக்கல் எழவே, உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் வைகோ. இந்த நிலையில், மீண்டும் குக்கர் சின்னத்தைக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். `தனிக் கட்சியாகப் பதிவு செய்யப்படாத கட்சிக்குப் பொதுச் சின்னம் வழங்கக் கூடாது’ என அ.தி.மு.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

தினகரன்

இதே கருத்தை வெளிப்படுத்திய தேர்தல் ஆணையமும், `பதிவு செய்யப்படாத கட்சிக்குத் தனிச்சின்னம் வழங்குவது தேவையற்ற முன்னுதாரணத்தை உருவாக்கும்’ எனக் கூறி மறுத்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் தரப்பினர், `நாங்கள் தனி அணியாக இயங்கி வருகிறோம். எங்களுக்கு ஏற்கெனவே குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. குக்கர் சின்னம் வழங்காவிட்டால், ஏதாவது ஒரு பொதுச் சின்னம் ஒதுக்குங்கள். தனிக் கட்சியாகப் பதிவு செய்யத் தயார். ஆனால், கால அவகாசம் இல்லை’ எனத் தெரிவித்தனர். இந்த வழக்கில், `குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது’ எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், `டி.டி.வி.தினகரன் அணிக்கு பொதுவான சின்னத்தை வழங்க வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

பரிசுப் பெட்டி சின்னம்

இந்த நிலையில், இன்று காலை அ.ம.மு.க-வுக்குப் பரிசுப் பெட்டிச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக, இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ``தனிச் சின்னம் அடங்கிய பட்டியலை எங்களுக்கு அனுப்பித் தேர்வு செய்யக் கோரியது தேர்தல் ஆணையம். அதில், பரிசு பெட்டகத்தைத் தேர்வு செய்தோம். ஜெயலலிதா அறிவித்த தாய் சேல நலப் பெட்டகம் நினைவாக இந்தப் பரிசுப் பெட்டகத்தை தேர்வு செய்தேன். மிகப் பெரிய போராட்டத்துக்குப் பிறகு இந்தச் சின்னம் கிடைத்துள்ளது. இதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களுக்குச் சின்னம் கிடைக்கக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க பெரிய அளவில் போராடியது. அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை’’ என்றார் இயல்பாக. 

பரிசுப் பெட்டி

`பரிசுப் பெட்டியைத் தேர்வு செய்ததன் பின்னணியில் என்ன நடந்தது?’ என அ.ம.மு.க நிர்வாகிகளிடம் கேட்டோம். ``தேர்தல் ஆணையம் எங்களுக்கு 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்தது. `இந்த 36 சின்னங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து எங்களுக்கு அனுப்புங்கள்’ என ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், பரிசுப் பெட்டி சின்னத்தைத் தேர்வு செய்தார் டி.டி.வி. அப்போது அருகில் இருந்த ஆதரவாளர் ஒருவர், `பரிசுப் பெட்டிக்குள் ஏதாவது வைத்துக் கொடுத்துவிடுவார்கள் என விமர்சனம் செய்ய மாட்டார்களா தலைவரே?’ எனக் கேட்க, `யானைச் சின்னம் கொடுத்தாலும் டேமேஜ் செய்வதற்கு ஒரு குரூப் இருக்கத்தான் செய்யும். இந்தச் சின்னம் அனைத்து இடங்களுக்கும் சென்று சேரும். இதையே தேர்வு செய்வோம்’ என உற்சாகத்தோடு கூறியிருக்கிறார் தினகரன்.

இதன் பிறகு, ஆஸ்தான ஜோதிடர்களிடம் பேசியவர், `இப்போது யாருக்கும் இந்தத் தகவலைச் சொல்ல வேண்டாம். காலை 7 மணிக்குத் தெரிவித்துவிடுங்கள்’ எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். நேற்று இரவு 9.30 மணிக்குத் தேர்தல் ஆணையத்திலிருந்து உத்தரவு வந்தது. உடனடியாக வெளியில் சொல்லாமல் நல்ல நேரம் பார்த்து ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். குக்கர் சின்னத்தைப்போல பரிசுப் பெட்டகம் அனைத்துத் தரப்பினருக்கும் எளிதில் சென்று சேரும் என உறுதியாக நம்புகிறோம்’’ என்றார் மகிழ்ச்சியோடு.