``தேர்தலைவிட ஆறுதல் முக்கியம்" - கோவை சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்த கமல்ஹாசன் | Kamalhaasan met Coimbatore child family

வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:57 (30/03/2019)

``தேர்தலைவிட ஆறுதல் முக்கியம்" - கோவை சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்த கமல்ஹாசன்

தேர்தலைவிட ஆறுதலே முக்கியம் என்று கோவை பாலியல் கொலை செய்யப்பட்ட பெற்றோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்ன பிறகு கமல்ஹாசன் கூறினார்.

கமல்ஹாசன்

கோவை துடியலூர் அருகே ஏழு வயதுச் சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். பிரேதப் பரிசோதனை முடிவில் அந்தக் குழந்தை பாலியல் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும், தனிப்படை அமைத்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், ஐந்து நாள்களாகியும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இன்று சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், ``வழக்கு விசாரணை மிகவும் நிதானமாகச் சென்றுகொண்டிருப்பதாக சிறுமியின் பெற்றோர் நினைக்கின்றனர். காவல்துறையினர் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  மேலிடம் என்ன சொல்கிறதோ அதைத்தானே இவர்கள் செய்வார்கள். இது அதிகளவில் பேசப்பட வேண்டிய பிரச்னை. அதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். இதுதொடர்பாக சந்தித்துப் பேச மேற்கு மண்டல ஐ.ஜி-யைச் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் தேர்தல் பணிகளில் பிஸியாக இருப்பதாகக் கூறுகிறார். நாங்களும் தேர்தல் பணிகளில்தான் இருக்கிறோம். மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் நாங்களும் களம் காண்கிறோம். பல இடங்களில் தேர்தல் ஆணையம் எங்களை தேர்தல் பணி செய்யவிடாமல் தடுக்கிறது. தேர்தல் முக்கியம்தான். தேர்தலைவிட ஆறுதல்தான் இந்தக் குடும்பத்துக்கு மிகவும் முக்கியம். பொள்ளாச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடப்பது அரசின் மெத்தனத்தைக் காட்டுகிறது. அனைத்து துறைகளும் ஊழல்களில் நிரம்பியுள்ளன. இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் அந்த ஆய்வுகளின் உண்மைத் தன்மையை அதிகரிக்கிறது. ஒரு பெண் குழந்தை, வீட்டிலிருந்து 20 அடி தொலைவில் கூட விளையாட முடியாத மோசமான சூழ்நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் அப்படித் தகவல் சொல்லி உள்ளூர்க்காரர்கள் காசு வாங்குவதைவிட அவமானம் வேறு ஏதுமில்லை. குற்றவாளிகளை தாங்களாகவே மக்கள் காட்டிக் கொடுக்க வேண்டும்' என்றார்.