தேர்தலில் போட்டியிட முடியாது! - ஹர்திக் படேலின் தண்டனையை ரத்துசெய்ய மறுத்த நீதிமன்றம் | Setback for Hardik Patel as Gujarat HC refuses to stay conviction

வெளியிடப்பட்ட நேரம்: 22:22 (29/03/2019)

கடைசி தொடர்பு:11:03 (30/03/2019)

தேர்தலில் போட்டியிட முடியாது! - ஹர்திக் படேலின் தண்டனையை ரத்துசெய்ய மறுத்த நீதிமன்றம்

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி ஹர்திக் படேல் தொடர்ந்த வழக்கை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், அவர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. 

ஹர்திக் படேல்

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தாருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி 24 வயதில் போராட்டத்தில் இறங்கி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஹர்திக் படேல். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த இவரது போராட்டத்தால் குஜராத் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. அவ்வாறு நடந்த வன்முறைச் சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர். 

போராட்டத்தின்போது, விஸ்நகர் தொகுதி சட்டமன்ற பா.ஜ.க உறுப்பினர் ருஷிகேஷ் படேலின் அலுவலகம் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஹர்திக் உட்பட 18 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விஸ்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஹர்திக் படேல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அவரது தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படாமல் இருந்தது. 

ஹர்திக் படேல்

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக் படேல் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேர்தலில் போட்டியிட இருப்பதால், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று ஹர்திக் படேல் கோரியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஹர்திக் படேலின் கோரிக்கைக்கு குஜராத் அரசு தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ஹர்திக் படேலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய குஜராத் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து, அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் ஹர்திக் படேல் போட்டியிடுவது சிக்கலாகியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன்படி தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு ஏப்ரல் 4-ம் தேதி கடைசி நாள் என்பதால், அதற்குள் ஹர்திக் படேல் உச்ச நீதிமன்றத்தை நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.