`துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் திடீர் சோதனை!’ - அதிகாரிகளுடன் தி.மு.க-வினர் வாக்குவாதம் | Officials Raid at DMK Duraimurugan' s katpadi house

வெளியிடப்பட்ட நேரம்: 01:19 (30/03/2019)

கடைசி தொடர்பு:11:03 (30/03/2019)

`துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் திடீர் சோதனை!’ - அதிகாரிகளுடன் தி.மு.க-வினர் வாக்குவாதம்

காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் அதிகாரிகள் குழு சோதனை நடத்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமானவரித் துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் அந்த அதிகாரிகள் முரண்பட்டுப் பேசியதால், தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தவந்த அதிகாரிகள்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து, தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகனின் வீட்டுக்கு 29-ம் தேதி நள்ளிரவு மனோஜ், முரளிதரன், சதீஷ் என்கிற மூன்று பேர் கொண்ட குழுவினர் ‘வருமானவரித் துறை அதிகாரிகள்’ என்றுகூறி, சோதனை நடத்த வந்தனர். அப்போது, துரைமுருகன் வீட்டில் இல்லை. அவர் வருவதற்குள், வீட்டில் இருந்தவர்களின் அனுமதியுடன் அந்த அதிகாரிகள் ஹாலில் சென்று அமர்ந்திருந்தனர். வீட்டிற்கு வந்த துரைமுருகனிடம், தங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் என்றும், சோதனை நடத்தப்போகிறோம் என்றும் அந்தக் குழு கூறியது. உடனடியாக, தன்னுடைய வழக்கறிஞர்களை துரைமுருகன் வரவழைத்தார்.

துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தவந்த அதிகாரிகள்.

அந்தக் குழுவிடமிருந்து, வழக்கறிஞர்கள் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்த்தனர், அதில், ‘அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பார்வையாளர்கள்’’ என்று முரண்பட்டு குறிப்பிடப்பட்டிருந்ததால், வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். அதன்பிறகு, வருமானவரித் துறை அதிகாரி விஜய் தீபன் அங்கு வந்தார். `என்னுடைய தலைமையிலான குழுவினர்தான் அவர்கள்’ என்று வழக்கறிஞர்களிடம் கூறினார். ஆனாலும், துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்த வழக்கறிஞர்கள் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து வாக்குவாதம்செய்தனர். இதுபற்றி வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், `மத்திய-மாநில அரசுகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. துரைமுருகன் உடல்நிலை மோசமாக இருக்கிறார். சதித் திட்டம் தீட்டி அவரை, வேண்டுமென்றே தொந்தரவு செய்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் சோதனையை நாங்கள் முறியடிப்போம்’’ என்றனர். தி.மு.க-வினர் ஏராளமானோர் துரைமுருகன் வீட்டு முன்பு திரண்டுள்ளனர். போலீஸாரும் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.